ரஜினிக்கு ரத்தநாள மறுசுழற்சி சிகிச்சை- ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ்: காவேரி மருத்துவமனை
சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு ரத்த நாள பாதிப்புக்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாகவும் தற்போது அவர் உடல்நலம் தேறி வருவதாகவும் சென்னை காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த சில நாட்களில் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தாதா சாகேப் பால்கே விருது வாங்கி விட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்தார் ரஜினிகாந்த். டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி, குடும்பத்துடன் தீபாவளியன்று ரிலீசாகும் அண்ணாத்தே திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்தார்.
ஆர்யன் கான் வழக்கில் பேரம்.. '8 மணி நேரம்' முக்கிய சாட்சி அளித்த பரபரப்பு வாக்குமூலம்
இதனிடையே நேற்று மாலை திடீரென சென்னை காவேரி மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல்நலன் பரிசோதனைக்காகவே ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மனைவி லதா ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

ஐசியூவில் சிகிச்சை
இந்நிலையில் நேற்று இரவு முதல் காலை வரை ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் ரத்த நாளங்களுக்கான திசுக்கள் சிதைவடைவதால் ரஜினிகாந்துக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

இன்பார்க்சன் பாதிப்பு
அதாவது ரஜினிகாந்த் உடலில் ரத்த குழாய்களுக்கு போதிய ரத்தம் கிடைக்காமல் இருப்பது முதலில் கண்டறியப்பட்டது. பின்னர் இப்படி போதிய ரத்தம் கிடைக்காததால் ரத்த நாள திசுக்கள் அழிந்து வருவதும் தெரியவந்தது. இதனை இன்பார்க்சன் பாதிப்பு என கூறுகின்றனர். இதனால் ரஜினிகாந்துக்கு இன்பார்க்சன் பாதிப்புக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பு தகவல்கள் தெரிவித்தன. இருப்பினும் காவிரி மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இது ரஜினி ரசிகர்களை கவலை அடையச் செய்தது.

நலமுடன் ரஜினி
இதையடுத்து நடிகர் ரஜினிகாந்தை காவேரி மருத்துவமனையில் நேரில் சந்தித்த அவரது உறவினர் ஒய்.ஜி.மகேந்திரன், அவர் நலமுடன் இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறினார். இதேபோல் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் சென்னை செய்தியாளர்களிடம் பேசுகையில், ரஜினிகாந்த் உடல்நிலை தேறிவருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவர் நலமுடன் இருக்கிறார் என்றார். இந்நிலையில் தற்போது காவேரி மருத்துவமனை நிர்வாகம், ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.

வெற்றிகரமான அறுவை சிகிச்சை
அதில் ரஜினிகாந்தின் மூளைக்கு செல்லும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க அவருக்கு மறுசுழற்சி சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. தற்போது ரஜினிகாந்த் உடல்நிலை தேறி வருகிறது. அடுத்த சில நாட்களில் ரஜினிகாந்த் முழுமையான குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என கூறப்பட்டுள்ளது.