மாற்றம்.. முன்னேற்றம்.. இளைஞரணி தலைவர் டூ தலைவர் - யார் இந்த அன்புமணி?
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
சென்னை அருகே திருவேற்காட்டில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக பாமக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி ராமதாஸை அக்கட்சியின் முன்னாள் தலைவர் ஜி.கே.மணி கவுரவித்தார்.
இந்த நிலையில் அக்கட்சியின் பொதுக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய தலைவர் அன்புமணி ராமதாஸ் குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிர்ந்த அரங்கம்! தலைவரானார் அன்புமணி! உற்சாகமான பாட்டாளிகள்! மேடையில் அரங்கேறிய சுவாரசிய நிகழ்வுகள்

மாற்றம்.. முன்னேற்றம்.. அன்புமணி
2016 சட்டமன்றத் தேர்தலில் மாற்றம்.. முன்னேற்றம்.. அன்புமணி என்ற முழக்கத்துடன் தனியாக போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி படுதோல்வியையே தழுவியது. அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களிலும் தோல்வியே பாமகவுக்கு விடையாக கிடைத்தது. பின் வந்த தேர்தல்களில் அதன் வாக்கு வங்கியும் சரிந்தது. இந்த நிலையில்தான், நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 5 இடங்களில் பாமக வெற்றுபெற்றது.

பாமக 2.O
இதனை தொடர்ந்து தொண்டர்கள் சந்திப்பை ராமதாஸும், அன்புமணியும் அடுத்தடுத்து நடத்தி கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டது பாமக. தற்போது அரசியல் சார்ந்த விவகாரங்களில் எந்த கட்சிக்கும் சார்பு நிலையின்றி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அடுத்தமுறை பாமக தலைமையில் ஆட்சியமைய வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு செயலாற்றி வரும் பாமக, 2.O என்ற திட்டத்தை இன்னும் சிறப்பாக கொண்டு செல்ல அன்புமணியை தலைவராக்கி இருக்கிறது.

பாமக தலைவர் அன்புமணி
அதில் "பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக யாரை அமர்த்தலாம் என்று தலைமை நிலைய நிர்வாகிகள் மட்டத்தில் கலந்தாய்வு மேற்கொண்ட போது, பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக, தற்போதைய இளைஞரணித் தலைவரும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் மேனாள் அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த விருப்பமாகவும், வேண்டுகோளாகவும் இருந்தது.

4 சர்வதேச விருதுகள்
இந்திய வரலாற்றில் இளம் வயதில் மத்திய கேபினட் அமைச்சராக பொறுப்பேற்றவர். உலகத்தின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான தேசிய ஊரக சுகாதார இயக்கத்தை இந்தியாவில் செயல்படுத்தியவர். உயிர் காக்கும் 108 அவசர ஊர்தி சேவையை அறிமுகம் செய்தவர். புகையிலை ஒழிப்பு மற்றும் போலியோ நோய் ஒழிப்புக்காக 4 சர்வதேச விருதுகளையும், இரு தேசிய விருதுகளையும் வென்றவர்.

மன்மோகன் சிங், பான் கி மூனிடம் பாராட்டு
மிகவும் இளைய வயதில் உலக சுகாதார அவையை தலைமையேற்று நடத்தியவர். 50 ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனையை ஐந்தாண்டுகளில் செய்தவர் என்று அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களாலும் மருத்துவத் துறையின் நடமாடும் என்சைக்ளோபீடியா என்று அப்போதைய மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி அவர்களாலும் பாராட்டப்பட்டவர். ஐ.நா. தலைமை செயலாளராக இருந்த பான்-கி-மூன் அவர்களே மரபுவரிசையை (Protocol) மீறி, அலுவலகத்திற்கு தேடி வந்து பாராட்டிய பெருமைக்குரியவர்.

சமூக நீதி காத்தவர்
மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பட்டியலினம் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு காலம் காலமாக மறுக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை வழங்கி சமூக நீதி காத்தவர் என ஏராளமான பெருமைகளுக்கும், சாதனைகளுக்கும் சொந்தக்காரரான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டால், அவர் கட்சியை புதிய உயரங்களுக்கு அழைத்துச் செல்வார் என்று இந்தப் பொதுக்குழு நம்புகிறது." எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.