சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சமமனிதர் துயர்துடைப்போம்.. திருக்குறளை மேற்கோள்காட்டி ஜவாஹிருல்லா, காதர் மொகிதீன் ரமலான் வாழ்த்து

Google Oneindia Tamil News

சென்னை: பிறருக்கு உதவி மகிழும் இன்பத்தை உணர வேண்டும் என திருக்குறளை மேற்கோள்காட்டி ஜவாஹிருல்லா ஈகை திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல் சமமனிதனின் வாழ்வை உயர்த்த வேண்டும் என்று காதர் மொகிதீன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஈகை திருநாள் என போற்றப்படும் ரமலான் பண்டிகை நாடு முழுவதும் நாளை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், எல்லோருக்கும் ஈது பெருநாள் வாழ்த்துக்கள், "உண்ணாமலும், பருகாமலும், தீயதை எண்ணாமலும், தீங்கெதையும் பண்ணாமலும், துறவு மனோநிலையிலிருந்து இறைவனின் நெருக்கத்தையும் அவனின் திருப்பொருத்தத்தையும் பெறும் ஆன்மீகப் பயிற்சியே ரமலான் மாத நோன்பு. இதன் நிறைவு விழா, ஈது பெருநாளாக - ரம்ஜான் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

காதர் மொகிதீன்

காதர் மொகிதீன்

பண்டிகை கொண்டாட்டம் என்பதும் தொழுகை நடத்துவது, ஏழை எளியோர்க்கு தானம் வழங்குவது, சகோதர சமுதாய மக்களுடன் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வது, எல்லோருடனும் இன்பத்தைப் பகிர்ந்து வாழும் பண்பை நிலைநிறுத்துவது போன்றதேயாகும். ஒவ்வொரு மனிதனும் தனது உடலாலும் உள்ளத்தாலும் பரிசுத்தமடைவதன் மூலம், சமூகத்தில் தூய்மையைப் பேணி, அதன் மூலம் நாட்டிலும் நானிலத்திலும் தூய்மையைப் பரப்புவதே மானிட நேய நெறியாகும்.மானிட நேய நெறி என்பது மதம், சாதி, இனம், நாடு கடந்த மேன்மை நெறி; நன்னெறி; பொன்னெறி; என்றும் மனித சமுதாயத்தை வாழ்விக்கும் திருநெறி. அத்தகைய நெறி தழைக்க எல்லோரும் உழைப்போம்; சாமானியரை உயர்த்துவோம்; சகமாந்தரை உன்னத வாழ்வுக்கு உயரப் பாடுபடுவோம்" இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஈகைப் பெருநாள்

ஈகைப் பெருநாள்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஈகைப் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில் "இஸ்லாம் மார்க்கத்தின் இரு இனிய திருநாள்களில் ஒன்றான ஈகைப் பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன். அடிப்படைத் தேவைகள் அனைத்து மக்களுக்கும் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற லட்சியம் ஓர் அழகிய கனவாகவே தொடர்ந்து வரும் சூழலில், ஈகை என்ற இனிய பண்பை எல்லோரும் கொண்டாடுவதும், இல்லாத மக்களுக்கு நம்மால் இயன்றவை வழங்குவதும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

ஃபித்ரா எனும் தர்மம்

ஃபித்ரா எனும் தர்மம்

ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து, அடுத்த மாதமான ஷவ்வால் முதல் நாளில் கொண்டாடப்படும் ஈகைப் பெருநாளில், காலைப் பொழுதில் வாய்ப்பிருக்கும் இடத்தில் திடலிலும், இல்லாத இடத்தில் பள்ளிவாசல்களிலும் நிறைவேற்றப்படும் தொழுகையே ஈகைப் பெருநாள் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாகும்.இந்தத் தொழுகைக்கு வரும் முன்னர், ஃபித்ரா எனும் தர்மத்தைத் தகுதியுள்ள ஒவ்வொருவரும் நிறைவேற்றிய பிறகே இந்தத் தொழுகைக்கு வரவேண்டும். தர்மமாகிய ஃபித்ராவை நிறைவேற்றிய பிறகே தொழுகையும் ஏற்றுக்கொள்ளப்படத் தக்கதாகும். இந்த அளவு ஈகையை, இஸ்லாம் மார்க்கம் இறைக் கடமையாகவும், கொண்டாட்டத்திற்குரியதாகவும் ஆக்கியுள்ளது.

பிறருக்கு உதவி மகிழ்

பிறருக்கு உதவி மகிழ்

தொன்மை மிக்கத் தமிழின் அற இலக்கியங்கள், ஈகையை உச்சி மேல் வைத்து மெச்சிப் போற்றுகின்றன. ‘ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடமை
வைத்திழுக்கும் வன்கண வர்' (பிறருக்கு உதவி மகிழும் இன்பத்தை உணராதவர்களே, தாம் சேர்த்த பொருளை வைத்து இழக்கும் வன்குணம் உடையவர்கள்)
என்றும் திருக்குறளில் ஈகை என்ற அதிகாரத்தில் இடம்பெறும் குறள்கள் சான்றாகும்.

அன்பால் இணைந்த மக்கள்

அன்பால் இணைந்த மக்கள்

இல்லாமை நீங்கிடவும், அடிப்படைத் தேவைகள் அனைத்து மக்களுக்கும் கிடைத்திடவும் அனைவரும் பாடுபடுவோம். அனைத்து சமுதாய மக்களும் அன்பால் இணைந்து, அறிவால் உயர்ந்து நிற்பதே தமிழகத்தின் தனிச் சிறப்பு. இந்த நற்பண்பை நாடு முழுதும், ஏன் நானிலம் முழுதும் பரப்ப வேண்டிய கட்டாய காலத்தில் நாம் இருக்கிறோம்.
சிறுபான்மை மக்கள் மீதும், ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் தாக்குதல்களால் நாம் நம்பிக்கை இழந்துவிடக் கூடாது. பாசமெனும் வெள்ளத்தால், பகை நெருப்பை அணைத்த இஸ்லாம் மார்க்கத்தில் உறுதியோடு நின்று, தாய்நாட்டிற்கு அருந்தொண்டுகளைத் தொடர்வோம். அனைவருக்கும் இதயங்கனிந்த ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்" இவ்வாறு ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

English summary
Ramadan Mubarak 2019 M. H. Jawahirullah and K. M. Kader Mohideen Eid Mubarak wishes to people
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X