• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"என்ன பாய்".. பாசத்துடன் அழைத்து மகிழ்ந்த கருணாநிதி.. மறைந்து போனதே அந்த "இடி, மின்னல், மழை"!

|

சென்னை: "என்ன பாய்.. " என்று கருணாநிதி அழைத்தாலே அது சாட்சாத் ரகுமான்கானைதான்.. மறைந்த தலைவர் கருணாநிதியின் செல்லப்பிள்ளை இவர்.. இவர்களுக்குள் உள்ள நெருக்கம் அந்நியோனமானது.. அபரிமிதமானது.. ஆழபூடகமானது.. அப்படிப்பட்ட உன்னத உறவையும், சில அரிய தகவல்களையும் பகிர்ந்து கொள்வதில் "ஒன் இந்தியா தமிழ்" மெத்த பெருமை கொள்கிறது!

ரகுமான்கான் - மாநிறம்தான்.. ஆனால் கவர்ச்சி மிகுந்தவர்.. நெற்றியில் விழும் சுருள்முடியும், அரும்பு மீசையும்தான் இவரது அடையாளம்.. அந்த ஸ்பிரிங் முடி தான் தமிழகம் முழுக்க இவரை தோற்ற ரீதியான அடையாளத்தை கொடுத்தது.. சிரிப்பழகன் என்றுகூட சொல்லலாம்.. கடுகடுவென முகம் இருக்காது.. எப்போதுமே ஒரு மென்மை அந்த முகத்தில் தவழ்ந்து கொண்டே இருக்கும்.

திமுகவிலேயே ஊறி... திமுகவிலேயே வளர்ந்து.. திமுகவின் மூச்சாகவே இவர் வாழ்ந்து முடித்துள்ளார்.. ஆரம்பத்தில் இருந்தே கருணாநிதியின் மனசில் இவர் சம்மனம் போட்டு உட்கார்ந்து கொண்டார்.. 1977-ல் எம்ஜிஆர் முதல்வராக இருக்கிறார்.. எதிர்தரப்பில் மொத்தமே 48 எம்எல்ஏக்கள்தான் இருக்கிறார்கள்.

அய்யய்யே! டிரான்ஸ்பாரன்ட் டாய்லெட்டுகள்.. உள்ளே "இருக்கிறது" அப்படியே தெரியும்?.. ஆனால் ஒரு ட்விஸ்ட்

 3 பேர்

3 பேர்

அதில் முக்கியமானவர்கள் 3 பேர்.. ஒருவர் க.சுப்பு, இரண்டாமவர் துரைமுருகன், மூன்றாவது நபர் ரகுமான்கான்.. மொத்த எம்எல்ஏக்களைவிட, இந்த 3 பேர்தான் அன்று சட்டசபையை ஆட்டிப்படைத்தவர்கள் என்றே சொல்லலாம்.. 3 பேருமே பேச்சில் வல்லவர்கள்.. இவர்கள் எழுந்து கேள்வி கேட்டாலே எம்ஜிஆர் சற்று தடுமாறுவார் என்று சொல்வார்கள்.

 மும்மூர்த்திகள்

மும்மூர்த்திகள்

அதனால்தான் இவர்கள் இடி, மின்னல், மழை என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டனர்.. இதில் ரகுமான்கானை யாராலும் கன்ட்ரோல் செய்யவே முடியாதாம்.. கேள்வியாய் கேட்டு திணறடிப்பாராம்.. சட்டசபை கூட்டத்தொடரில் என்னென்ன கேள்விகளை கேட்க வேண்டும் என்று ரொம்பவே மெனக்கெடுவார்.. அதற்காகவே தன்னை தயார்படுத்தி கொள்வார்.

லைப்ரரி

லைப்ரரி

இவர் எப்ப பார்த்தாலும், சட்டமன்ற வளாகத்தில் உள்ள லைப்ரரியில்தான் இருப்பார்.. சில சமயம், கூட்டம் நடக்கும்போதே டக்கென காணாமல் போய்விடுவார்.. அவையில் எல்லோருக்குமே தெரியும், இவர் லைப்ரரிதான் போயிருப்பார், எப்படியும் நறுக்கென கேள்விகளுடன்தான் திரும்பி வருவார் என்று முடிவு செய்துவிடுவார்கள்.. அதன்படியே கொஞ்ச நேரத்தில் திரும்பி வருவார் ரகுமான்கான்.. கேட்கிற கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது என்றே அதிமுக அமைச்சர்கள் திணறுவார்களாம்.

சட்டசபை

சட்டசபை

வழக்கமாக, கருணாநிதி உட்கார்ந்திருந்தால், அதற்கு பின்சீட்டில்தான் துரைமுருகன், சுப்பு, ரகுமான்கான் உள்ளிட்டோர் உட்கார்ந்திருப்பார்கள்.. சபை விறுவிறுவென நடக்கும்போது, கருணாநிதி பின்பக்கமாக கையை கட்டிக் கொண்டு, ஒவ்வொரு விரலாக நீட்டுவாராம்.. முதல் விரலை காட்டினால் சுப்பு எழுந்து பேச வேண்டும் என்று அர்த்தம்.. 2வது விரலை நீட்டினால் துரைமுருகன் எழுந்து பேச வேண்டும், 3வது விரலை நீட்டினால் ரகுமான்கான் எழுந்து பேசவேண்டும், மொத்தமாக கையை விரித்து காட்டினால், "வெளிநடப்பு" என்று அவர்களுக்குள் அர்த்தமாம். இது அவர்களுக்குள் நடந்த சங்கேத மொழி - இணக்கமான புரிதல் - சிக்னல் கோட்-வேர்டு!

