பசுமை தாயகம் முதல் பாமக தலைவர் வரை..! இளைஞரணி முதல் மத்திய அமைச்சர் வரை! அன்புமணியின் அரசியல் பயணம்!
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக 25 ஆண்டுகளாக இருந்த ஜி.கே.மணிக்குப் பிறகு, அக்கட்சியின் எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டு புதிய தலைவராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பதவி ஏற்றுள்ளார். அன்புமணி கடந்து வந்த அரசியல் பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம்..
சுமார் 25 வருடங்களாக, அரசியல் வாழ்வில் பல நிலைகளைக் கடந்து, பல்வேறு போராட்டங்களையும், சவால்களையும் சந்தித்து, கட்சியின் இளைஞரணி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், முதல்வர் வேட்பாளர், மத்திய அமைச்சர் என பல பதவிகளை வகித்து தற்போது கட்சியின் புதிய தலைமையாக உருவெடுத்திருக்கிறார் அன்புமணி.
நாட்டிலேயே அதிகம் சம்பாதிக்கும் மாநில கட்சி எது?- ஏடிஆர் ரிப்போர்ட்.. அதிமுக வருமானம் சரிஞ்சிடுச்சே!
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கு மகனாக 1968ஆம் ஆண்டு அன்புமணி பிறந்தார். பத்தாம் வகுப்பு வரை ஏற்காடு மான்போர்டு மேல்நிலைப் பள்ளியில் படித்தார். 1984 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பை நிறைவு செய்த பின்னர், 1986ம் ஆண்டு திண்டிவனம் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பை நிறைவு செய்தார்.

அன்புமணி ராமதாஸ்
12 ஆம் வகுப்பில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய தென் ஆற்காடு மாவட்டத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். பின்னர் சென்னை மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பை நிறைவு செய்தார். கடந்த 2003ஆம் ஆண்டு லண்டனில் பொருளாதார படிப்பையும் நிறைவு செய்தார். படிக்கும் காலத்திலேயே மிகச் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்த அவர், மாநில அளவிலான பதக்கங்களையும் பெற்றிருக்கிறார். டென்னிஸ், ஹாக்கி, கைப்பந்து, கூடைப்பந்து, மட்டைப்பந்து போன்ற குழு போட்டிகளிலும், இறகு பந்தாட்டம், 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் நீச்சல் போன்ற தனிநபர் போட்டிகளிலும் தேர்ச்சி பெற்றவராக விளங்கினார்.

இளமைக் காலம்
சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்த போது விளையாட்டுத்துறை செயலாளராகவும் பதவி வகித்த அவர், பத்து கிலோமீட்டர் அளவிலான மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்றிருக்கிறார். மேலும் தமிழ்நாடு இறகுப்பந்தாட்ட சங்கத்தின் தலைவராகவும், இந்திய இறகுப்பந்தாட்ட சங்கத்தின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். அதேபோல சிறு வயது முதலே சமூகப்பணிகளில் ஆர்வம் கொண்ட அன்புமணி, பள்ளி, கல்லூரி காலங்களில், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை போன்ற அமைப்புகளையும் விட்டு வைக்காமல், அவற்றிலும் இணைந்து தலைமை பொறுப்பை ஏற்று சமூகச் சேவையாற்றியுள்ளார். மருத்துவ படிப்பை முடித்த அன்புமணி படிப்பை முடித்தவுடன், கிராமத்திற்கு சென்று சேவை செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் திண்டிவனம் அருகே உள்ள நல்லாவூர் கிராமத்தில் சுமார் 18 மாதங்கள் மருத்துவ பணியாற்றினார்.

பசுமைத்தாயகம் அமைப்பு
பின்னர் சமூக சேவை பணிகளில் ஈடுபாடு கொண்ட அவர், மருத்துவர் ராமதாஸ் நிறுவிய பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக 1997 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். சுமார் 7 ஆண்டுகள் அப்பொறுப்பை அலங்கரித்தவர், அவருடைய செயல்பாட்டின் மூலம் அமைப்பினை உலகறிய செய்தார். அவரது தலைமையில், தமிழகம் முழுவதும் ஏரி, குளங்களை தூர்வாரி, தடுப்பணைகளும் கட்டப்பட்டது. இக்காலகட்டத்தில் 25 லட்சம் மரக் கன்றுகளையும் பசுமைத்தாயகம் அமைப்பு நட்டது. பசுமைத்தாயகம் அமைப்பு அன்புமணி தலைமையில் சிறப்பாக செயல்பட்டதன் விளைவாக ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கீகாரமும் கிடைக்க செய்தார். அதேபோல ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் உறுப்பினராகவும் ஆக்கினார்.

