ஸ்டாலின் வச்ச குறி...இபிஎஸ் தப்ப முடியாது - ரெய்டு உறுதி என்கிறார் நாஞ்சில் சம்பத்
சென்னை: ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் தங்கம், வைரம், வெளிநாட்டு கரண்சி மற்றும் சொத்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டு, அங்கிருந்த காவலாளியை கொலை செய்ய உத்தரவிட்டது எடப்பாடி பழனிச்சாமி தான் என நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார். முதல்வர் ஸ்டாலினின் குறியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி தப்ப முடியாது என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 19ஆம்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் இறுதிக்கட்ட பிரசாரத்தில் வேட்பாளர்களும் நட்சத்திர பேச்சாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.
“உங்களில் ஒருவன்..” முதல் முறையாக.. இம்மாதம் வெளியாகிறது முதல்வர் ஸ்டாலின் சுயசரிதை!
தமிழக நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் எட்டுமுனைப் போட்டி நிலவுகிறது. அதிமுக திமுக இடையே பல வார்டுகளில் நேரடி போட்டி நிலவுவதால் பிரசார களத்தில் அனல் பறக்கிறது.

விவாதிக்க நான் தயார்
தேனி மாவட்டம் கூடலூர் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று நாஞ்சில் சம்பத் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக சாடினார். கடந்த 10ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த இருப்பதுதான் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பெரும் சாதனை . நீட் தேர்வு குறித்து ஒரே மேடையில் விவாதிக்கலாம் என முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ள எடப்பாடி பழனிச்சாமியுடன் நான் விவாதிக்கத் தயார் என்று கூறினார்.

இபிஎஸ் வீட்டில் ரெய்டு வரும்
அதிமுக-பாஜக இடையிலான கூட்டணி முறிந்த நிலையில், அண்ணாமலை-எடப்பாடி பழனிச்சாமி இருவரும் வெவ்வேறு கருத்துக்களைக் கூறி மக்களை குழப்பி வருகின்றனர் என்றார். தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் வீட்டில் இன்றைக்கு சோதனை நடைபெறுகிறது. பிப்ரவரி 19ஆம் தேதிக்கு பிறகு அவரது வீட்டிலும் சோதனை நடைபெறும்.

ஸ்டாலின் வைத்த குறி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் தங்கம், வைரம், வெளிநாட்டு கரண்சி மற்றும் சொத்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டு, அங்கிருந்த காவலாளியை கொலை செய்ய உத்தரவிட்டது எடப்பாடி பழனிச்சாமி தான் என நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டினார். அப்போது நடைபெற்ற விசாரணை வளையத்தில் இருந்து அவர் தப்பி விட்டார். ஆனால் தற்போதைய முதல்வர் ஸ்டாலினின் குறியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி தப்ப முடியாது என்றும் நாஞ்சில் சம்பத் கூறினார்.

கொள்ளையடித்த மாஜி அமைச்சர்கள்
கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த வீரமணி, தங்கமணி, வேலுமணி ஆகியோர் கொள்ளையடித்ததாகவும், அதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பங்கு கொடுத்ததாகவும் குற்றம் சாட்டினார். அதன் மூலம் தமிழகத்தில் ஊராட்சிக்கு தலா ஒரு கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டுவதாகவும் பிரசாரம் செய்தார் நாஞ்சில் சம்பத்.