சலசலப்புகள்

சலசலப்புகள்

பல சமயங்களில் இந்த மும்மூர்த்திகள் கேட்கிற கேள்விகளால், சபையில் சலசலப்புகள் எழுந்தபடியே இருந்திருக்கின்றன.. ஒருமுறை, சபாநாயகர் பொறுமை இழந்து, "ஆண்டவன்தான் உங்களை எல்லாம் காப்பாத்தணும்" என்றார்.. உடனே கலைஞர் எழுந்து, "கரெக்ட்.. நான்தான் ஆண்டவன்.. நான் அவங்களை பாத்துக்கறேன்" என்று சொல்லி பின்னால் திரும்பி இவர்களை அமைதிப்படுத்துவாராம்.

 நிகழ்வுகள்

நிகழ்வுகள்

ஒருகட்டத்தில் இந்த 3 பேரையுமே சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர்.. இதையடுத்து, அவர்களால் அவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.. ஆனாலும் கருணாநிதி விடவில்லை.. "சட்டமன்றத்தில் இருந்து நீக்கினால் என்ன, நீங்க மக்கள் மன்றத்துக்கு போங்க" என்று 3 பேரையும் தமிழகம் முழுக்க கூட்டம் போட்டு பேச சொல்லிவிட்டார்.. அதன்படியே இவர்கள் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் முழங்கினர்.

 காமெடி பேச்சு

காமெடி பேச்சு

இதில், ரகுமான்கான் பேச்சு என்றால் பொதுமக்கள் திரண்டு திரண்டு வருவார்கள்.. அவ்வளவும் காமெடியாக பேசுவார்.. எம்ஜிஆர் முதற்கொண்டு எல்லாருமே ரசிப்பார்கள்.. கட்சி பேதமற்று இவர் பேச்சை கேட்பார்கள்.. மேடையில் திடீரென "பெரியவர் எம்ஜிஆர்" என்று சொல்வாராம்.. இது எம்ஜிஆரின் வயதை குறிப்பிடுவதாக நினைத்து ரத்தத்தின் ரத்தங்கள் அப்போது கொந்தளித்து விடுவார்களாம்... இவர்கள் 3 பேரையும் சமாளிக்கவும், அவர்கள் மேடைகளில் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்கவே ஜெயலலிதாவை முன்னிறுத்தியதாகவும் ஒரு பேச்சு உண்டு.

 ருத்ரதாண்டவம்

ருத்ரதாண்டவம்

இவர் வீடு, அன்று சென்னை அரசினர் தோட்டம் அருகே இருந்தது.. இவரது ஆவேசத்தை குறைக்கும் வகையில், வீட்டின் மீது கையெறி குண்டு வீசிவிட்டார்கள்.. ஆனால் ரகுமானை அப்போதும் அடக்க முடியவில்லை.. இன்னும் சொல்ல போனால், சண்டமாருதம் வீரியமானது.. ருத்ரதாண்டவம் அதிகமானதுதான் மிச்சம்... இவர் கூட்டத்தில் பேசுகிறார் என்றாலே தமிழகமே ஆவலாக காத்திருந்த காலம் உண்டு.. முரசொலியில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்துள்ளார்.. அந்த அனல் கக்கும் எழுத்தை கலைஞர் விரும்பி ரசித்து படிப்பாராம்.

 அழியா பேச்சு

அழியா பேச்சு

கடைசிவரை கருணாநிதி இவர்மீது பாசத்தை பொழிந்தே வந்தார்.. துரைமுருகனை, "யோவ் துரை" என்பார்.. ரகுமான்கானை "என்ன பாய்".. என்று செல்லமாக அழைப்பார்.. இவ்வளவு ஸ்பெஷல் வாய்ந்த மூத்த தலைவரை இன்று கட்சி இழந்துள்ளது.. சிறுபான்மை மக்களுக்கு என்று இவரை ஒருகட்டத்துக்குள், வட்டத்துக்குள் அடக்கிவிட, ஒதுக்கிவிட முடியாது.. இவர் ஒட்டுமொத்த திமுகவின் சொத்து.. இன்று ஒரு நகைச்சுவையே சாய்ந்துவிட்டது.. மதிப்பிற்குரிய ரகுமான்கான் மறைந்தாலும், எரிமலையென முழங்கிய அந்த பேச்சுக்கள் அத்தனையும் திமுக வரலாற்றின் கனலாக என்றுமே தகதகத்து இருக்கும்!

 
 
 
English summary
rahman khan was dmk's big asset
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X