சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திசை திருப்பல் தந்திரம்.. பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலை சொல்லும் பலே தலைவர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: கைய புடிச்சு இழுத்தியா?.. என்ன கைய புடிச்சு இழுத்தியா?.. ஏற்கனவே அவங்களுக்கும் நமக்கும் வாய்க்கா தகராறு இருக்கு... என்ன வாய்க்கா தகராறு இருக்கு... என்ற வடிவேல் காமெடியை பார்த்து நாம் வாய்விட்டு சிரிக்கிறோம். ஆனால் இப்படி முக்கியமான கேள்வி எதற்கும் பதில் சொல்லாமல் தேவையே இல்லாத வேறு எதையாவது பேசி நம்மை சுத்தலில் விடுவதை அரசியல்வாதிகள் வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்கள்.

இப்போ கூட பாருங்க, பொருளாதார மந்தநிலை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மீத்தேன், நியூட்ரினோ, 8 வழி சாலை என்று எதையாவது பேச ஆரம்பித்தால் உடனே இந்திதான் இந்தியாவின் ஒற்றை அடையாளம் என ஆரம்பித்துவிடுகிறார்கள்.

அப்புறம் தமிழின் சிறப்பு, தமிழர்களின் சிறப்பு, இந்தியாவின் பன்முகத்தன்மை, இந்தியாவின் அரசியலமைப்பு என்ன சொல்லியிருக்கு தெரியுமா? என விவாதமே வேறு திசையில் திரும்பிவிடுகிறது. நாட்டில் பொருளாதாரம் தொடர்ந்து சரிவில் இருக்கிறதா, வங்கிகளை இணைத்துவிடு, காஷ்மீரை பிரித்துவிடு என்று அரசியல்வாதிகளின் ரூட்டே எப்போதுமே தனிதான்.

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி

ராகுல் காந்தி இந்தியரா? அவர் அம்மா எந்த நாட்டுக்காரங்க, அவரு தாய்மாமா எந்த நாட்டுக்காரரு? அவருக்கு யார் மடியில உட்கார வெச்சி காதுகுத்துனாங்க? என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுவது கேட்பதற்கு சிரிப்பாக இருக்கலாம். ஆனால் இதுவும் ஒரு திசை திருப்பல் உத்திதான். நம் கழுத்தை நெரிக்கும் எத்தனையோ பெரிய பிரச்சினைகளை மறந்துவிட்டு நாம் இதைப் பற்றி பேசிக் கொண்டிருப்போம். மாநில அமைச்சரோ, மத்திய அமைச்சரோதான் இப்படி நம்மை திசை திருப்ப வேண்டும் என்பதில்லை. ஒரே ஒரு டிஜிட்டல் அடையாளம் வைத்துக்கொண்டு, உள்ளூர் மாரிதாஸ்கள் கூட இதை இப்போது செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

ஏப்பம்

ஏப்பம்

இதுபற்றி ஓஷோ ஒரு கதை சொல்லியிருக்கிறார். நம்மாளு ஒருத்தரு அமெரிக்காவில் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக நின்று கொண்டிருந்தாராம். ரயில் இன்னும் எத்தனை நேரத்தில் வரும், எந்த நடைமேடையில் வரும் என்று போர்டையே பார்த்துக்கொண்டிருந்தாராம். அப்போது சாமியார் போன்ற தோற்றத்தில் இருந்த ஒருவர், நம்மாளு பக்கத்தில் வந்து அதோ நிக்கிறாங்களே அந்த அம்மா இன்னும் கொஞ்ச நேரத்துல சத்தமாக ஏப்பம் விடுவாங்க பாருன்னு சொல்லிட்டு போயிட்டாராம். இவருக்கு ஒரே ஆச்சர்யம். அதெப்படி நமக்கு ஏப்பம் வரப் போகுதுன்னு நமக்கே வர்ர வரைக்கும் தெரியாது. அப்படி இருக்க, அந்த அம்மாவுக்கு ஏப்பம் வரப் போகுதுன்னு இவர் எப்படி சொல்ல முடியும். நம்மாளுக்கு ஆர்வம் தாங்கலை. அந்த பெண்மணியையே வெச்ச கண்ணு வாங்காம பார்த்துகிட்டு இருந்தாரு. சாமியார் சொன்ன மாதிரியே கொஞ்ச நேரத்தில அந்த அம்மா பெரிசா ஏப்பம் விட்டாங்க. இவருக்கு பயங்கரமான ஆச்சர்யம். அடடா, எவ்வளவு சக்திவாய்ந்த சாமியார்னு நினைச்சிட்டு திரும்பி பார்த்தா இவர் போக வேண்டிய ரயில் தூரத்தில போய்கிட்டு இருக்காம். இதை சொல்லிட்டு ஓஷோ சொன்னார், அந்த ஆளு ரயில் நிலையத்துக்கு வந்தது ரயில் பிடிச்சு ஊருக்கு போறதுக்கு. ஆனால் நடுவுல கொஞ்சம் டைவர்ட் ஆகி யாரோ ஏப்பம் விட்டதை வேடிக்கை பார்த்துனால எதுக்கு வந்தாரோ அந்த முக்கியமான வேலையையே கோட்டை விட்டுட்டார்னாரு.

