"தமிழகத்தில் சமூகநீதியை வலுப்படுத்த வேண்டும்.. அது நமது கடமை!" பாமக நிறுவனர் ராமதாஸ்
சென்னை: தமிழ்நாட்டில் சமூகநீதியை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஏராளமாக உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் வி.பி சிங்கின் 92ஆவது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பல்வேறு அரசியல் தலைவர்களும் வி.பி சிங்கின் சாதனைகளைக் குறிப்பிட்டு அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர்.
முதலமைச்சர் ஸ்டாலினை சீண்டிய 2 மாஜி மந்திரிகள்! பாய்ச்சலுக்கு தயாராகும் திமுக! இனி தான் டிவிஸ்ட்!
வி.பி சிங் பிரதமராக இருந்த சமயத்தில் தான் நீண்ட காலமாகக் கிடப்பில் இருந்த மண்டல் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தப்பட்டது.

ராமதாஸ்
இதன் காரணமாக அவரை சமூக நீதி காவலர் என்றே பலரும் போற்றி வருகின்றனர். கடந்த 2008ஆம் ஆண்டு ரத்த புற்றுநோய் காரணமாக வி.பி. சிங் உயிரிழந்தார். இன்று அவரது 91ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டரில் வி.பி.சிங்கை நினைவு கூர்ந்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "சாமானியர்களுக்கான சமூகநீதியைக் காக்க ஆட்சி மகுடத்தை உதறித் தள்ளிய முன்னாள் பிரதமர் விபி சிங் அவர்களின் 92வது பிறந்தநாள் இன்று. இந்தியாவில் சமூக நீதியைப் பாதுகாக்க அவர் செய்த தியாகங்களும், அவர் காட்டிய உறுதிப்பாடும் ஈடு இணையற்றவை!

தமிழகத்தில் சமூக நீதி
தமிழகத்தில் சமூகநீதியை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஏராளமாக உள்ளன. அவற்றைச் செய்து முடிக்க வேண்டியது நமது கடமை. அதற்கான சமூகநீதி பயணத்தை இன்னும் வேகமாக முன்னெடுக்கச் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிறந்த நாளில் உறுதியேற்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்
அதேபோல பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவரான சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் 92-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. மண்டல் ஆணையத்தின் பரிந்துரையின் ஒரு பகுதியை ஏற்று மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதால் தான், இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் வி.பி.சிங் இணையற்ற தலைவராக உயர்ந்து நிற்கிறார். மத்திய அரசு வேலை வாய்ப்பில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை வி.பி.சிங் நடைமுறைப்படுத்தியதால் தான், பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் முயற்சியால் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அந்த இட ஒதுக்கீட்டை நீட்டிக்க முடிந்தது.

அடித்தளம்
பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் சட்டப் போராட்டத்தால் மருத்துவப் படிப்புக்கான அகில இந்தியத் தொகுப்பிலும் 27 சதவீத இட ஒதுக்கீடு சாத்தியமானதற்கு வி.பி.சிங் அமைத்துக் கொடுத்த அடித்தளம் தான் காரணம். வி.பி.சிங் மட்டும் மண்டல் ஆணைய அறிக்கையைச் செயல் படுத்தியிருக்காவிட்டால், இன்று வரை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குத் தேசிய அளவில் இட ஒதுக்கீடு கிடைத்திருக்க வாய்ப்பில்லை. மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்ததுடன் வி.பி. சிங் ஓய்ந்து விடவில்லை.

இட ஒதுக்கீடு
அது செயல் படுத்தப்படுவதற்காகவும் போராடினார். 27 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் அதை நரசிம்ம ராவ் அரசு செயல்படுத்தத் தாமதித்ததால், இட ஒதுக்கீடு செயலாக்கப்படும் வரை டெல்லிக்குள் நுழைய மாட்டேன் என்று கூறி தலைநகரை விட்டு வி.பி.சிங் வெளியேறினார். அவரது இந்த போராட்டத்தால் அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாக 27 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட்டது. வி.பி.சிங் மட்டும் 27 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாமல் இருந்திருந்தால், உயர் வகுப்பு மக்களின் முழுமையான ஆதரவுடன் அடுத்து வந்த தேர்தல்களிலும் வெற்றி பெற்று பிரதமராகத் தொடர்ந்திருக்கலாம்.

பாடம்
ஆனால், ஆட்சிக் கணக்கைப் போடாமல், சமூகநீதிக் கணக்கைப் போட்டதால் தான் அவர் சமூகநீதிக் காவலராகப் போற்றப்படுகிறார். சமூகநீதியை நிலை நிறுத்துவதற்காகப் போராடிய வி.பி.சிங்கின் வரலாற்றை இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். அதற்கு வசதியாக அவரது வரலாறு தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் பாடமாகச் சேர்க்கப்பட வேண்டும். அத்துடன் சென்னையில் வி.பி.சிங்குக்கு முழு உருவச் சிலையுடன் கூடிய பிரமாண்ட மணி மண்டபமும் அமைக்கப் பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.