• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அப்படியெல்லாம் வசனம் பேச முடியாது.. இனி வெறும் ஸ்டார்தானா.. ரஜினிக்கு காத்திருக்கு பெரிய சவால்!

|

சென்னை: முழுக்க குளிரூட்டப்பட்ட ஒரு ஏசி தியேட்டர்.. அமைந்திருப்பதோ ஒரு மல்டிபிளக்சில்.. வந்திருக்கும் பார்வையாளர்கள் உயர் நடுத்தர வர்க்கம் மற்றும் செல்வந்தர்கள்.

திரையில் தோன்றும் ரஜினி, "நான் எப்ப வருவேன்.. எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது.. ஆனா.." என்று பஞ்ச் டயலாக்கை ஆரம்பிக்கும்போதே, "ஆமா.. ஏன்னா.. அது உங்களுக்கே தெரியாது.." என்று கோரசாக ரசிகர் இருக்கைகளில் இருந்து சத்தம் தியேட்டர் முழுக்க எதிரொலிக்கிறது. ரஜினி என்ன சொல்லி முடித்தார் என்பது அங்கு இருந்த யாருக்கும் கேட்கவில்லை.

"சிங்கம் ஒன்று புறப்பட்டதே.., அதுக்கு நல்ல காலம் பொறந்திருக்கு.., நல்ல நேரம் பிறந்திருக்கும்.. ரெண்டில் ஒன்று பார்க்கும் வரைக்கும், அட ரெண்டு கண்ணில் இல்லை உறக்கம்" என்று திரையில் ரஜினி வாயசைத்தால், "பரவாயில்ல தலைவா.. நல்லா தூங்கி ரெஸ்ட் எடு.. அது போதும்" என்று அவர் உடல் நலனில் அக்கறை உள்ள ரசிகர்கள் உரக்க கத்திச் சொல்லக்கூடும்.

காமராஜர், விபிசிங், ஹெக்டே, மூப்பனார், மோடி, ரஜினி- 54 ஆண்டுகளாக அரசியலில் போணியாகாத தமிழருவி மணியன்

பஞ்சரான பஞ்ச் டயலாக்குகள்

பஞ்சரான பஞ்ச் டயலாக்குகள்

ஆம்.. இப்படித்தான் அண்ணாத்த மட்டுமல்ல, இனி வேறு படங்களில் ரஜினி நடித்தாலும் பஞ்ச் டயலாக் பேச முயன்றால் தியேட்டர்களில் ஏற்படும் சூழ்நிலையாக இருக்கப்போகிறது. ஏனென்றால், ரஜினியை ஒரு சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் வைத்து தனித்துக் காண்பிக்க உதவியது அரசியல் பஞ்ச் டயலாக்குகள்தான். அரசியலுக்கே வரப்போவதில்லை என்று ரஜினி சொன்ன பிறகு, அந்த பஞ்ச் டயலாக்குகள் பஞ்சுமிட்டாய் அளவுக்குத்தான் விலை மதிப்பைப் பெறப்போகிறது.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

ஆரம்பம் முதலே ரஜினிக்கும்-கமலுக்கும் இடையே திரையில் யார் உச்ச நட்சத்திரம் என்ற போட்டி இருந்தது. தளபதி-குணா என இருவர் படங்களும் ஒரே நேரத்தில் மோதிக் கொண்டதும் உண்டு. ரசிகர்களால் போஸ்டர் யுத்தங்களில் ஈடுபட்டு யார் பெரிய நடிகர், யார் படங்கள் அதிக நாட்கள் ஓடுகிறது என்று வாக்குவாதங்கள் செய்தபடி இருந்தனர்.

 சரத்குமார், விஜயகாந்த்

சரத்குமார், விஜயகாந்த்

இன்னொரு பக்கம், 1990களில், சூரியன், நாட்டாமை உள்ளிட்ட திரைப்படங்களால் சரத்குமாருக்கு பெரிய ரசிகர் வட்டம் இருந்தது. பெண்களிடமும் செல்வாக்கு ஏற்பட்டது. சின்னக் கவுண்டர் போன்ற படங்கள் விஜயகாந்த்தை ஆக்ஷன் விரும்பிகளுக்கு மட்டுமல்ல, பெண் ரசிகர்களுக்கும் நெருக்கமாக மாற்றியது. போட்டி இப்படி கடுமையாக இருந்த காலகட்டம்தான் அது.

