மொத்தமாக ரசிகர்களை கழற்றி விட்ட ரஜினி மன்றம்.. அப்படீன்னா.. இனி எப்பவுமே இல்லையா!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் கட்சி ஆரம்பிப்பார் என்று அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தனர். 2020ஆம் ஆண்டுடன் அந்த ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் ரஜினிகாந்த். அவர் நிச்சயம் வருவார் என்று நம்பிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு, ரஜினி அரசியலுக்கு வரவே மாட்டார் என்றும், ரசிகர்கள் விரும்பினால் வேறு கட்சிகளில் இணைந்து பணியாற்றலாம் என்றும் இன்று வி.எம்.சுதாகர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

சினிமா நடிகராக இருந்த ரஜினிகாந்த் 1996ஆம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு எதிராகவும் திமுகவிற்கு ஆதரவாகவும் வாய்ஸ் கொடுத்தார். அப்போது முதலே ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.
நான் எப்ப வருவேன்... எப்படி வருவேன்னு சொல்ல மாட்டேன். வரவேண்டிய நேரத்திற்கு நிச்சயம் வருவேன் என்று திரைப்படங்களில் வசனம் பேசினார் ரஜினிகாந்த். காலங்கள் பல சென்றாலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தபாடில்லை. அவர் வருவார் வருவார் என்று ரசிகர்கள் பல ஆண்டுகாலமாக காந்திருந்தனர்.
"எங்க வேணும்னாலும் போங்க.." ரஜினி மக்கள் மன்றம் பரபரப்பு அறிக்கை.. அப்போ "வாய்ஸ்" கூட கிடையாதா?

ரஜினியின் அரசியல் அறிவிப்பு
ஜெயலலிதா, கருணாநிதி உயிரோடு இருந்த வரைக்கும் அரசியல் பயணம் பற்றி எதுவும் சொல்லாத 2017ஆம் ஆண்டு ரசிகர்களை சந்தித்து பேசினார். அப்போது தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், தனது அரசியல் பயணம் ஆன்மீக அரசியலாக இருக்கும் என்றும் கூறினார். ரஜினியின் ஒற்றை அறிவிப்பினால் மகிழ்ந்து போன அவரது ரசிகர்கள் கரைவேட்டி கனவில் மிதந்தனர். அதன்பிறகு மீண்டும் சைலண்ட் மோடுக்கு போனார் ரஜினிகாந்த்.

காலங்கள் போனதே
மூன்று ஆண்டுகள் கடந்த பின்னரும் சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்திய ரஜினிகாந்த் திடீரென கடந்த ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் ரசிகர்களை சந்தித்து தான் கட்சி ஆரம்பிப்பது உறுதி என்றும் முதல்வர் வேட்பாளராக நான்
இருக்க மாட்டேன் என்றும் கூறினார்.

அரசியல் ட்வீட்
திடீரென ட்வீட் மூலம் தனது அரசியல் நிலைப்பாட்டை உறுதிப்படுத்திய ரஜினி, இப்ப இல்லைன்னா எப்பவும் இல்லை என்று சொன்னார். நவம்பர் 30ஆம் தேதி நிர்வாகிகளைக் சந்தித்து பேசி தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று சொன்னார். டிசம்பர் 31ஆம் தேதி தனது அரசியல் பயணம் பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்று சொன்னார்.

தமிழருவி மணியன்
தனது கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனை நியமித்தார். பாஜகவில் பொறுப்பு வகித்த அர்ஜூன மூர்த்தி ரஜினி கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக இணைந்தார். அண்ணாத்தே படப்பிடிப்புக்கு போன இடத்தில் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, அரசியல் பயணத்தை ஒத்தி வைத்தார் ரஜினிகாந்த்.

அரசியலுக்கு வரப்போவதில்லை
உடல் நலப்பிரச்சினையை காரணம் காட்டி தான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று டிசம்பர் 29ஆம் தேதி ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டார் ரஜினிகாந்த். அவரது ரசிகர்கள் இதனால் அதிர்ச்சியடைந்தனர். ரஜினிகாந்த் வீட்டு வாசல் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ரசிகர்கள் போராட வேண்டாம் என்றும் ரஜினியின் முடிவு உறுதியானது என்றும் மக்கள் மன்ற நிர்வாகி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

வேறு கட்சிக்குத் தாவும் ரஜினி ரசிகர்கள்
ரஜினி அரசியலுக்கு வருவார் என்று நம்பி காத்திருந்த அவரது ரசிகர்கள் வேறு பாதையில் பயணிக்க ஆரம்பித்தனர். சிலர் திமுகவிலும், வேறு சிலர் அதிமுகவிலும் இணைந்தனர். இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் மன்ற பதவிகளை ராஜினாமா செய்து விட்டு வேறு கட்சிகளில் இணைந்து கொள்ளலாம் என்று இன்று அறிக்கை வெளியாகியுள்ளது.

வரவே மாட்டார் ரஜினி
ரஜினி இப்போது இல்லாவிட்டாலும் சில ஆண்டுகள் கழித்து அரசியலில் ஈடுபடலாம் என்று பல ரசிகர்கள் நம்பி மக்கள் மன்றத்தில் இருக்கின்றனர். ஆனால் அவர் அரசியலுக்கு வரவே மாட்டார் என்று சொல்லும் வகையில் இன்றைய தினம் மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

ரஜினி ரசிகனின் அரசியல் கனவு
சினிமா ரசிகனாக இருந்து அரசியல்வாதியாக வலம் வரவேண்டும் என்று ஆசைப்பட்ட தங்களின் கனவு வெறும் கனவாகவே போய்விடுமோ என்ற அச்சம் காரணமாகவே வேறு அரசியல் கட்சிகளில் இணைந்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். மன்ற பதவிகளை ராஜினாமா செய்து வேறு கட்சிகளில் இணைந்து கொள்ளலாம் என்றும் வேறு கட்சிகளில் இணைந்தாலும் என்றைக்கும் ரஜினி ரசிகர்தான் மறந்து விட வேண்டாம் என்று கூறியுள்ளார் வி.எம்.சுதாகர்.