• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

முதன்மை பிரச்சனைகளை திசைதிருப்பும் இயக்குநர் ரஞ்சித்... நீங்கள் யார்? சுப.வீரபாண்டியன் சுளீர் கேள்வி

|
  முதன்மை பிரச்சனைகளை திசைதிருப்பும் இயக்குநர் ரஞ்சித்...சுப.வீரபாண்டியன் சுளீர் கேள்வி

  சென்னை: தமிழகத்தில் முதன்மை பிரச்சனைகள் வரும்போது எல்லாம் இயக்குநர் ரஞ்சித் அவற்றை திசைதிருப்பும் வகையில் கருத்துகளை வெளியிட்டு வருவதாக திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப. வீர்பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.

  இது தொடர்பாக கருஞ்சட்டை தமிழர் வார மின் இதழில் பேராசிரியர் சுப. வீர்பாண்டியன் எழுதியுள்ளதாவது:

  திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் - தானுண்டு, தன் வேலையுண்டு என்று திரைப்படங்களை மட்டும் இயக்கிக் கொண்டு, தனக்குக் கிடைத்துள்ள புகழைப் பணமாக்கிக் கொண்டு வாழும் தன்னலவாதியில்லை. சமூகச் சிந்தனையோடு பல நேரங்களில் குரல் கொடுப்பவர். அதுவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, வெளிப்படையாக வெளியில் வந்து தன் கருத்துகளை வெளியிடும் போர்க்குணமுடையவர்.

  தன் படத்தில் வரும் வில்லனை ஒரு இராம பக்தனாகக் காட்டக்கூடிய அளவிற்குத் துணிச்சல் உள்ளவர். படங்களை இயக்குவதோடு நின்றுவிடாமல், 'பரியேறும் பெருமாள்' போன்ற தரமான படங்களைத் தந்திருக்கும் தயாரிப்பாளர்.

  சமூகநீதிக் கோட்பாட்டில் ஈடுபாடு உடையவர்கள், இயக்குனர் ரஞ்சித்தைப் பாராட்டுவதற்கு இவற்றை விட வேறு தகுதிகள் என்ன வேண்டும்? ஆதலால் நம் போன்றவர்களால் பாராட்டப்படக் கூடியவரே பா. ரஞ்சித்.

  ரஞ்சித் எனும் புரியாத புதிர்

  ரஞ்சித் எனும் புரியாத புதிர்

  எனினும், சில வேளைகளில் அவர் நடந்துகொள்ளும் முறைகள், அவர் வெளியிடும் முரண்பட்ட கருத்துகள், ஒரு பெரிய சிக்கல் சமூக அரங்கில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், அவர் இன்னொரு விவாதத்தை முன்னெடுத்து, அடிப்படைச் சிக்கலைத் திசை திருப்பிவிடும் விதம் ஆகியன, அவர் யார் என்னும் பெரிய வினா ஒன்றையும் நம்முள் எழுப்புகிறது.முற்போக்காளர்களை அவர் எதிர்ப்பதும், முற்போக்காளர்களான பொதுவுடைமைக் கட்சி நண்பர்கள் அவரை ஆதரிப்பதும் நமக்குத் புரியாத புதிராக உள்ளது. ஒருவேளை, அவர் பேச்சில் உள்ள நல்ல பகுதிகளை மட்டும் அவர்கள் ஆதரிக்கிறார்கள் போலும் என்று நாம் கருத வேண்டியுள்ளது.

  திருப்பனந்தாளில் ரஞ்சித் பேச்சு

  திருப்பனந்தாளில் ரஞ்சித் பேச்சு

  அண்மையில் திருப்பனந்தாளில் அவர் ஆற்றியுள்ள உரையின் அடிப்படையில்தான், மேலே உள்ள முன்னுரை தேவையானதாக ஆகிவிட்டது. அந்த உரையில் மூன்று பகுதிகள் உள்ளன. ஒன்று, ராஜராஜ சோழனைப் பற்றியது. இன்னொன்று, தலித் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது தொடர்பானது, மூன்றாவது, நீதிக்கட்சிக்கும், முற்போக்காளர்களுக்கும் எதிரானது.

