சொத்து வரி உயர்வை விடுங்க... காலி மனைக்கு வரி உயர்த்தப்பட்ட செய்தி தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் சொத்துவரி உயர்வை அடுத்து காலி மனைக்கு வசூலிக்கப்படும் வரியும் 100% உயர்த்தப்பட்டு இருப்பது நகராட்சி நிர்வாக இயக்குநர் வெளியிட்ட சுற்றறிக்கையின் மூலம் தெரியவந்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி, ஊராட்சிகளுக்கான சொத்து வரி பன்மடங்கு உயர்த்தப்பட்டது.

இதற்கு அதிமுக, பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுகவின் கூட்டணியில் இடம்பெற்று உள்ள சில கட்சிகளும் சொத்து வரி உயர்வை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனால் தமிழ்நாடு அரசு எதிர்கொண்டு வரும் விமர்சனங்கள் ஓயாத நிலையில், காலி மனைகளுக்கான வரி விதிப்பும் 100% உயர்த்தப்பட்டு உள்ளது தற்போது தெரியவந்து இருக்கிறது. தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குநர் அனைத்து மாநகராட்சி ஆணையர்கள், அனைத்து நகராட்சி ஆணையர்கள், அனைத்து நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்களுக்கு கடந்த 6 ஆம் தேதி எழுதியுள்ள சுற்றறிக்கையின் இந்த தகவல் வெளியில் தெரிய வந்துள்ளது.
அவர் தனது சுற்றறிக்கையில், "காலி மனை வரிவிதிப்பை பொறுத்தவரை 100% உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளதால் சொத்துவரி சீராய்வு நடைமுறைகள் முடிவுக்கு வரும்வரை புதிதாக பெறப்படும் காலிமனை வரிவிதிக்க கோரும் விண்ணப்பங்களை உரிய விதிகளை பின்பற்றி பரிசீலனை செய்து பல்வகை ரசீது / வைப்பு ரசீதாக தற்காலிகமாக வழங்கலாம் எனவும், சீராய்வு பணிகள் முடிவுற்றவுடன் புதிய வரி விகிதங்களின் படி வரிவிதிப்பு செய்தல் வேண்டும் எனவும், அவ்வாறு கணக்கீடு செய்த வரிவிதிப்பு கேட்பு தொகையினை ஏற்கெனவே பல்வகை / வைப்புத் தொகையாக வசூலிக்கப்பட்ட தொகையினை ஈடு செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கட்டிட விண்ணப்ப நடைமுறை தடையின்றி செயல்பட மென்பொருளில் தேலையான மாற்றங்களை செய்ய இவ்வலுவலக கணினி ஆராய்வாளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார். மேற்காணும், நடைமுறைகளை பின்பற்றி அனைத்து மாநகராட்சி / நகராட்சி ஆணையர்கள் மற்றும் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.