சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கீழடி அகழாய்வில் வெளிவந்த உறைகிணறுக்கு என்ன முக்கியத்துவம்? ஆர். பாலகிருஷ்ணன் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: கீழடி அகழாய்வில் வெளிவந்த உறைகிணறுகளுக்கு என்ன முக்கியத்துவம் என்பதை சிந்துசமவெளி ஆய்வாளார் ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் விளக்கியுள்ளார்.

இது தொடர்பாக தமது முகநூல் பக்கத்தில் ஆர். பாலகிருஷ்ணன் எழுதியுள்ள பதிவு:

R Balakrishnans explains on Keezhadi Excavations

கேள்வி: கீழடி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட உறைக்கிணறு பற்றி ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊடகங்களிலும் இது பற்றி செய்திகள் வெளிவந்துள்ளன. உறைக்கிணறு என்பதன் முக்கியத்துவம் என்ன? இதுபற்றி சங்க இலக்கியம் குறிப்பிடுகிறதா?

R Balakrishnans explains on Keezhadi Excavations

பதில்: ஆமாம். சங்க இலக்கியம் உறைக்கிணறு பற்றி பின்வருமாறு கூறுகிறது.

"பறழ்ப் பன்றி பல் கோழி,
உறைக் கிணற்றுப் புறச்சேரி
ஏழகத் தகரொடு சிவல் விளையாட" (75-77)

இது பட்டினப்பாலையில் வரும் சொற்சித்திரம்.

காவிரிப்பூம்பட்டினத்தின் அருகே அமைந்த புறநகர்ப்பகுதியை (sub-urban habitat) பற்றிய துல்லியமான படப்பிடிப்பு இது. தமிழ்நாட்டில் ஏற்கனவே நடந்த அகழ்வாய்வுகளில் பல்வேறு இடங்களில் உறைக்கிணறுகள் கிடைத்துள்ளன. உறையூர், பூம்புகார், அரிக்கமேடு, திருக்கோவிலூர், கொற்கை, காஞ்சிபுரம், செங்கமேடு, திருவாமுத்தூர், திருவேற்காடு, மாமல்லபுரம், திருக்காம்புலியூர் போன்ற இடங்களில் கண்டறியப்பட்டுள்ள உறைக்கிணறுகள் இதன் பரவலான பயன்பாட்டிற்குச் சான்றாகும்.

இப்போது கீழடியில் கிடைத்துள்ளது. எனவே உறைக்கிணறு என்பது சங்ககால வாழ்வியலின் பொதுவான உரைகல் என்பது தெளிவாகிறது. காவிரிப்பூம்பட்டினம் அருகே இருந்த உறைக்கிணறு ஒரு புறநகர்ப்பகுதி பற்றிய மேலே குறிப்பிட்ட சங்க இலக்கியச் செய்தியை கையில் வைத்துக்கொண்டு கீழடி அகழ்வாய்வுக் களத்திற்கு செல்லுங்கள்.

அதற்கு முன்பு அந்த நான்கு வரிகளின் எளிய பொருளைத் தெரிந்துகொள்ளுங்கள். "அது ஒரு புறஞ்சேரி, நகரத்தை ஒட்டிய குடியிருப்புப் பகுதி. உறைக்கிணற்றோடு கூடிய அந்தக் குடியிருப்பில் பன்றிகள் பல குட்டிகளுடனும், பல வகையான கோழிகளும், ஆட்டுக் கிடாய்களும், கவுதாரிகளும் விளையாடிக்கொண்டிருந்தன."

இப்போது கீழடியில் நமக்கு கிடைத்திருக்கிற தடயங்களைப் பார்ப்போம். உறைக்கிணறு இருந்த கீழடியில் பன்றி, ஆடுகள் மாடுகள் வளர்க்கப்பட்டதற்கான எலும்புத் தடயங்கள் (புனே நகரிலுள்ள ஆய்வுக்கூடம் உறுதி செய்தபடி) கிடைத்துள்ளன. காட்டுப்பன்றியின் உருவம் பொறித்த சூதுபவளம் கிடைத்துள்ளது. வேறென்ன வேண்டும்?

இப்படிப்பட்ட சூழலை நேரில் பார்த்தால் அப்படித் தான் எழுதத்தோன்றும். சங்க இலக்கியங்கள் புனைகதைகள் அல்ல. அன்றாட வாழ்வியலின் அழகிய படப்பிடிப்பு என்பது தான் உண்மை. கீழடியும் தமிழகத்தின் ஏனைய அகழ்வாய்வுக் களங்களும் அழுத்திச் சொல்வது சங்க இலக்கியத்தின் நம்பகத்தன்மையைத் தான்.

இந்த உறைக்கிணற்றுக் கவிதைக்கும் உண்மையில் நம் கண்முன் அகழ்ந்தெடுக்கப்படும் இந்த உறைக்கிணறுகளும் இடையிலான சூழல் ஒருமை நமக்கு வியப்பூட்டுகின்றன. தமிழகத்தின் பல இடங்களிலும் மேலும் மேலும் தோண்டவேண்டியதன் தேவையையும் இவை அடிக்கோடிடுகின்றன. இவ்வாறு ஆர். பாலகிருஷ்ணன் எழுதியுள்ளார்.

English summary
Indus Valley Scholar R Balakrishnan IAS wrote on the Keezhadi Excavations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X