வன்னியருக்கு து.முதல்வர் பதவி அறிவித்திருந்தால் அதிமுக வென்றிருக்கும்! -ஜெ. உதவியாளர் பூங்குன்றன்!
சென்னை: துணை முதலமைச்சர் பதவியை வன்னியருக்கு அறிவித்திருந்தால் நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றிருக்கும் எனக் கூறியிருக்கிறார் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அவரிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன், இப்போது ஆன்மிகம், விவசாயம் என கவனம் செலுத்தி வருகிறார்.
தூத்துக்குடி கோயில் பெண்கள் குளியலறையில் 3 ரகசிய கேமராக்கள்.. கைவிரிக்கும் கோயில் நிர்வாகம்!
அவ்வப்போது அதிமுக தலைமைக்கு அட்வைஸ் செய்யும் விதமாக சில நறுக் பதிவுகளையும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவின் விவரம் பின்வருமாறு;

மெஜாரிட்டி சமுதாயம்
காலம் எதைத் தீர்மானிக்கிறது என்பதைப் பொறுத்துதான் வெற்றியும், தோல்வியும். அறிவு இருக்கிறது என்பதால் நாம் எதிலும் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைப்பது அனுபவமின்மையையே காட்டும். காலம் நமக்கு துணை இருந்தால் மட்டுமே வெற்றிக் கனியை பறிக்க முடியும்.
தேர்தலுக்கு முன்பு எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அதிமுக ஆட்சியில் மெஜாரிட்டி சமுதாயமான முக்குலத்தோர், கவுண்டர் சமுதாயத்தினர் முதலமைச்சர் பதவியை அலங்கரித்துவிட்டனர்.

வன்னியருக்கு து.முதல்வர்
மற்றொரு பெரிய சாமுதாயமான வன்னியர்களுக்கு முதலமைச்சர் பதவி தந்தால் அதிமுக இந்த முறையும் ஆட்சியை அமைக்கும் என்று மனதில் தோன்றியது. இட ஒதுக்கீடு அறிவித்ததற்கு பதிலாக துணை முதலமைச்சர் பதவியை வன்னியருக்கு அறிவித்திருந்தால் கழகம் வெற்றி பெற்றிருக்கும் என்பது என் கணிப்பு. வெற்றிக்குப் பிறகு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று சொல்லி இருக்கலாம்.

குழப்பத்தால் தவிர்த்தேன்
மற்ற சூழல்களையும், முக்கிய நிர்வாகிகளையும் கணக்கிட்டுத்தான் இந்த யோசனை எனக்குத் தோன்றியது. நண்பர்களிடம் இது பற்றி விவாதித்தேன். அற்புதமான யோசனை என்றார்கள். பதிவு செய்ய நினைக்கும் போது தேர்தல் அறிவிக்கபட்டுவிட்டதால் இது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று தவிர்த்துவிட்டேன். காலம் நம் பக்கம் இல்லை என்பதை மனம் அப்போதே எனக்கு உணர்த்தியது.

பழைய நிலைக்கு
காலம் நமக்கு கை கொடுக்க வேண்டும். காலத்தின் கருவி தான் நாமே தவிர நமக்கு காலம் கருவி கிடையாது. காலம் நமக்கு வழிவிடும் போது வாய்ப்புகளை நழுவவிட்டுவிட்டு பின்னர் புலம்பித் திரிவதில் எந்த பிரயோஜனமில்லை. முடிவுகளை எடுக்கும் நேரத்தில் சரியாக எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆளுமை கொண்ட தலைவர் ஒருவராக இருந்தால் சாதிகளுக்கு முக்கியத்துவம் குறைந்துவிடும், கழகம் பழைய நிலைக்கு திரும்பிவிடும் என்பது என் நிலைப்பாடு. இவ்வாறு பூங்குன்றன் தெரிவித்திருக்கிறார்.