உலகம் முழுக்க இப்படி

உலகம் முழுக்க இப்படி

அரசியல்வாதிகள் தாங்கள் ஏப்பம் விடுறது நமக்கு தெரியக் கூடாதுன்னு தான் கண்டதையும் பேசி நம் கவனத்தை திசை திருப்பிக் கொண்டே இருக்கிறார்கள். நம்ம ஊர் அரசியல்வாதிகள் மட்டும்தான் இப்படி என்று நினைத்துவிடாதீர்கள், உலகம் முழுக்கவே இதே கூத்துதான். திசைதிருப்பல் அரசியலின் ஆதர்ச நாயகன் அமெரிக்க அதிபர் டிரம்ப் என்கிறார்கள் உலக அரசியல் விமர்சகர்கள்.

டொனால்ட் ட்ரம்ப்

டொனால்ட் ட்ரம்ப்

டிரம்பின் சமீபத்திய அதிரடி கிரீன்லாந்து தீவை டென்மார்க்கிடம் இருந்து வாங்க விரும்புவதாக தெரிவித்திருப்பது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க்கின் தன்னாட்சி பெற்ற பிராந்தியமாக கிரீன்லாந்து தீவு திகழ்கிறது. எண்ணெய் மற்றும் இயற்கை வளங்கள் கொட்டிக் கிடப்பதால் உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை அமெரிக்கா வாங்க விரும்புகிறது என அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார். ஆனால் டென்மார்க் பிரதமர், நாங்க எங்க தீவை விற்கும் ஐடியா எதுவும் இல்லை, நீங்க போயிட்டு வாங்க என்று சொல்லிவிட்டார். ஆனாலும் ட்ரம்ப் தொடர் அழுத்தம் கொடுக்கும் விதமாக ட்வீட்டுகளை போட்டு பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். இப்படித்தான் கொஞ்ச காலத்துக்கு முன்னாடி ஹாலிவுட் நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய அர்னால்டை அநாவசியமாக சீண்டி ட்வீட் போட்டுக் கொண்டிருந்தார். சீனாவுடனான வர்த்தகப் போரால் அமெரிக்க விவசாயிகள் பாதிப்பு போன்ற உள்ளூர் பிரச்னைகள் ஆயிரம் இருக்கும்போது, இந்தாளு எதுக்கு இப்போ இதைப் போட்டு உருட்டிகிட்டு கிடக்கிறாருன்னு உள்ளூர்ல ஒரே பேச்சா இருக்கு.

மன்னர் காலம்

மன்னர் காலம்

ஒவ்வொரு நாட்டுத் தலைவரும் உள்ளூர் பிரச்னையில் இருந்து கவனத்தை திசை திருப்ப இப்படி எதையாவது தினமும் செய்துகிட்டுதான் இருக்காங்க. இது இன்று நேற்று ஆரம்பித்த பழக்கமல்ல, மன்னர்கள் காலத்தில் இருந்து இது நடைமுறையில் இருக்கிறது. போர்தந்திரம், ராஜதந்திரம் என்ற பெயரில் எதிரிகளை ஏமாற்றவும், சொந்த மக்களின் கோபங்களை தணிக்கவும் ஆயிரக்கணக்கான வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றன.

