சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Rajinikanth... முடிவுக்கு வந்தது கால் நூற்றாண்டு கால சஸ்பெண்ஸ்!

By R.Mani
Google Oneindia Tamil News

- ஆர்.மணி

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வரப் போவதில்லை என்பதை ஒரு வழியாக அறிவித்து விட்டார்.

அக்டோபர் 29 ம் தேதி அவர் வெளியிட்ட ஒரு ட்வீட் செய்தியில் இப்படி குறிப்பிட்டார்; “என்னுடைய பெயரில் சமூகவலை தளங்களில் உலா வரும் ஒரு செய்தி நான் அதிகாரபூர்வமாக வெளியிட்டது கிடையாது. ஆனால் அதில் உள்ள தகவல்கள், குறிப்பாக எனது உடல் நிலை சம்மந்தமான விஷயங்கள் உண்மையானவை. நான் அரசியலுக்கு வருவது சம்மந்தமாக என்னுடைய ரஜினி மக்கள் மன்றத்துடன் ஆலோசித்து முடிவை அறிவிப்பேன்”.

Rajinikanths 25 year old suspense comes to an end

தன்னுடைய அனுமதியில்லாமல் வந்ததாக ரஜினி சொன்ன அறிக்கையில் தெரிவிக்கப் பட்ட முக்கியமான செய்தி; “எனக்கு (ரஜினி) 2016 ல் அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன் பிறகு தற்போது கொரோனா காலத்தில் எனக்கு அறிவுரை சொன்ன மருத்துவர்கள் இன்றைய காலகட்டத்தில் நான் முழு நேர அரசியலில் ஈடுபடுவது எனது உடல் நலனுக்கு எதிரானது என்று கூறிவிட்டார்கள். இந்த நிலையில் எனது தொண்டர்களும், மக்களும்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்”.

இதற்கு மேலும் ரஜினியிடமிருந்து மற்றோர் தெளிவான அறிக்கை நமக்குத் தேவையில்லை என்றே தெறிகிறது. ரஜினி 70 வயதை தொட்டுக் கொண்டிருக்கிறார். இந்த கொரோனா காலத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 70 வயதான ஒருவர் தீவிர அரசியலில் முதன் முறையாக காலெடுத்து வைக்க வேண்டும் என்றே நாம் எதிர்பார்ப்பது மனிதாபிமானமில்லாத செயலாகத்தான் பார்க்கப்பபடும். மேலும் கட்டாயப்படுத்தி ஒருவரை அரசியலுக்கு கொண்டு வருவதால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை என்பது அடுத்ததோர் முக்கியமான விஷயம்.

1995 இறுதியில் ரஜினிகாந்த் அப்போதய முதலைமச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக கூறிய வாசகம் தமிழகம் மட்டுமின்றி, ஏக இந்தியாவையும் அவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. 1996 ம் ஆண்டு தேர்தல்களை மனதில் கொண்டு ரஜினிகாந்த் இப்படி கூறினார்; “மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது”. அதன் பிறகு 1996 தேர்தலில் ஜெ மண்ணை கவ்வியதும், மூப்பனாரின் தமாகா வும், திமுக வும் கூட்டணி சேர்ந்து கருணாநிதி முதலமைச்சரானதும் நாடறிந்த விஷயங்கள்தான்.

எடப்பாடியாரும், ஸ்டாலினும் இப்படி சொல்லலியே.. அடிச்சாரு பாருங்க ரஜினிகாந்த் அந்தர் பல்டி.. தேவையா? எடப்பாடியாரும், ஸ்டாலினும் இப்படி சொல்லலியே.. அடிச்சாரு பாருங்க ரஜினிகாந்த் அந்தர் பல்டி.. தேவையா?

ஆனால் தான் அரசியலுக்கு வருவது பற்றி எப்போதுமே மூடு மந்திரமாகவே பேசி வந்த ரஜினிகாந்த் ஒரு கட்டத்தில் தனது அரசியல் பிரவேசத்தை தெளிவான வார்த்தைகளில் அறிவித்தார். ஜெ மறைந்து, கருணாநிதி உடல் நலம் குன்றியிருந்த போது, டிசம்பர் 31, 2017 ல் சென்னையில் பேசிய ரஜினி, “தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. அந்த வெற்றிடத்தை நான் இட்டு நிரப்புவேன். நான் அரசியலுக்கு வருவது உறுதி. சட்டமன்ற தேர்தலுக்குத்தான் வருவேன். 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்” என்றெல்லாம் பேசினார்.

