யஷ்வந்த் சின்ஹா நாளை சென்னை வருகை! முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்!
சென்னை: ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா நாளை சென்னை வருகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பேசும் அவர், ஜனாதிபதி தேர்தலில் திமுக எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை கோரவுள்ளார்.
நாளை இரவு சென்னையில் உள்ள ஐடிசி நட்சத்திர விடுதியில் தங்கும் அவர், நாளை மறுநாள் ராய்ப்பூர் புறப்பட்டுச் செல்கிறார்.
முடிவை அறிவித்த ஒவைசி.. ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு

ஜனாதிபதி தேர்தல்
ஜூலை 18-ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி மர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா களம் காண்கிறார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செயல்தலைவராக இருந்த அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதன் காரணமாக தனது கட்சிப்பதவியை ராஜினாமா செய்தார்.

தமிழகம் வருகை
தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக நாளை நண்பகல் சென்னை வருகிறார் யஷ்வந்த் சின்ஹா. நாளை மாலை 5 மணியளவில் திமுக தலைமை அலுவலம் செல்லும் அவர், அங்கு முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு கோருகிறார். அதன் பிறகு மாலை 7 மணியளவில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் அவர் அதைத் தொடர்ந்து இரவு சென்னையிலெயே தங்குகிறார்.

பாதுகாப்பு அதிகரிப்பு
முன்னதாக அவர் இன்று மாலை கேரளா சென்று அம்மாநிலத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டுகிறார். யஷ்வந்த் சின்ஹா சென்னை வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அவர் தங்கவுள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுத்தியில் உயர் அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன.

பிரஸ் மீட்
முதலமைச்சர் ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பிறகு அவருடன் இணைந்து நாளை மாலை 6 மணிக்கு சென்னையில் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார் யஷ்வந்த் சின்ஹா. மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியின் போது யஷ்வந்த் சின்ஹா நிதி அமைச்சராக இருந்தவர் என்பது கூடுதல் தகவலாகும்.