ஆயிரம் முன்பகை இருந்தாலும்.. அதற்காக உயிருடன் சிறுமியை கொளுத்துவதா.. ராமதாஸ் ஆவேசம்
சென்னை: "ஜெயஸ்ரீயை முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றது அதிர்ச்சியளிக்கிறது. ஆயிரம் முன்பகை இருந்தாலும் மனிதமும், இதயமும் உள்ளவர்களால் வாழ வேண்டிய சிறுமியை உயிருடன் எரிக்கும் குரூரத்தை அரங்கேற்ற முடியாது. இதற்கு காரணமானவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்கப்பட வேண்டும். அது இத்தகைய கொடியவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்" என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ளது சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த 15 வயது ஜெயஸ்ரீ என்ற சிறுமியை முன் பகை காரணமாக 2 பேர் தீ வைத்து எரித்தனர்.

அவரது அலறல் சத்தம் கேட்டு, நெருப்பில் வெந்து கொண்டிருந்த ஜெயஸ்ரீயை மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்... தீவிரமான சிகிச்சையும் தரப்பட்டது.. அதற்குள் தகவலறிந்து விழுப்புரம் மாவட்ட எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.. ஜெயஸ்ரீயிடம் நேரிலேயே விசாரணையும் நடத்தினர்.
"என் அப்பன் எங்கே".. வெந்து போன உடலுடன் கதறிய ஜெயஸ்ரீ.. மனதை உலுக்கும் விழுப்புரம் பயங்கரம்
அப்போது, வீட்டில் தனியாக இருந்த தன்னை முருகன், கலியபெருமாள் 2 பேரும் வாயில் துணியை அடைத்து, கை, கால்களை கட்டிப்போட்டுவிட்டு, பெட்ரோலும் ஊற்றி கொளுத்திவிட்டு சென்றதாக சொன்னார்.. ஜெயஸ்ரீ சொன்ன வாக்குமூலத்தை விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் அருண்குமார் பதிவு செய்து கொண்டார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முருகன், கலியபெருமாளை போலீசார் கைது செய்தனர். இதனிடையே 95 சதவீதம் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுமி பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜெயஸ்ரீயின் வாக்குமூலத்தில் தெரிவித்த முருகன் என்பவர் அதிமுகவை சேர்ந்தவர் என தெரிகிறது.. முன்னாள் கவுன்சிலராகவும் இருந்துள்ளாராம்.. அதேபோல கலியபெருமாள் என்பவர் அதிமுகவின் கிளைக் கழகச் செயலாளர் என்பதால் இந்த சம்பவம் பெருத்த அதிர்ச்சியை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தி வருகிறது..

முன்விரோதம் காரணமாக இது நடந்திருப்பினும், கொலை செய்தது அதிமுக பிரமுகர்கள் என்பதால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல தரப்பிலும் வலியுறுத்தப்பட்டும் வருகிறது. அந்த வகையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
அதில், "விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூரை அடுத்த சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது. இது கொடூரமான செயல். ஜெயஸ்ரீயை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்"
"என் அப்பன் எங்கே".. வெந்து போன உடலுடன் கதறிய ஜெயஸ்ரீ.. மனதை உலுக்கும் விழுப்புரம் பயங்கரம்
"ஆயிரம் முன்பகை இருந்தாலும் மனிதமும், இதயமும் உள்ளவர்களால் வாழ வேண்டிய சிறுமியை உயிருடன் எரிக்கும் குரூரத்தை அரங்கேற்ற முடியாது. இதற்கு காரணமானவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்கப்பட வேண்டும். அது இத்தகைய கொடியவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.