ஐநா சபையின் மனித உரிமைகள்
பசுமை தாயகம் அமைப்பின் சார்பாக, இலங்கை தமிழர்களுக்காக ஜெனிவாவில் 2013 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐநா சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.
பசுமைத்தாயகம் அமைப்பில் இணைந்து பணியாற்றியது ஆரம்பம் முதலே பாமக நடத்தும் போராட்டங்களிலும், பொதுக்கூட்டங்களிலும் அன்புமணி பங்கேற்க ஆரம்பித்தார். செல்லும் இடங்களில் எல்லாம் பாமக கொடியேற்றுவது போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். கட்சிக்காக அவருடைய பணிகளை பார்த்து 2006ஆம் ஆண்டு பாமகவின் இளைஞரணித்தலைவராக நியமிக்கப்படுகிறார்.

சுகாதாரத்துறை அமைச்சர்
இதனிடையே கடந்த 2004ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், 35ஆவது வயதில் மத்திய குடும்ப நலன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற அவர் 2009 மார்ச் வரை அப்பொறுப்பில் இருந்தார். அவர் அமைச்சராக பணியாற்றிய பொழுது மிகப்பெரிய பொது சுகாதார திட்டமான தேசிய ஊரக சுகாதார இயக்கத்தினை இந்திய அளவில் தொடங்கினார். இந்த இயக்கத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட கிராமப்புற செவிலியர்களுக்கு தான், இந்தியாவில் கொரோனவை கட்டுப்படுத்தியதற்காக சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு விருது வழங்கியது என்பது இங்கே குறிப்பிடத்தக்க வேண்டிய விஷயமாகும்.

108 ஆம்புலன்ஸ்
இந்தியாவில் முதன் முதலாக 108 அவசர ஊர்தி திட்டத்தை தொடங்கினார். பொது இடங்களில் புகைபிடிக்க தடை சட்டம் இயற்றி பயன்பாட்டினைக் குறைத்தார். திரைப்படங்களில் புகை, மது காட்சிகளில் எச்சரிக்கை வாசகங்கள் வருவதையும், புகையிலை பொருட்கள் மீது எச்சரிக்கை படங்கள் போடுவதையும் கண்டிப்புடன் நிறைவேற்றும் வகையில் செயல்பட்டார். இந்தியாவில் குட்கா மற்றும் பான் மசாலாவுக்கு தடை கொண்டு வந்தார். இந்தியாவில் போலியோ நோய் முற்றிலுமாக ஒழிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுத்தார்.

பாமக முதல்வர் வேட்பாளர்
அரசியல் பொறுப்புகளில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 2010 வரை அப்பொறுப்பில் இருந்தார். பின்னர் 2014ஆம் ஆண்டு தர்மபுரி தொகுதியில் அதிமுக, திமுக கட்சிகளை எதிர்த்து போட்டியிட்டு முதல் முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2019ஆம் ஆண்டு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இதனிடையே 2016 ஆம் ஆண்டு அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து தமிழகம் முழுவதும் தனித்து தேர்தலை சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.

பாமக தலைவர்
கடந்த 1997 இல் பசுமைத்தாயகம் அமைப்பின் மூலம் தொடங்கிய அவருடைய அரசியல் பயணம், கட்சியில் அடிப்படை உறுப்பினர், இளைஞரணித்தலைவர் எனத் தொடர்ந்து தற்போது கட்சியின் தலைவராக உயந்திருக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரின் மகனாக இருந்தாலும், பல ஆண்டுகளுக்கு பிறகே அக்கட்சியின் தலைவர் ஆவதற்கான வாய்ப்பு அன்புமணிக்கு கனிந்திருக்கிறது. தமிழகத்தில் அதிக அளவில் இளைஞர்களை கொண்ட கட்சி என அக்காட்சியினரால் அழைக்கப்படும் பாமகவிற்கு அன்புமணி எந்த மாதிரியான பலத்தைக் கொடுக்கும் என்பதை பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும்...