• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தனிப்பெரும் கட்சியாக உருவெடுப்போம்.. பாமக பொதுக்குழு சூளுரை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தனிப்பெரும் கட்சியாக உருவெடுப்போம் என்று பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இணையவழியில் நேற்று மாலை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: தமிழ்நாடு மிகவும் நெருக்கடியான காலகட்டத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. வளர்ச்சி, உட்கட்டமைப்பு மேம்பாடு, பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டிப் போட்டுக் கொண்டு முன்னேறுவதற்கான திறனும், வளங்களும் தமிழ்நாட்டிற்கு உண்டு. ஆனாலும், தமிழ்நாடு அதன் திறனுக்கேற்ற முன்னேற்றத்தை இன்னும் எட்டிப்பிடிக்கவில்லை.

இந்த 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. டெல்டா மாவட்டங்களுக்கு எப்போது மழை? வானிலை மையம் தகவல்இந்த 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. டெல்டா மாவட்டங்களுக்கு எப்போது மழை? வானிலை மையம் தகவல்

தமிழ்நாடு வளர்ச்சியடையவே இல்லையா? என்றால், வளர்ச்சியடைந்திருக்கிறது என்பது உண்மை தான். ஆனால், அந்த வளர்ச்சி போதுமானது அல்ல என்பது தான் அனைவரும் உணர வேண்டியது ஆகும். வளர்ச்சிக்கான போட்டியில் தமிழ்நாடு போட்டியிட வேண்டியது உத்தரப்பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களுடன் அல்ல. மாறாக, சிங்கப்பூர், ஜப்பான், கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுடனும், ஐரோப்பிய நாடுகளுடனும் தான். தமிழகம் அதிக வளர்ச்சியடையவில்லை என்பதை நியாயப்படுத்துவதற்காக, தமிழ்நாட்டை அனைத்து நிலைகளிலும் அதைவிட குறைந்த மாநிலங்களுடன் ஒப்பிட்டு மனநிறைவு அடைந்து கொள்வது போலியான மகிழ்ச்சி ஆகும். இது தமிழ்நாட்டு மக்களுக்கு பயன் அளிக்காது.

கவலை தரும் நிதி நிலை

கவலை தரும் நிதி நிலை

தமிழ்நாட்டின் இன்றைய நிலை மிகவும் கவலையளிப்பதாகவே உள்ளது. தமிழக அரசின் நேரடிக் கடன், பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ஆகியவை ரூ.10 லட்சம் கோடியை நெருங்கிக் கொண்டு இருக்கின்றன. தமிழக அரசும் பொதுத்துறை நிறுவனங்களும் வாங்கிய கடனுக்கான ஒவ்வொரு நாளும் கட்டப்படும் வட்டியின் மதிப்பு மட்டும் ரூ.200 கோடிக்கும் அதிகமாகும். நான்கு பேர் கொண்ட ஒவ்வொரு குடும்பத்தின் பெயரிலும் ரூ. 5 லட்சத்திற்கும் அதிகமான கடன் வாங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள, மூலதன கணக்கில் வராத, திட்டங்களை செயல்படுத்துவதற்காக மட்டும் ரூ. 3 லட்சம் கோடிக்கும் கூடுதலான தொகை அரசுக்கு தேவைப்படுகிறது.

தொலைநோக்கு பார்வை இல்லையே..

தொலைநோக்கு பார்வை இல்லையே..

தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள இத்தகைய பொருளாதார மற்றும் வளர்ச்சி கருமேகங்கள் உடனடியாக அகல்வதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. அதற்கான காரணம்.... தமிழக அரசு நிர்வாகத்தில் தொலைநோக்குப் பார்வை இல்லாதது தான். தமிழ்நாடு அதன் திறனுக்கும், தகுதிக்கும் இணையான வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதை உறுதி செய்யாவிட்டால், தமிழ்நாட்டு மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை அமைக்க முடியாது; மாறாக, இருள் நிறைந்த எதிர்காலத்தை தான் வழங்க முடியும். தமிழ்நாடு உலக நாடுகளுடன் போட்டிப்போட்டு வளர்ச்சியடைவதற்கான தடைகளை அகற்றி, அதிவேக வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான செயல்திட்டங்களும், அரசியல் துணிச்சலும் பாட்டாளி மக்கள் கட்சியிடம் உள்ளன. பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த 19 ஆண்டுகளாக தயாரித்து, மக்கள் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிழல் நிதி அறிக்கையில் இடம் பெற்றுள்ள திட்டங்களில் 50 விழுக்காட்டை செயல்படுத்தியிருந்தால் கூட தமிழ்நாடு அதிவேக வளர்ச்சிப் பாதையில் வெற்றி நடை போட்டிருக்கும்.

ஆட்சி கனவை நனவாக்குவோம்?

ஆட்சி கனவை நனவாக்குவோம்?

நிழல் நிதிநிலை அறிக்கையில் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக இன்னும் ஏராளமான யோசனைகளையும், செயல்திட்டங்களையும் பாட்டாளி மக்கள் கட்சி தயாரித்து வைத்துள்ளது. அவை செயல்படுத்தப்பட்டால் சிங்கப்பூர், ஜப்பான், கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் போட்டிப் போட்டு தமிழ்நாடு வளர்வதை உறுதி செய்ய முடியும். பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிக்கான செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் நிலைக்கு பாட்டாளி மக்கள் கட்சி முன்னேற வேண்டும். பா.ம.கவை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று முழக்கமிடுவதால் மட்டும் அது சாத்தியமாகிவிடாது. அதற்கான செயல் திட்டங்களை வகுத்து கடுமையாக உழைத்தால் மட்டும் தான் ஆட்சிக் கனவு நனவாகும்.

கட்சியை வலிமைப்படுத்துவோம்

கட்சியை வலிமைப்படுத்துவோம்

வலிமையான கட்சிகள் தான் வலிமையான ஜனநாயகத்திற்கு அடித்தளம் அமைக்கும். அந்த வகையில் ஜனநாயகம் தழைப்பதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி மிகவும் வலிமையானதாக மாறுவது அவசியமாகும். இத்தகைய சூழலில் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பாட்டாளி மக்கள் கட்சியை வலிமைப் படுத்துவது தான் முதன்மையானப் பணி என்று இந்தப் பொதுக்குழு கருதுகிறது; அதற்காக பா.ம.க.வின் அனைத்து நிலை நிர்வாகிகளும் கடுமையாக உழைப்பதற்காகவும் இப்பொதுக்குழு உறுதியேற்கிறது.

பல்வேறு பணிக்குழுக்கள்

பல்வேறு பணிக்குழுக்கள்

பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்துவதற்காக மக்களிடம் செல்வாக்கு பெற்ற, மக்களுக்காக உழைக்கக்கூடியவர்களை கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்களாக நியமித்தல், கட்சியின் நிர்வாக அமைப்புகளில் மாற்றங்களைச் செய்தல், கட்சித் தலைமை தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளுதல், மக்கள் சந்திப்புக்கான பல்வேறு இயக்கங்களை நடத்துதல், மக்களின் பிரச்சினைகளுக்கான போராடுதல், கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான உதவிகளை செய்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்திட்டங்களை டாக்டர் ராமதாஸ் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். பல்வேறு பணிக்குழுக்களை அமைத்து அந்த செயல்திட்டங்களை செயல்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கைகளை பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொள்ளும். தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும் அளவுக்கு பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்துவதற்கான அனைத்து திட்டங்களை செயல்படுத்துவதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் காட்டும் வழியில் கடுமையாக உழைக்க பா.ம.க. சிறப்பு பொதுக்குழு உறுதியேற்றுக் கொள்கிறது. இவ்வாறு பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

English summary
PMK General Body vows to form Govt. in Tamilnaadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X