• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கொரோனா மையங்களாகும் மதுக்கடைகள் திறப்பைக் கண்டித்து பா.ம.க. நாளை மறுநாள் போராட்டம்: டாக்டர் ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா மையங்களாக மாறும் மதுபான கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் வரும் 17-ந் தேதி போராட்டம் நடத்துவர் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் நடைபெறுவது மக்கள் நலனுக்கான அரசு அல்ல... மது ஆலைகளின் நலனுக்கான அரசு தான் என்பது நேற்று நிரூபிக்கப்பட்டு விட்டது. அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் பல லட்சக்கணக்கான மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் போது, அவர்களின் குடும்பங்களில் மீதமுள்ள உடமைகளையும் பறிக்கும் நோக்குடன் மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பது மன்னிக்கவே முடியாததாகும்.

இணையதள சேவையை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.. ஜி 7 நாடுகள், இந்தியா வெளியிட்ட கூட்டறிக்கை இணையதள சேவையை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.. ஜி 7 நாடுகள், இந்தியா வெளியிட்ட கூட்டறிக்கை

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் மக்களை இரு வழிகளில் மிக மோசமாக சூறையாடியிருக்கிறது. முதலாவது மனிதர்களைத் தாக்கி நோய்வாய்ப்படுத்துவதன் மூலமான உடல்நலத் தாக்குதல்; அடுத்தது மனிதர்களுக்கான வாழ்வாதாரங்களை முடிந்தவரை அழித்து வாழ முடியாமல் முடக்குவது ஆகும்.

கொரோனாவைவிட கொடூரமானது

கொரோனாவைவிட கொடூரமானது

இந்த இரு வகை தாக்குதல்களையும் இன்னும் கொடூரமாக்கும் வலிமை மதுவுக்கு உண்டு. அதனால், குறைந்தபட்சம் கொரோனாவின் பிடியிலிருந்து தமிழகம் மீளும் வரையிலாவது மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட மக்கள் நலனில் அக்கறை உள்ள அனைவரும் பலமுறை வலியுறுத்தியும் கூட, அவை அனைத்தையும் புறக்கணித்து விட்டு 27 மாவட்டங்களில் மதுக்கடைகளை திறந்து மிகப்பெரிய தீங்கை இழைத்திருக்கிறது தி.மு.க. அரசு. மதுக்கடைகளை திறந்திருப்பது குடும்பங்களையும் சீரழிக்கப் போகிறது.... கொரோனாவையும் பரப்பப் போகிறது என்பது முதல் நாள் நிகழ்வுகளிலிருந்தே உறுதியாகி விட்டது.

மதுகடைகளில் விதிகள் எங்கே?

மதுகடைகளில் விதிகள் எங்கே?

மதுக்கடைகளில் ஒரு நேரத்தில் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்; பாதுகாப்பு விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. ஆனால், மதுக்கடைகள் திறக்கப்பட்ட அடுத்த நிமிடமே பாதுகாப்பு விதிகள் அனைத்தும் காற்றில் பறக்கத் தொடங்கி விட்டன. பெரும்பான்மையான கடைகளில் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கும், சில கடைகளில் இரு கிலோமீட்டருக்கும் கூடுதலான தொலைவுக்கும் குடிமகன்கள் நீண்ட வரிசையில் நின்று மது வாங்கி அருந்தினார்கள். அவர்களுக்கு இடையில் சமூக இடைவெளி என்பது பெயரளவில் கூட இல்லை.

கொரோனா மையங்களாகும் மதுகடைகள்

கொரோனா மையங்களாகும் மதுகடைகள்

மது வாங்க வந்திருந்தவர்களில் பெரும்பான்மையினர் முகக்கவசம் அணியவில்லை; அணிந்திருந்த சிலரும் கூட வாய்க்கும், தாடைக்கும் தான் முகக்கவசம் அணிந்து இருந்தனர்... மூக்குக்கு முழு சுதந்திரம் அளித்திருந்தனர். மது வாங்க வந்திருந்த எவருக்கும் கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி வழங்கப்படவில்லை. மதுக்கடைகள் கொரோனா மையங்களாக மாறுவதற்கு இந்த காரணங்களே போதுமானவை.

