• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பெரியாரை இழிவுபடுத்தி அப்பாவிகளை மூளைச்சலவை செய்யும் அறிவாளி தலைமைகள்.. கவிஞர் தாமரை பொளேர் அட்டாக்

|

சென்னை: தந்தை பெரியாரை இழிவுபடுத்திக் கொக்கரிப்பதென்பது யாரோ சில அறிவாளித் தலைமைகள் அப்பாவிகளை மூளைச்சலவை செய்கிறார்கள் என்பதற்கான சான்று என கவிஞர் தாமரை கடுமையாக சாடியுள்ளார்.

கவிஞர் தாமரை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: என்ன, அவர் காலத்தில் ( ஒரு நூற்றாண்டு ! ) அது 'திராவிட'மாக அறியப் பட்டிருந்தது. அதனால் ஒருங்கிணைந்த 'சென்னை ராஜதானி' 'திராவிடர்'களால் நிரம்பியிருந்தது. மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு அவரவர் தத்தம் பகுதியைப் பெற்றுப் போன பிறகும் தமிழ்நாடு தாய்வீடாகவே இருந்தது, இருக்கிறது. திராவிடம் என்ற சொல் முன்னதாக புழக்கத்துக்கு வந்திருக்கலாம், ஆனால் தமிழ்தான் மூலம் !.

இன்றைய தமிழ்த்தேசிய-திராவிடத்தேசிய சண்டைகள் தேவையற்றவை ! பெரியார் வெறுப்பை அடிப்படையாகக் கொண்டு தமிழ்த்தேசியத்தைக் கட்டமைக்க முயன்றால் அது தோல்வியிலேயே முடியும்! ஆங்கிலேயராதிக்கம்-இந்தியத் தேசியம்-சுதந்திரம்-திராவிடத்தேசியம்-தமிழ்த்தேசியம் இந்த வரிசையில் பார்த்தால் யாரும் யாரையும் வெறுக்க வேண்டிய அவசியமில்லை, யாரையும் ஒதுக்க வேண்டிய அவசியமுமில்லை.

சமூக நீதிக்கு பங்கம் வராத சமுதாயத்தை உருவாக்கிட பெரியார் பிறந்த நாளில் சபதம் ஏற்போம்: டிடிவி தினகரன்சமூக நீதிக்கு பங்கம் வராத சமுதாயத்தை உருவாக்கிட பெரியார் பிறந்த நாளில் சபதம் ஏற்போம்: டிடிவி தினகரன்

செருப்பாலடிப்பது அறியாமை

செருப்பாலடிப்பது அறியாமை

வாழ்நாள் முழுக்க சமூகப்பணி ஆற்றி அமைந்தவரைச் செருப்பாலடித்து நம் அறியாமையைக் காட்டிக் கொண்டோம். சாதி ஒழிப்பையே முதன்மையாகக் கொண்டு மூச்சுவிட்டவரை நாயக்கர் என்று அழைத்து பரவசப் பட்டோம். தமிழருக்காக உழைத்தவரை, கன்னடர் என்று கட்டம் கட்டினோம். கடவுள் மறுப்பை முன்வைத்தவரை இந்துமத வெறுப்பாளராக மட்டும் அடையாளமிட்டோம்.

அதிர்ச்சி வைத்தியங்களும் பைத்தியங்களும்

அதிர்ச்சி வைத்தியங்களும் பைத்தியங்களும்

எல்லாம் ஒரு 'காலக் கோளாறு' நோய்தான். பெரியாரைப் புரிந்து கொண்டால், நிச்சயமாக இந்த நோயிலிருந்து விடுபட்டு விடலாம். தூங்கிக் கிடந்த மக்களைத் தட்டியெழுப்ப அன்று அவர் கைக்கொண்ட 'அதிர்ச்சி வைத்தியங்களை'ப் புரிந்து கொண்டால் இன்றைய 'பைத்தியங்களை'த் தெளிய வைக்கலாம். அவர் பாணி அது, அவ்வளவே !. ஏதாவது செய்து இந்த மக்களின் மூடத்தனங்களை அகற்றி விட மாட்டோமா, யாரும் இயக்காமலே இவர்கள் தாங்களாகவே இயங்குமாறு செய்து விட மாட்டோமா என்கிற ஆதங்கத்தால்தான் அந்த நெம்புகோலை வைத்து நெம்பிக் கொண்டேயிருந்தார் என்று புரிந்து கொண்டால், இந்த பெரியார் வெறுப்பு தேவையற்றது என்பது தெளிவாகும்.