  ராஜராஜ சோழனுக்கு ஆதரவு- எதிர்ப்பு

  ராஜராஜ சோழனுக்கு ஆதரவு- எதிர்ப்பு

  ராஜராஜ சோழன் பற்றிய அவர் கருத்து குறித்தே இப்போது பல விவாதங்கள் நடந்து வருகின்றன. சோழ மன்னன் பற்றிய அவர் கருத்து ஒன்றும் புதிதில்லை. வரலாற்று நூல்களிலேயே அம்மன்னனைப் பற்றிய இருவேறு கருத்துகளும் பதிவாகி உள்ளன. குறிப்பாக, சோழர் வரலாறு பற்றிய ஆய்வுகளை நடத்தியுள்ள, கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, தி.வை. சதாசிவப் பண்டாரத்தார், முனைவர் ஆ. பத்மாவதி ஆகியோரும், புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் கே.கே.பிள்ளை போன்றவர்களும் சோழர்கள் பற்றிய பல வரலாற்றுக் குறிப்புகளை, அம்மன்னர் காலத்துச் செப்பேடுகள், கல்வெட்டுகள், மெய்க்கீர்த்திகள் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டு பதிவு செய்துள்ளனர். கவிஞர் இன்குலாப் போன்ற சிந்தனையாளர்களும், ராஜராஜ சோழனின் ஆட்சிமுறைக்கு எதிரான தங்கள் கருத்தை வெளிப்படையாக எழுதியுள்ளனர்.

  ராஜராஜனின் புகழ்

  ராஜராஜனின் புகழ்

  தான் ஆட்சிக்கு வந்த மூன்றாம் ஆண்டே, "காந்தளூர்ச் சாலைக் கலமறுத்து" வெற்றிகொண்ட ராஜராஜன், தொடர்ந்து பல போர்க்களங்களைக் கண்டதும் வென்றதும், மன்னனின் வீரத்திற்கும், நாடு பிடிக்கும் மன்னர்களின் பொதுவான போக்கிற்கும் சான்றுகளாக உள்ளன. நில அளவை (land survey), முறையைக் கொண்டுவந்ததும், சுற்று வட்டாரத்தில் மலைகளே இல்லாதபோது, 216 அடி உயரக் கோபுரத்தைக் கட்டியதும், புலிக்கொடியைக் கடல்கடந்து பறக்கவிட்டதும் அம்மன்னனின் புகழுக்கு காரணங்கள் ஆயின. அதே வேளையில், பார்ப்பனர்களுக்கு இறையிலி (வரியில்லாத) நிலங்களை வழங்கியதும், பொட்டுக் கட்டும் பழக்கத்திற்கு ஆதரவாக தேவதாசி முறையை ஊக்குவித்ததும் அவர் பற்றிய விமர்சனங்களுக்குக் காரணங்களாயின.

  ரஞ்சித் மீது அவதூறுகள்

  ரஞ்சித் மீது அவதூறுகள்

  வரலாற்றை ஆராய்வதும் விமர்சனம் செய்வதும் எல்லோருக்கும் உள்ள உரிமை. ஆய்வுக்கு அப்பாற்பட்டவர்கள் எவருமில்லை. ஆனால் ரஞ்சித் விமர்சனம் அல்லது அவதூறு செய்துவிட்டாரென்று ஒரு காவல் நிலைய ஆய்வாளர், தானே முன்வந்து வழக்குப் பதிவு செய்வதும், இந்துத்துவக் கட்சிகள் சிலவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்வதும் விந்தையானவை. வழக்குகளைத் தாண்டி, மிக இழிவான சாதிய அவதூறுகளும், வெளிப்படையான மிரட்டல்களும் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. இயக்குனர் ரஞ்சித் பறையர் இல்லை, சக்கிலியர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று ஒருவர் ரத்தப் பரிசோதனை செய்து கண்டுபிடித்துத் தன் காணொளியில் பதிவிட்டு, அருந்ததியர் சமூகத்தையே தரக்குறைவாகப் பேசுகின்றார். ரஞ்சித்தின் நாக்கை அறுத்துவிடுவேன் என்கிறார். அவர் வேளாளர் குலத்து வேந்தராம். அவர் மீது இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

