2 நாளில் இப்படியா? நேராக களமிறங்கிய பிடிஆர்.. வருத்தம் தெரிவித்த ஆர்பிஐ.. பின்னணியில் நடந்தது என்ன?
சென்னை: குடியரசுத் தின விழாவில் ஆர்பிஐ ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காதது குறித்து நேற்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காட்டமாக ட்விட் செய்து இருந்தார். இதை தொடர்ந்து பிடிஆரை சந்தித்து ஆர்பிஐ நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.
நேற்று நாடு முழுக்க குடியரசு தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் சென்னை ஆர்பிஐ அலுவலகத்தில் நடந்த குடியரசுத் தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது அங்கு இருந்த ஊழியர்கள் எழுந்து நிற்கவில்லை என்று புகார் வைக்கப்பட்டது.
தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்ட போது வேண்டுமென்றே ஊழியர்கள் எழுந்து நிற்காமல் பிரச்சனை செய்ததாக சர்ச்சை எழுந்தது. தமிழ்நாட்டில் நடக்கும் விழாக்களில் கண்டிப்பாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும் என்ற சட்டம் உள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு விவகாரம் - சர்ச்சைக்கு பிறகு வருத்தம் தெரிவித்தது ரிசர்வ் வங்கி

கட்டாயம்
தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து முதல்வர் ஸ்டாலின் கடந்த டிசம்பர் 17ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். மேலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் நிகழ்ச்சிகள் துவங்குவதற்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மீறல்
ஆனால் இதை மீறி ஆர்பிஐ ஊழியர்கள் நேற்று நடந்த விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்ட போது அதற்கு எழுந்து நிற்காமல் பிரச்சனை செய்தனர். அங்கு இருந்த சிலர் இது பற்றி கேட்டும் கூட ஆர்பிஐ ஊழியர்கள் எழுந்து நிற்க ஆணவமாக மறுத்துள்ளனர். நாங்கள் ஏன் நிற்க வேண்டும்.. தமிழ் தாய் வாழ்த்திற்கு நிற்க வேண்டாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதனால் நாங்கள் நிற்கவில்லை என்று ஆர்பிஐ ஊழியர்கள் ஆணவமாக தெரிவித்துள்ளனர்.

புகார்
இந்த சம்பவத்திற்கு தமிழ்நாட்டில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட பலர் ஆர்பிஐ ஊழியர்களின் செயலை கண்டித்து இருந்தனர். இதையடுத்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. சென்னை மாநகர காவல் துறையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேஷ் ஆன்லைன் மூலம் புகார் தரப்பட்டது. தமிழக அரசாணையை அவமதித்து ஆர்பிஐ அதிகாரிகள் செயல்பட்டதாக புகார் வைக்கப்பட்டது.

பிடிஆர் கோபம்
அதேபோல் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் இதில் கோபமாக கருத்து தெரிவித்தார். அதில், வங்கிகள் என்பவை அத்தியாவசிய சேவைகள். அதிலும் வங்கிகளை கட்டுப்படுத்த கூடிய ஆர்பிஐ என்பது மிகவும் அத்தியாவசியமான சேவை. இப்படிப்பட்ட நிலையில் ஆர்பிஐ ஊழியர்கள் தொடர்பான இந்த வீடியோ கவலை அளிக்கிறது. அதிலும் கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் மாநில வங்கியாளர்கள் குழுவுடன் தமிழ்நாடு வங்கிகள் குறித்து ஆலோசனை செய்தேன்.. இந்த மீட்டிங் முடிந்த 2 நாட்களில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோ பற்றி விசாரிப்போம், குழப்பங்களுக்கு முடிவு கட்டுவோம், என்று குறிப்பிட்டு இருந்தார்.

தமிழ் முக்கியம்
இரண்டு நாட்களுக்கு முன் தலைமைச் செயலகத்தில் மாநில வங்கியாளர் குழுவினருடன் நிதி அமைச்சர் பிடிஆர் ஆலோசனை செய்தார். இதில், அனைத்து வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்கள், படிவங்களில் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், வங்கியின் உதவி மையங்கள் மற்றும் பொது மக்களுடன் தொடர்பில் இருக்கும் அலுவலர்கள் தமிழ் நன்கு அறிந்திருக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் இந்த கூட்டம் நடந்த இரண்டே நாட்களில் இப்படி தமிழ் தாய் வாழ்த்து ஆர்பிஐ ஊழியர்கள் மூலம் அவமதிக்கப்பட்டுள்ளது. இதைத்தான் நிதி அமைச்சர் பிடிஆர் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

வருத்தம்
இந்த விவகாரத்தில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் களமிறங்கிய நிலையில், தற்போது ஆர்பிஐ சார்பாக இதில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்பிஐ மண்டல இயக்குநர் எஸ்.எம்.சாமி நிதியமைச்சர் பி.டிஆர். பழனிவேல் தியாகராஜனை வருத்தம் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் தவறு செய்து விட்டனர். அவர்களின் செயலுக்கு ஆர்பிஐ சார்பாக வருத்தம் தெரிவிக்கிறோம் என்று கூறி ஆர்பிஐ அமைப்பின் மண்டல இயக்குநர் எஸ்.எம்.சாமி நிதியமைச்சர் பி.டிஆர். பழனிவேல் தியாகராஜனிடம் தெரிவித்துள்ளார்.