சில அறிவாளி தலைமைகள்

சில அறிவாளி தலைமைகள்

தமிழ்த்தேசியத்தைத் திராவிடத் தேசியத்திலிருந்து வேறுபடுத்திக் காட்ட, பெரியாரை இழிவுபடுத்திக் கொக்கரிப்பதென்பது யாரோ சில அறிவாளித் தலைமைகள் அப்பாவிகளை மூளைச்சலவை செய்கிறார்கள் என்பதற்கான சான்று !. தாங்கள் அடிமைகளாகிக் கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமலே அடிமைகளாகும் கண்ணுக்குத் தெரியாத பரிதாபப் பொறி ! பெரியாரே சொன்னது போல், அவரது செய்திகளில் உள்ள சரியானவற்றை எடுத்துக் கொண்டு, சரியல்லாதவற்றை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதே பகுத்தறிவு !. பெரியார் தன்னைத் தலைவனாகத் துதி பாடச் சொல்லவும் இல்லை, தூக்கிக் கொண்டாடச் சொல்லவும் இல்லை. தன் பணியை செவ்வனே செய்து சென்றார்.

சரி என முடிவு கட்டியதை செய்தார்

சரி என முடிவு கட்டியதை செய்தார்

அவர் பணிகளை சரியான முறையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டியவர்கள் அவருக்குப் பின்னால் வந்தவர்களே ! அவர்கள் அதில் தவறியதாலேயே இன்றைய இழிநிலை !. பெரியாரோடு திராவிடர் கழக வரலாறு முடிவடைகிறது. அதற்குப் பெரியாரை எப்படிக் குறை சொல்ல முடியும் ?? பெரியார் அன்றே ஏன் அதைச் செய்யவில்லை, அன்றே ஏன் அதைச் சொல்லவில்லை என்றெல்லாம் குற்றம் சாட்டுவது மடத்தனமன்றி வேறென்ன ?. அன்றைய காலகட்டத்தில் அவரால் என்ன செய்ய முடிந்ததோ, அவருக்கு எது சரியென்று தோன்றியதோ அதை அவர் செய்தார். அவற்றில் உள்ள குறைகளை நீக்கி, நூறாண்டுகளுக்குப் பிறகு என்ன செய்ய வேண்டுமோ அதை நாம்தானே செய்ய வேண்டும் !.

அற்பத்தனமான சண்டைகள்

அற்பத்தனமான சண்டைகள்

பெரியாரைப் போல சமூகப்பணி ஆற்றியவர்கள் எத்தனையோ பேர் உண்டு !. அவர்களையும் கொண்டாடுவோம். ஆனால், பெரியார் எனும் பெரும்பணிக்காரர் தனித்துத் தெரிகிறார்... தமிழ்நாடு இன்று முற்றுகையில் இருக்கிறது. வடவர் மட்டுமன்றி தமிழரில்லை என்று மார்தட்டிச் சொல்கின்ற கூட்டங்களும் சேர்ந்தே தமிழ்நாட்டை விழுங்கி ஏப்பமிட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வளவு பெரிய அபாயத்தை வைத்துக் கொண்டு கொஞ்சம்கூட கவலையில்லாமல் அற்பத்தனமாக தமிழ்த்தேசிய-திராவிடத்தேசிய சண்டையிட்டுக் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறோம் ! பெரியாரின் நினைவைப் போற்றுவதோடு, அவர் விட்டுச் சென்ற தடங்களை ஆராய்ந்தறிந்து தேவையானவற்றை இன்றைய காலகட்டத்துக்கேற்றவாறு செப்பனிட்டு நடப்போம். நான் பெரியாரை நேசிக்கும், பெரியாரால் அறிவுச்சுடர் ஏந்தி நிற்கும் தமிழ்த்தேசியவாதி! நான் இன்று இந்த இடத்தில் அமர்ந்து, இவ்வளவு நீளம் நீட்டி முழக்கக் காரணமாக இருப்பவர் பெரியாரே என்கிற நன்றியறிதலோடு நெஞ்சம் நிறைகிறேன். இவ்வாறு கவிஞர் தாமரை கூறியுள்ளார்.

English summary
Poet Thamarai defends Periyar Ideology in her FB Post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X