நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து களம் காணவும் தயார்! பேராசிரியர் சீனிவாசன் துணிச்சல்!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து களம் காணவும் தயாராக இருப்பதாக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே அதிமுக -பாஜக கூட்டணி எப்போதுமே சுமூகமாகவே உள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
பாஜக தனித்து போட்டியிட தயார் என்ற பேராசிரியர் சீனிவாசனின் கருத்து அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
நாகர்கோவில் புரியுது.. ஆமா.. அது ஏன் சிவகாசி? பாஜக போடும் பக்கா பிளான்.. பரபரப்பு பின்னணி!

மாவட்டத் தலைவர்கள்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக மாவட்டத் தலைவர்களுடன் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தியிருக்கிறார். பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெற்றிவாய்ப்புள்ள இடங்கள், அதிமுகவுடனான கூட்டணி குறித்து விரிவாக பேசியிருக்கிறார்.

தனித்து போட்டியிட
முன்னதாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பாஜக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணவும் தயாராக இருப்பதாக கூறினார். அதிமுக -பாஜக கூட்டணியை பொறுத்தவரை எப்போதுமே சுமூகமான உறவுடன் இருப்பதாக பேராசிரியர் சீனிவாசன் தெரிவித்தார். அதிமுக தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படாதது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்றார்.

சுமூக உறவு
மேலும், திமுகவுடன் கூட பாஜகவுக்கு சுமூகமான உறவு இருந்து வருவதாகவும் கொள்கை ரீதியாகவே எதிர் எதிர் அணியில் இருக்கிறோம் எனவும் பாஜக மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் தெரிவித்திருக்கிறார். கட்சித் தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதை ஏற்று செயல்பட தொண்டர்கள் தயாராக இருப்பதாகவும் இன்று கூட்டணி குறித்து மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பார் எனவும் தெரிவித்தார்.

நயினார் கருத்து
அதிமுக தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்து ஒன்று இரு கட்சி நிர்வாகிகளிடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. நீரு பூத்த நெருப்பாக புகைந்து கொண்டே இருப்பதால் இடப்பங்கீடு விவகாரத்தில் அதிமுக -பாஜக இடையே இழுபறி நீடித்து வருவது கவனிக்கத்தக்கது.