  எச்.ராஜாக்கள் துள்ளல்

  எச்.ராஜாக்கள் துள்ளல்

  வழக்கம்போல், ஹெச்.ராஜா துள்ளிக்குதித்து வெளியில் வந்து ரஞ்சித்தைச் சாடியிருக்கிறார். இன்னொரு அம்மையார், ரஞ்சித்துக்கு வரலாற்று அறிவே இல்லை, சங்க கால மன்னனான ராஜராஜ சோழன் (?) பற்றிப் பேச இவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கிறார். அந்த அம்மையாரின் வரலாற்று அறிவை எண்ணி நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை!

  தலித்துகளுக்கு எதிரானதா நீதிக்கட்சி

  தலித்துகளுக்கு எதிரானதா நீதிக்கட்சி

  இவைபோன்ற மிரட்டல்களை, மத வெறியர்களின் தாக்குதல்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். ரஞ்சித்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கின்றோம். பழைய வரலாற்றை விமர்சனம் செய்யும் உரிமை எல்லோருக்கும் உள்ளது என்பதை எடுத்துக் கூறுகின்றோம். ஆனால் ரஞ்சித்தோ, நம்மைத்தான் தாக்குகிறார். பார்ப்பனர்களை எதிர்ப்பது தலித் ஆதரவாகாது என்கிறார். நீதிக்கட்சி தலித்துகளுக்கு எதிரானது என்கிறார். அது மட்டுமல்லாமல், தன்னை எதிர்க்கும் பார்ப்பனர்கள் நேர்மையான எதிரிகள் என்றும், இடையில் இருக்கும் 'முற்போக்காளர்களைத்தான்' நாம் முதலில் எதிர்க்க வேண்டும் என்றும் கூறுகின்றார். அவருக்கு ஆதரவாக வெளியாகியுள்ள ஒரு காணொளியோ, சூத்திரர்கள் தங்களிடமிருந்து பறித்துக்கொண்ட நிலங்களை மீட்க வேண்டும் என்கிறது.

  நீதிக்கட்சியின் சாதனைகள்

  நீதிக்கட்சியின் சாதனைகள்

  vநீதிக்கட்சி தலித்துகளுக்கு எதிரானது என்பதற்கு ரஞ்சித் தரும் சான்று என்ன? தன்னிடம் வேலைபார்த்த ஒருவர், நீதிக்கட்சிக்கு வாக்களிக்காததால், அந்த தலித் பணியாளை வேலையிலிருந்து நீக்கி விட்டாராம். எனவே, நீதிக்கட்சி தலித்துகளுக்கு எதிரானதாம். அந்த நிகழ்ச்சி உண்மையானதாகவே இருக்கட்டும். யாரோ ஒருவர் செய்த செயல் எப்படி ஒரு கட்சியின் போக்கைத் தீர்மானிக்கும்? நீதிக்கட்சி ஆட்சியில் இருந்தபோது தலித் மக்களுக்கு என்னவெல்லாம் செய்துள்ளது என்று பார்க்க வேண்டாமா?. நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே, சமூக நீதிக்கான ஆணை வெளியிடப்பட்டதே! 1921 ஆகஸ்ட் 16 ஆம் தேதி, மக்கள் தொகை அடிப்படையில் அரசுப் பணிகள் வழங்கப்பட வேண்டும் என்று ஆணியிட்டதே, அது தலித்துகளுக்கு எதிரானதா? 1922 மார்ச் 25 ஆம் தேதி, ஒடுக்கப்பட்ட மக்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப, பஞ்சமர் என்ற பெயர் நீக்கப்பட்டு, ஆதிதிராவிடர் என்று பெயரிடப்பட்டதே, அது தலித்துகளுக்கு எதிரானதா? தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டு மனை வழங்கியது, கல்விக்கு உதவித்தொகை வழங்கியது, தனியார் பேருந்துகளில் அவர்களை ஏற்ற மறுத்தால், பேருந்துகளின் உரிமம் ரத்தாகும் என்று அறிவித்தது என்று நீதிக்கட்சியின் செயல்பாடுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். அதேபோல, திமு கழக ஆட்சியிலும், செய்யப்பட்ட சமூக நீதிச் செயல்களைப் பட்டியலிடலாம். எனினும் என்ன பயன்? தூங்குகின்றவர்களைத்தான் எழுப்ப முடியும், தூங்குவது போல நடிப்பவர்களை எப்படி எழுப்புவது?

