பிரியாணி கடையில் போதை மாத்திரை..மாணவர்களை குறி வைத்த கும்பல்..பல்லாவரத்தில் கொத்தாக அள்ளிய போலீஸ்
சென்னை: வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்த மூன்று பேரை பல்லாவரத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வலி நிவாரணி மருந்துகள் உடலின் பல பகுதிகளை பாதிக்க கூடியவை என்பதால் பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும் என காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
மாணவர்கள் போதை தரக்கூடிய மாத்திரைகளை மருத்துவரின் மருத்துவ சீட்டு இல்லாமல் வாங்கி மேற்படி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து அந்த மாத்திரைகளை இன்சுலின் சிரஞ் மூலம் எடுத்து நரம்பு மூலம் உடலில் ஏற்றுவதாக காவலாளி கொடுத்த தகவலின் பேரில் மூன்று பேரை இன்ஸ்பெக்டர் சரவணன் மார்த்தாண்டன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
நிலுவையில் மசோதாக்கள்.. ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்திக்கும் முதல்வர் மு.க ஸ்டாலின்
சென்னை தாம்பரம் அடுத்த பல்லாவரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை ஒரு கும்பல் சப்ளை செய்து வருவதால் மாணவர்கள் சீரழிந்து வருவதாக பல்லாவரம் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

மாணவர்களுக்கு போதை மாத்திரை
இந்த தகவலின் அடிப்படையில் பல்லாவரம் ஏ.சி ஆரோகிய ரவீந்திரன் அவர்களின் தலைமையில் 5,பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தேடிவந்த நிலையில் பல்லாவரம் கன்ரோன்மென்ட் பகுதியைச் சேர்ந்த ஜகருல்லா என்பவர் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்து வருவதாக தெரிய வந்தது.

பிரியாணி கடை ஓனர்
அவரை கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்த போது, அவர் பல்லாவரம் காவல் நிலையம் அருகே பிரியாணி கடை வைத்து நடத்தி வருவதாகவும் கடைக்கு வரக் கூடிய பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அவர்களிடம் நட்பாக பேசி போதை மாத்திரை என கூறி டைடால் (TYDOL 100MG) என்கின்ற ஒரு மாத்திரை 300 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாக தெரிய வந்தது.

போதை மாத்திரை விற்பனை
காலையில் பள்ளி கல்லூரி வளாகத்துக்கு சென்று போதை மாத்திரை விற்பனை செய்துவிட்டு மாலை பிரியாணி கடையில் அமோக விற்பனை நடத்தி வருவதும் விசாரணையில் தெரியவந்தது. அதன் பின்னர் போலீசார் பாணியில் விசாரணை செய்தபோது இவரது கூட்டாளிகளான மீனம்பாக்கம் அம்பேத்கார் தெருவை சேர்ந்த பவுல், 21 என்பவரும் போதை மாத்திரை விற்பனை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

மாத்திரை மொத்த விற்பனை
அவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து இருவரிடமும் விசாரணை செய்ததில் சேலையூர் பகுதியைச் சேர்ந்த உதயசீலன்,48 என்பவரிடமிருந்து மாத்திரைகளை வாங்கி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக வாக்குமூலம் அளித்தனர். உதயசீலனையும் கைது செய்து விசாரித்த போது, மருந்து கடை வைத்திருப்பது போல் போலியான ஆவணம் தயாரித்து மும்பையில் இருந்து டைடால் வலி நிவாரண மாத்திரைகள் ஆன்லைன் மூலமாக 10 மாத்திரைகள் 315 ரூபாய் என 15 நாட்களுக்கு ஒரு முறை 1000 முதல் 2000 மாத்திரைகள் வாங்கி அதை வரவைத்து சென்னை புறநகர் பகுதியில் இருந்து செங்கல்பட்டு வரை விற்பனை செய்துள்ளார்.

மாத்திரைகள், ஊசி பறிமுதல்
பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் என கூறி மூன்று வருடங்களாக போலீசாரிடம் சிக்காமல் சப்ளை செய்து வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் அவரிடம் இருந்து 900 மாத்திரைகள் மற்றும் 1300 ஊசிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த பல்லாவரம் போலீசார் அவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுபோன்ற வலி நிவாரணி மருந்துகள் உடலின் பல பகுதிகளை பாதிக்க கூடியவை என்பதால் பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும் என காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தொடரும் வேட்டை
கடந்த ஏப்ரல் மாத இறுதியில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்குரிய வகையில் இளைஞர்கள் சிலரிடம் சோதனை செய்தனர். அவர்களிடமிருந்து, முறையான பரிந்துரையின்றி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வலி நிவாரண மாத்திரைகள் அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த குழுவில் இருந்த கல்லூரி மாணவர்கள் உட்பட 6 இளைஞர்களிடமிருந்து சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாத்திரைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.