டோக்கன் போட்டு மதுவிற்பனை

டோக்கன் போட்டு மதுவிற்பனை

ஆனால், அதைப் பற்றி அரசும், அதிகாரிகளும் கவலைப்படவில்லை. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தான் மதுக்கடைகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், மதுக்கடைகளுக்கு வந்தவர்களை எல்லாம், வாக்குச்சாவடிக்கு வாக்களிப்பதற்கு வந்தவர்களைப் போல வரவேற்று, 5 மணிக்குள் மதுக்கடை வளாகத்திற்கு வந்த அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு, டோக்கன் பெற்ற அனைவருக்கும் மதுப்புட்டிகள் வழங்கப்பட்டன. இந்தளவுக்கு பொறுப்புணர்வு அரசு நிர்வாகத்தில் காட்டப்பட்டிருந்தால் தமிழகம் எப்போதோ முதன்மை மாநிலமாக உயர்ந்திருக்கும்.

விளக்கங்களில் தடுமாற்றம்

விளக்கங்களில் தடுமாற்றம்

மதுக்கடைகளை திறக்க நேரிட்டது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில், மதுக்கடைகளில் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படாவிட்டால், தளர்வுகள் திரும்பப்பெறப்படும் என்று கூறியிருந்தார். அதனடிப்படையில் பார்த்தால் தமிழ்நாட்டில் நேற்று திறக்கப்பட்ட மதுக்கடைகளில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலான மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மதுவை விற்று தான் வருவாய் ஈட்டி நிர்வாகம் செய்ய வேண்டிய நிலையிலுள்ள அரசு அதை செய்யாது. தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறப்பதற்காக முதலமைச்சர் பல்வேறு காரணங்களைக் கூறியிருக்கிறார். கொரோனா குறைந்து விட்டதால் தான் மதுக்கடைகளை திறக்கிறோம் என்று முதல் நாள் கூறுகிறார்; கள்ள மது விற்பனையைத் தடுப்பதற்காகத் தான் மதுக்கடைகள் திறக்கப்படுவதாக அடுத்த நாள் தெரிவிக்கிறார். இவை எதுவுமே உண்மை இல்லை என்பது அவரது மனசாட்சிக்கே தெரியும். அவர் கூறும் காரணங்கள் உண்மை இல்லை என்பதால் தான் முதலமைச்சரின் வார்த்தைகளில் தடுமாற்றம் தெரிகிறது.

பாமக போராட்டம்

பாமக போராட்டம்

மதுக்கடைகளை திறக்க ஆயிரமாயிரம் பொருளாதார, வணிகக் காரணங்கள் இருக்கலாம். ஆனால், மதுக்கடைகளைத் திறக்க ஒரே ஒரு நியாயமான சமூகக் காரணம் கூட கிடையாது. அதனால் தான் மக்களின் நலன் கருதியும், கொரோனா பரவலைத் தடுப்பதற்காகவும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. கொரோனா காலத்தில் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்தும், மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நாளை மறுநாள் (17.06.2021) வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு மாநிலம் தழுவிய நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவர்களும், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகளும் தங்களின் வீட்டு வாசலில், கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து, 5 பேருக்கு மிகாமல் கூடி, மதுவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும், கறுப்புக் கொடியையும் ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்துவர். பாட்டாளி மக்கள் கட்சியினரும், மதுவுக்கு எதிரானவர்களும் வாய்ப்புள்ள இடங்களில் பாதுகாப்பான சூழலில் இந்த போராட்டத்தை நடத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

English summary
PMK will hold protest against Tamilnadu Govt for the TASMAC Shops Opening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X