நாளை மதியம் 1 மணிக்கு அதிமுக பொதுச் செயலாளராக தேர்வாகிறார் இபிஎஸ்.. புதுவை அதிமுக பரபரப்பு தகவல்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக நாளை மதியம் 1 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்படுகிறார் என புதுவை அதிமுக முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரிய வழக்கில் தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அது போல் அதிமுக சட்டவிதிகளில் திருத்தம் மேற்கொள்ளவும் தடை விதிக்க முடியாது என தீர்ப்பு வந்துள்ளது. இதனால் நாளை அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறுவது உறுதியாகிவிட்டது.
எடப்பாடி பழனிசாமிக்கு 4 பி.எஸ்.ஓ.க்கள்! பாதுகாப்பு அதிகரிப்பு! கிட்ட நெருங்க முடியாது!
இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து புதுவை அதிமுக முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் கூறுகையில் 99 சதவீத்திற்கும் மேற்பட்ட பொதுக் குழு உறுப்பினர்கள் தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுகவை உறுதியாக எதிர்க்கக் கூடிய ஒற்றைத் தலைமை தேவை.

ஒற்றைத் தலைமை யார்
அந்த தலைமை என்பது தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான். இவர் கழகத்தின் பொதுச் செயலாளராக வர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த பொதுக் குழு கூட்டம் கூட்டப்படுகிறது. இந்த பொதுக் குழுவில் இது போன்ற தீர்மானத்தை நிறைவேற்றக் கூடாது என்ற எண்ணத்தில் ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள் திமுகவுக்கு வலு சேர்க்கும் விதத்தில் பல்வேறு தடைகளை ஏற்படுத்தினர்.

நீதிமன்றத்தில்
அது போல் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்திருந்தார்கள். இன்றைய தினம் நீதித்துறையினர் எங்கள் தரப்பின் நியாயமான காரணங்களை மனதில் கொண்டு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளார்கள்.

அதிமுக பொதுச் செயலாளராகிறார் இபிஎஸ்
அதன் அடிப்படையில் நாளை வானகரத்தில் நடைபெறும் இந்த பொதுக்குழுவில் மதியம் 1 மணி அளவில் ஜெயலலிதா வகித்த பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் தமிழகத்தின் மக்கள் விரோத ஆட்சியை உறுதியாக எதிர்த்து அரசியல் நடத்தக் கூடிய ாளுமை மிக்க தலைவராக விளங்கக் கூடிய எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்படுவார். இது தொடர்பான அனைத்து தடைகளும் நீங்கியது. இதுதான் உண்மை என்றார்.

தனிமரம்
பொதுக்குழு கூட்டப்படுவதே எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யத்தான் என்பதை அன்பழகன் போட்டு உடைத்துள்ளார். அது போல் நாளை மதியம் 1 மணிக்கு அதிமுக பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்படுகிறார். இதற்குத்தான் ஓபிஎஸ் இந்த கூட்டம் நடத்தப்படக் கூடாது என பாடுபட்டார். ஆனால் தற்போது அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு தனிமரமாகியுள்ளார்.