மத்திய அமைச்சரா இருந்தாரே.. ப.சிதம்பரத்தால் தமிழ்நாடு அடைந்த பலன் என்ன.. தமிழிசை கேள்வி
சென்னை: மத்திய நிதியமைச்சராக நீண்ட காலமாக பதவியில் இருந்த ப.சிதம்பரத்தால், தமிழ்நாடு பெற்ற பலன் என்ன என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
"உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு" என முழக்கமிட்ட சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானத்தின் 117-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தமிழ் மொழி, அக்னிபாத் திட்டம், பற்றி ப.சிதம்பரத்தின் விமர்சனம் உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
வேலையை தொடங்கிய மகா. ஆளுநர்.. அதிருப்தி சிவசேனா எம்எல்ஏ வீடுகளுக்கு பாதுகாப்பு தர டிஜிபிக்கு கடிதம்

ப.சிதம்பரம் விமர்சனம்
இந்தநிலையில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் அக்னிபாத் திட்டம் குறித்து ப.சிதம்பரம் பேசுகையில், இந்தியாவின் பொருளாதார கொள்கையை மாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது. கடந்த 31 ஆண்டு பொருளாதாரம் பற்றிய பல அனுபவங்களை கொடுத்துள்ளது. பிராந்தியங்களுக்கு இடையே வேறுபட்ட பொருளாதாரம் நிலவுகிறது. அதேபோல் ராணுவம் என்பது திறனை மேம்படுத்தும் திட்டம் கிடையாது. அக்னி வீரர்களாக வெளியே வருபவர்கள் மிகச் சிறந்த முடி திருத்துவோராகவோ, வீட்டு வேலை செய்பவர்களாக, துணி துவைப்பவர்களாக மாற போகிறார்கள். எங்களுடைய முக்கிய இலக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். இப்போது உள்ள ஜிஎஸ்டி திட்டம் நாங்கள் கொண்டு வந்தது அல்ல என்று தெரிவித்தார்.

தமிழிசை பேச்சு
மா.பொ.சிவஞானத்திற்கு மரியாதை செலுத்திய பின் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ் மொழியை மக்கள் படிக்க படிக்க தான் நமது மொழி செம்மொழியாக வளரும். மா.பொ.சி.க்கு மாலை அணிவிப்பது தமிழுக்கு மாலை அணிவிப்பது போன்று தான். தமிழ் மொழியில் எழுதுவதும், பேசுவதும், தமிழில் பெயர் வைப்பதும் தான் பெருமை என்று நினைத்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

ப.சிதம்பரத்திற்கு பதிலடி
தொடர்ந்து, அக்னி வீரர்கள் என்ற திட்டம் இளைஞர்களை வீரர்களாக மட்டுமல்லாமல், நாட்டின் பாதுகாவலர்களாக மாற்றும் திட்டம். இந்த வீரர்களுக்கு பல்வேறு மாநிலங்களிலும், நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். வெறும் எல்லைக்கு மட்டும் அனுப்புவது அக்னிபாத் திட்டம் அல்ல. தொழிற்நுட்பங்கள் குறித்து திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு. ஆனால் எதுவுமே செய்யாமல் இருந்தவர்கள், இப்போது எதிர்க்குரல் கொடுக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

தமிழிசை கேள்வி
மேலும் ஜிஎஸ்டி குறித்த விமர்சனத்திற்கு பதிலளித்த அவர், நான் அரசியல் பேசக்கூடாது. இருந்தாலும், அவரும் நீண்ட நாட்களாக நிதியமைச்சராக இருந்துள்ளார். அவரால் தமிழ்நாட்டு எந்த அளவிற்கு பலன் பெற்றது என்று கேள்வி எழுப்பினார்.