சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மத்திய அரசு செய்த தவறு.. தமிழக அரசு தான் அதை சரி செய்ய வேண்டும்.. ராமதாஸ் அதிரடி அறிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: நெல்லுக்கான கொள்முதல் விலையை நிர்ணயிப்பதில் மத்திய அரசு செய்த தவறை தமிழக அரசு தான் சரி செய்ய வேண்டும் என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் வழியுறுத்தியுள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் 2019-20 ஆம் ஆண்டுக்கால நெல் கொள்முதல் பருவம் தொடங்கிவிட்ட நிலையில், அடுத்த சில நாட்களில் கொள்முதல் விலைகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. நெல் கொள்முதல் விலைகளை நிர்ணயிக்கும் போது நெல்லுக்கான உற்பத்திச் செலவு உள்ளிட்ட கள எதார்த்தங்களை அரசு கருத்தில் கொண்டால் மட்டும் தான் உழவர்களின் துயரங்களை ஓரளவாவது துடைக்க முடியும்.

PMK founder Ramadoss says purchase price of paddy should be increase

குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் குறித்த காலத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை என்பதால் தொடர்ந்து 8-ஆவது ஆண்டாக இந்த ஆண்டும் காவிரிப் படுகையில் முழு அளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படவில்லை. எனினும், நிலத்தடி நீர் ஆதாரங்களைப் பயன்படுத்தி காவிரி பாசன மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விளைவிக்கப்பட்ட குறுவை நெல்லை அறுவடை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் கணிசமான அளவில் குறுவை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் நெல்லுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை மத்திய அரசு கடந்த ஜூலை மாதமே அறிவித்து விட்டது. சாதாரண வகை நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 1750 ரூபாயிலிருந்து 1815 ரூபாயாகவும், சன்ன வகை நெல்லுக்கான கொள்முதல் விலை 1770 ரூபாயில் இருந்து 1835 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.200 உயர்த்திய மத்திய அரசு, இம்முறை அதில் மூன்றில் ஒரு பங்கான ரூ.65 மட்டும் தான் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது.

அதிமுகவில் மீண்டும் வாய்ப்பூட்டு... ஜெ.பாணியை கடைபிடிக்க ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ்.முடிவுஅதிமுகவில் மீண்டும் வாய்ப்பூட்டு... ஜெ.பாணியை கடைபிடிக்க ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ்.முடிவு

நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஓரளவாவது லாபம் கிடைக்க வேண்டுமானால், நெல்லுக்கான உற்பத்தி செலவுடன் 50% லாபம் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது தான் எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரை ஆகும். அதை செயல்படுத்த வேண்டும் என பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வந்தன. எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை கடந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருவதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், கள எதார்த்தத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத செலவுக் கணக்குகளின் அடிப்படையில் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு நிர்ணயித்ததால், அது உழவர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு பயனளிக்கவில்லை.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வகுத்துள்ள நெல் சாகுபடி செலவு கணக்கீட்டு விதிகளின்படி நடப்பாண்டில் ஒரு குவிண்டால் நெல் உற்பத்தி செய்ய ரூ.2091 செலவாகிறது. ஆனால், நெல் உற்பத்திச் செலவுடன் 50% லாபமும் சேர்த்து மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.1815 தான் என்பதிலிருந்தே, மத்திய அரசின் விலைக்கும் உண்மை நிலைக்கு எவ்வளவு இடைவெளி என்பதை அனைவராலும் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

நெல்லுக்கான கொள்முதல் விலையை நிர்ணயிப்பதில் மத்திய அரசு செய்த தவறை தமிழக அரசு தான் சரி செய்ய வேண்டும். மத்திய அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை உழவர்களுக்கு போதுமானதாக இருக்காது என்பதால், மத்திய அரசின் விலையுடன் தமிழக அரசு அதன் பங்குக்கு ஒரு தொகையை ஊக்கத் தொகையாக சேர்த்து வழங்கும். அந்த தொகை உழவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இருக்க வேண்டும். ஆனால், எனக்கு நினைவுக்கு தெரிந்த நாளில் இருந்தே சன்னரக நெல்லுக்கு ரூ.70, சாதாரண ரக நெல்லுக்கு ரூ.50 ஊக்கத்தொகை வழங்குவது தமிழக அரசின் கடமையாகி விட்டது. பத்தாண்டுகளுக்கும் மேலாக ஊக்கத்தொகை உயர்த்தப்படாததால், அது உழவர்களுக்கு கை கொடுக்கும் ஒன்றாக இல்லாமல், வழக்கமான சடங்குகளில் ஒன்றாகிவிட்டது.

நடப்பாண்டில் நெல்லுக்கான உற்பத்திச் செலவு குவிண்டாலுக்கு ரூ.2091 என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அத்துடன் 50% லாபம், அதாவது ரூ.1046 சேர்த்து கொள்முதல் விலையாக ரூ.3137 வழங்கினால் தான் உழவர்களுக்கு கட்டுபடியாகும். மாறாக வழக்கம்போல ஊக்கத்தொகை என்ற பெயரில் ரூ.70 மட்டும் வழங்கினால், ஊக்கத்தொகை என்ற கருத்தாக்கம் உருவாக்கப்பட்டதன் நோக்கமே சிதைந்து விடும். எனவே, உழவர்களுக்கு குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.3,000 கிடைக்கும் வகையில் ஊக்கத்தொகையை அதிகரித்து, நியாயமான கொள்முதல் விலையை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
PMK founder of DR Ramadoss has said that the Government of Tamil Nadu should correct the mistake made by the central government in the purchase price of paddy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X