அலெக்சாண்டர் தந்திரம்

அலெக்சாண்டர் தந்திரம்

உலகையே வெல்லப் போகிறேன் என்று புறப்பட்ட மாவீரன் அலெக்சாண்டரும் இதுபோன்ற உத்திகளை கையாண்டிருக்கிறாராம். அலெக்சாண்டரின் படைகள் எதிரி நாட்டுக்கு அருகில் முகாம் அமைத்திருக்கும்போது, பெரிய பெரிய ஆயுதங்களை எதிரிகளின் கண்ணில் படும்படி வெளியில் வைத்திருப்பார்களாம். அதாவது 7 அல்லது 8 அடி உயரம் உள்ள மனிதர்கள் பயன்படுத்தும் அளவிலான வாட்கள், கேடயங்கள் போன்றவற்றை வெளியில் வைத்துவிடுவார்கள். உளவு பார்க்க வந்து, இதைப் பார்த்து திரும்பும் வீரர்கள் அலெக்சாண்டரின் படையில் ராட்சத மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நம்பிவிடுவார்களாம். இது எதிரிப்படையின் மன உறுதியை குலைத்துவிடும் என்பதற்காக இப்படி ஒரு ட்ரிக்கை கையாண்டிருக்கிறார்கள்.

அமெரிக்க படைகள்

அமெரிக்க படைகள்

கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு உத்தியை அமெரிக்க படைகள் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தியிருக்கிறார்கள். உடல்நலம் சரியில்லை என்று எப்படி எல்லாம் சாக்கு சொல்லி படையில் இருந்து விலகிக்கொள்ளலாம் என்று டிப்ஸ் கொடுக்கும் புத்தகங்களை, விமானம் மூலம் வானில் இருந்து ஜெர்மானிய படை வீரர்கள் இருக்கும் பகுதியில் வீசிவிட்டு சென்றுவிடுவார்கள். இதை எடுத்து படிக்கும் ஜெர்மானிய வீரனின் மனம் லேசாக சஞ்சலப்படும். என்ன செய்தால் ஒரே நாளில் காய்ச்சல் வரும், என்ன செய்தால் தோலில் அலர்ஜியை வர வைக்க முடியும், என்ன செய்தால் மாரடைப்பு போன்ற அறிகுறிகளை தானே ஏற்படுத்திக்கொள்ள முடியும் என ரொம்ப விரிவான டிப்ஸ் அந்த புத்தகத்தில் இருந்திருக்கிறது. இதைப் பார்க்கும்போது இப்படி எதையாவது முயன்று பார்த்து ஏன் படையில் இருந்து விலகிக்கொள்ளக் கூடாது என்று வீரர்களுக்கு தோன்றும் என்பது முதல் நோக்கம். இரண்டாவது நோக்கம், ஒருவேளை படைத் தளபதிகள் யார் கையிலாவது இந்த புத்தகம் சிக்கினால், அதன் பிறகு உடம்பு சரியில்லை என்று எந்த வீரன் வந்து விடுப்பு கேட்டாலும் கொடுக்க மாட்டார்கள். இவன் வேண்டுமென்றே நடிக்கிறான் என்று நினைப்பார்கள். இது படைக்குள் குழப்பம் ஏற்பட உதவும் என்ற நோக்கில் இப்படி எல்லாம் கோக்குமாக்காக சிந்தித்திருக்கிறார்கள்.

மக்களே அதிபதி

மக்களே அதிபதி

காதலிலும், போரிலும் எதை வேண்டுமானாலும் செய்யலாம், இதில் தர்ம நியாயத்திற்கே இடம் இல்லை என்று சாக்குபோக்கு சொல்லிவிடலாம். ஆனால் ஜனநாயகத்தில் அப்படி எல்லாம் சொல்லி தப்பித்துக்கொள்ள முடியாது. எனவே திசை திருப்பல் உத்திகளிலேயே காலத்தை கழித்துவிடாமல் உருப்படியாக மக்களுக்கான பிரச்னைகளை எதிர்கொண்டு தீர்த்து வைக்க வேண்டும் என்பதே சாமானியனின் விருப்பம். ஆனால் அவ்வளவு சீக்கிரம் நம் அரசியல்வாதிகள் திருந்திவிட மாட்டார்கள் என்பதால், இந்த விஷயத்தில் நாம் தான் உஷாராக இருக்க வேண்டும். பஜாரில் உஜார் இல்லேன்னா நஜார் இருக்காது என்பார் எங்க ஏரியா தாத்தா. அது இன்னைக்கு தேதிக்கு ரொம்பவே உண்மை தானுங்கோ..

English summary
Politicians routinely keep us away from talking about something that is not necessary without answering an important question
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X