பஞ்ச் டயலாக் பாணி

பஞ்ச் டயலாக் பாணி

அப்போதுதான் அரசியல் என்ற ஆயுதத்தை ரஜினி கையில் எடுத்தார். அரசியல் கருத்துக்களை பேசுவது, அரசியல் பஞ்ச் டயலாக்குகளை, மன்னன், முத்து, அருணாச்சலம், படையப்பா என வரிசையாக வைத்துக் கொண்டே சென்றார். அரசியலுக்கு வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பை தூண்டினார். இதன் மூலம் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை உருவாக்கி, அதை தக்க வைத்துக் கொண்டார்.

வெற்றியும், தோல்வியும்

வெற்றியும், தோல்வியும்

வசூல் என்று பார்த்தால், ரஜினிக்கும், சில படங்கள் அக்காலகட்டத்தில் சாதாரண வசூலைத்தான் ஈட்டிக் கொடுத்தன. ரஜினி சில காட்சியில் வந்ததாலே படம் சூப்பராக ஓடும் என எதிர்பார்க்கப்பட்ட வள்ளி பயங்கர தோல்விப்படமாக மாறியதே. அருணாச்சலம், வீரா போன்ற படங்கள் கூட மெகா பிளாஸ் பஸ்டர் எனக் கூறிவிட முடியாது. மற்றும் சில படங்கள் நல்ல வெற்றியை பெற்றன. இது எல்லா நடிகருக்கும் நடக்கக்கூடியதுதான். ஆனால் ரஜினிக்கு மட்டும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கிடைக்க, அரசியல் டயலாக்குகளும், செயல்பாடுகளும் உதவியது.

ஹீரோயின்கள் மார்க்கெட்

ஹீரோயின்கள் மார்க்கெட்

ஹீரோயின்களுக்கு திருமணம் முடித்தால் மார்க்கெட் போச்சு என்பார்கள். அந்த ஹீரோயின்களை தங்கள் கனவுக் கன்னியாக கற்பனைச் செய்து பார்த்து வரும் ரசிகர், அது வேறு ஒருவர் மனைவி என்ற அந்தஸ்துக்கு போனதும், இதயத்திலிருந்து இறக்கிவிடுவார்கள். அதனால்தான் மார்க்கெட் வீழும்வரை, ஹீரோயின்கள் மணம் முடிப்பதில்லை. ஒரு வகையில் ரஜினிக்கும் இந்த ஒப்புமை பொருந்தும்.

பஞ்ச் டயலாக்குகள்

பஞ்ச் டயலாக்குகள்

ஏற்கனவே, பேட்ட, அதையடுத்து வந்த தர்பார் போன்ற படங்கள் எதிர்பார்த்த ஹைப்பை ஏற்படுத்தவில்லை. ஏதோ முதலுக்கு மோசமில்லை என்ற நிலையைத்தான் கொடுத்தன. அரசியல் பேசியதால் அண்ணாத்த மேல்தான் அனைவர் கவனமும் இருந்தது. இப்போது அந்த எதிர்பார்ப்பும் இல்லை. எனவே இனி பஞ்ச் டயலாக் வைக்க முடியாது, வைத்தாலும் ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்ற நிலையில் ரஜினி இருக்கிறார். இனியும் அவர் சூப்பர் ஸ்டாராக தொடர முடியுமா, ஸ்டார் என்ற அந்தஸ்தில் தொடரப்போகிறாரா, அல்லது, 'முல்லும் மலரும்' போல ஃபெர்பார்மன்சை நம்பி தன்னை சூப்பர் ஸ்டாராகவே நிலை நிறுத்திக்கொள்வாரா, என்பதை அண்ணாத்த படம்தான் தீர்மானிக்கப்போகிறது.

 
 
 
English summary
Actor Rajinikanth can no longer speak political punch dialogues in upcoming films. The fans will not accept even if Rajini speak punch dialogues.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X