ஆனால் அவையெல்லாமே இன்றைக்கு கடந்த காலத்தின் கரிய நிழல்களாகிப் போயின. நேற்றைக்கு ரஜனிகாந்த் உண்மையை உடைத்ததற்கு முக்கிய காரணம் அவரை அரசியலுக்கு வர நிர்ப்பந்தித்து பாஜக கொடுத்துக் கொண்டிருக்கும் அழுத்தம்தான் என்றே சொல்லப் படுகிறது. இந்த அழுத்தம், அதிகமாகி மிரட்டல் அளவுக்கு போனதாகவும், அதன் காரணமாகவே ரஜினிகாந்த் இந்த முடிவை எடுத்த தாகவும் அரசியல் வட்டாரங்களில் உயர் இடங்களில் இருப்பவர்கள் சிலர் கூறுகிறார்கள்.

”2021 தேர்தலில் திமுக வின் வெற்றியை எப்பாடுபட்டாவது தடுத்து விட வேண்டும் என்று நினைக்கும் பாஜக, அதற்கு ரஜினி யை ஒரு முக்கிய அஸ்திரமாக பயன்படுத்த நினைக்கிறது. ஆனால் இந்த அரசியல் பரமபத விளையாட்டுக்கு தன்னுடைய தற்போதைய உடல் நிலை இடங் கொடுக்காது என்பதை தெரிந்து வைத்திருக்கும் ரஜினிகாந்த் அதிலிருந்து புத்திசாலித்தனமாக நேற்றைய அறிக்கை மூலம் தப்பித்து விட்டார் என்றே நான் உறுதியாக நம்புகிறேன். இனிமேலும் அவரை பாஜக தலைமை நிர்ப்பந்திக்காது என்றே நான் நினைக்கிறேன்” என்று இந்த கட்டுரையாளரிடம் கூறினார் பாஜக வில் தற்போது ஓரங் கட்டப்பட்டிருக்கும் அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர்.

கொரோனா ஊரடங்கிற்கு சில நாட்களுக்கு முன்பு கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் ரஜனிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய நடிகர் அமிதாப் பச்சன் ரஜனிகாந்த்தை பார்த்து இப்படி சொன்னார்; “என்னுடைய நண்பர் ரஜனிகாந்த் அரசியலுக்கு போகப் போவதாக சொல்லியிருக்கிறார். நான் என்னுடைய அனுபவத்தில் ஒரு வேண்டுகோளாக ரஜினிகாந்த்துக்கு சொல்லிக் கொள்ளுகிறேன். நீங்கள் (ரஜனி) தயவுசெய்து அரசியலுக்கு போக வேண்டாம். எனது வாழ்க்கை பாடத்திலிருந்து நான் இதனை சொல்லுகிறேன்”.

திரைப்படத்துறையில் தன்னை விட மூத்தவரான அமிதாப்பச்சனின் ஆலோசனையை, அந்த ஆலோசனை வழங்கப்பட்ட கிட்டத்தட்ட எட்டு மாதங் கழித்து ரஜனிகாந்த் ஏற்றுக் கொண்டு விட்டார் என்றே தெறிகிறது.

ஆனால் இதற்கு ரஜினியின் உடல்நிலையும், கொரோனா வும் மட்டும்தான் காரணமா என்பது ரஜினியின் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும் ……..

கொரோனா வைரஸ் மனித உயிர்களுடன் மட்டும் விளையாடவில்லை. பல மனிதர்களின் இலட்சியங்களுடனும், கலையுலக மற்றும் அரசியல் கனவுகளுடனும்தான் விளையாடிக் கொண்டிருக்கிறது …… தமிழக அரசியலில் கால் நூற்றாண்டாக நிலவி வந்த அரசியல் சஸ்பெண்ட்ஸ் முடிவுக்கு வந்து விட்டதாகத்தான் தற்போதைக்கு நமக்குத் தெறிகிறது.

English summary
Rajinikanth's 25 year old suspense has come to an end at last.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X