சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இஎம்ஐ கேட்டு மிரட்டும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை.. ராமதாஸ் வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

சென்னை: இஎம்ஐ கேட்டு மிரட்டி கட்டாயப்படுத்தும் தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியருப்பதாவது:

"இந்தியா முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களும் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதைக் கருத்தில் கொண்டு, கடன் தவணைகளை செலுத்த இந்திய ரிசர்வ் வங்கி 3 மாத கால அவகாசம் வழங்கியுள்ள நிலையில், அதை மதிக்காமல் வாகனக் கடன் தவணைகளை உடனடியாக செலுத்தும்படி கடன்தாரர்களுக்கு தனியார் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. சில நிதி நிறுவனங்கள் வழக்கம் போலவே வாடிக்கையாளர்களுக்கு மிரட்டல் விடுத்து வருவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

மே 31 வரை தடை.. சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களை திறக்க கூடாது.. தமிழக அரசு மே 31 வரை தடை.. சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களை திறக்க கூடாது.. தமிழக அரசு

ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ரிசர்வ் வங்கி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் மற்றும் ஊரடங்கு ஆணை காரணமாக அமைப்பு சாரா தொழில் துறையினர் அனைவரும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். அவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி தான், பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட அனைத்து வகையான கடன்களுக்குமான மாதத் தவணைகளை 3 மாதங்களுக்கு ஒத்தி வைக்கும்படி மத்திய அரசுக்கும், இந்திய ரிசர்வ் வங்கிக்கும் முதன்முதலில் கோரிக்கை விடுத்தது. அதைத் தொடர்ந்து அனைத்து வகையான கடன்களுக்குமான மார்ச், ஏப்ரல், மற்றும் மே மாத தவணைகளை செலுத்தத் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு தொடர்பான விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் கூட, அந்த அறிவிப்பு, வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு மாதாந்திர கடன் தவணை செலுத்தும் சுமையிலிருந்து தற்காலிக விடுதலை அளித்தது என்பது உண்மை.

ஆனால், தனியார் வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்களுக்கு அந்த விடுதலை கூட கிடைக்கவில்லை. ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி அனைத்து வகையான கடன் தவணைகளும் 3 மாதங்களுக்கு தானாக ஒத்திவைக்கப்பட்டிருக்க வேண்டும்; ரிசர்வ் வங்கி அறிவித்த சலுகை தங்களுக்குத் தேவையில்லை என்றும், கடன் தவணையை தொடர்ந்து செலுத்துவதாகவும் எவரேனும் கடிதம் கொடுத்தால் அவர்களிடம் மட்டும் தான் கடன் தவணை தொடர்ந்து வசூலிக்கப்பட வேண்டும். பெரும்பான்மையான பொதுத்துறை வங்கிகள் இந்த அணுகுமுறையைத் தான் பின்பற்றுகின்றன. ஆனால், தனியார் வங்கிகளும், நிதிநிறுவனங்களும் இதை பின்பற்றாமல் அனைத்து தவணைகளையும் செலுத்தும்படி கட்டாயப்படுத்துகின்றன. இதனால் கடன்தாரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் மன உளைச்சல்

மக்கள் மன உளைச்சல்

சென்னையில் ஒருவர் அவரது தாயாரின் மருத்துவச் செலவுகளுக்காக காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பெற்ற தொகை அவரது வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்ட அடுத்த நிமிடமே, அவரது வாகனக்கடன் தவணைக்காக தனியார் வங்கியிடமிருந்து தன்னிச்சையாக எடுக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. வங்கிக் கணக்குகளில் பணம் இல்லாத கடன்தாரர்கள் கடன்தவணை செலுத்தத் தவறி விட்டதாக அறிவித்து, அவர்களை கடன் வசூல் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தினமும் தொலைபேசியில் அழைத்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். அடுத்தக்கட்டமாக வீடுகளுக்கு தனியார் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் குண்டர்களை அனுப்புமோ என்ற அச்சத்தால் தனியார் நிறுவனங்களிடம் வாகனக்கடன் பெற்ற மக்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

எப்படி இஎம்ஐ கட்ட முடியும்

எப்படி இஎம்ஐ கட்ட முடியும்

வங்கிகளிடம் வாகனக்கடன் பெற்றவர்கள் வாகனங்களை இயக்குவதன் மூலம் கிடைக்கும் வாடகை வருமானத்தைக் கொண்டு தான் கடன் தவணையை செலுத்த வேண்டும். ஊரடங்கு காரணமாக வாகனங்களை இயக்க முடியாத நிலையில், கடன்தாரர்களிடம் பணம் இல்லை; அதனால் அவர்களால் தவணை செலுத்த முடியாது என்பதை உணர்ந்ததால் தான் அவற்றை ரிசர்வ் வங்கி ஒத்திவைத்தது. கடன் தவணை ஒத்திவைப்புக்காக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வழிமுறைகளின்படி ஒத்திவைக்கப்படும் கடன் தவணைகளுக்கான மொத்த தொகை எவ்வளவோ, அதை செலுத்துவதுடன், அதற்கான கூடுதல் வட்டியாக 3 முதல் 5 மடங்கு தொகையை செலுத்த வேண்டியிருக்கும். இது மிக அதிகமான தொகை என்றாலும் கூட, உடனடியாக கடன் தவணை செலுத்துவதிலிருந்து விடுதலையாக இதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் தான் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள திட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

கொடிய மனித உரிமை மீறல்

கொடிய மனித உரிமை மீறல்

அத்தகைய சூழலில், வருமானமே இல்லாதவர்களிடம் கடன் தவணையை செலுத்தும்படி மிரட்டுவதும், மருத்துவச் செலவுகளுக்காக காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பெற்ற காப்பீட்டு தொகையை தனியார் வங்கிகள் தன்னிச்சையாக பறித்துக் கொள்வதும் மிகக்கொடிய மனித உரிமை மீறலாகும். ஏற்கனவே வருமானமின்றி வறுமையில் வாடும் மக்களுக்கு இது கூடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. வாடகை வாகன உரிமையாளர்களின் பொருளாதார நிலைமை கருத்தில் கொண்டு தான் சாலைவரி உள்ளிட்ட வரிகளை செலுத்துவதற்கான காலக்கெடுவை தமிழக அரசு நீட்டித்திருக்கிறது. ஆனால், அரசுக்கு இருக்கும் கருணை கூட தனியார் வங்கிகளுக்கு இல்லை. இது இரக்கமற்ற செயலாகும்.

தனியார் வங்கிகள் மீது நடவடிக்கை

தனியார் வங்கிகள் மீது நடவடிக்கை

எனவே, இவ்விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு, வாகனக்கடன் பெற்றவர்களிடம் கடன் தவணையை கட்டாயப்படுத்தி வசூலிக்கும் தனியார் வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 மாத கால கடன் தவணை ஒத்திவைப்புக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், எந்த விதமான கூடுதல் கட்டணமும் இன்றி மார்ச் 31-ஆம் தேதியன்று எவ்வளவு நிலுவைத் தொகை உள்ளதோ, அதை மட்டும், மாதக் கடன் தவணைத் தொகையை அதிகரிக்காமல் வசூலிக்குமாறும் வங்கிகளுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.

English summary
pmk leader ramadoss demands action against private banks and Financial institutions threatens people to EMI amount
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X