  ரஞ்சித் யார்?

  ரஞ்சித் யார்?

  இங்கேதான், ரஞ்சித் அவர்கள் குறித்து நம்மிடம் இரண்டு ஐயங்கள் எழுகின்றன. நம் எல்லோருக்கும் பொதுவான எதிரியை விட்டுவிட்டு, சமூகநீதியைச் சாய்க்க விரும்புகின்றவர்களிடம் மென்மையாகவும், நம்மிடம் கடுமையாகவும் ஏன் அவர் நடந்து கொள்கின்றார்? இரண்டாவது, நாட்டில் முதன்மையான செய்திகள் களத்தில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுதுகளிலெல்லாம் ரஞ்சித் ஏன் வேறு செய்தியைத் தளத்திற்குக் கொண்டுவருகிறார்?

  ரஞ்சித்தின் திசை திருப்பல்கள்

  ரஞ்சித்தின் திசை திருப்பல்கள்

  எடுத்துக்காட்டாகச் சிலவற்றைப் பார்க்கலாம். அனிதாவின் மரணம் பற்றி நாடே கொந்தளித்துக் குமுறிய நேரத்தில், ரஞ்சித், இயக்குனர் அமீரின் ஒலிவாங்கியைப் பறித்துப் பறித்துப் பேசினார். உடனே எல்லா ஊடகங்களும், அனிதாவை விட்டுவிட்டு, ரஞ்சித்-அமீர் மோதல் பற்றி விவாதிக்கத் தொடங்கிவிட்டன. சென்ற தேர்தல் நேரத்தில், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணிப் பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தலித் கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஏழு தொகுதிகளில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்றார். அது சரியா, தவறா என்ற விவாதம் கிளம்பியது.

  இப்போது புதிய கல்விக் கொள்கை என்னும் பெயரில், மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிடுவதை முற்போக்காளர்கள் அனைவரும் கடுமையாக எதிர்த்துப் பரப்புரை செய்துகொண்டிருக்கும் நேரத்தில், ரஞ்சித் ராஜராஜ சோழன் குறித்து வெகுண்டெழுந்து பேசுகின்றார். முற்போக்காளர்களை எதிர்க்க வேண்டும் என்கிறார். இப்போது மொழிக்கொள்கை பற்றிய விவாதம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, ராஜராஜன் முன்னுக்கு வந்து விட்டார்.

  ரஞ்சித்தால் குழப்பம்

  ரஞ்சித்தால் குழப்பம்

  குழப்பமாக இருக்கிறது ரஞ்சித்! நட்பு முரண் எது, பகை முரண் எது என்று புரியவிடாமல் ஏன் குழப்புகின்றீர்கள்? முதன்மையான சிக்கல்கள் வரும்போதெல்லாம், ஏன் வேறு சிக்கலைக் கொண்டுவருகின்றீர்கள்? ஆரியத்தைத் தாக்க வேண்டிய நீங்கள் ஏன் திராவிடத்தையே குறிவைத்த்துத் தாக்குகின்றீகள்? நம்மிடையே ஒற்றுமையை வளர்ப்பதற்கு மாறாக, ஏன் பிரிவினையை, பகைமையை வளர்க்கின்றீர்கள்?

  சொல்லுங்கள் ரஞ்சித்.........நீங்கள் யார்?

  இவ்வாறு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் எழுதியுள்ளார்.

  பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Dravida Iyakka Thamizhar Peravai secretary Prof. Subaveerapandian has questioned on Director Ranjith's controversial Comments.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more