சென்னை கலெக்டர் திடீர் மாற்றத்திற்கு பின்னணியில் நடந்தது என்ன? - கிசுகிசுக்கும் மேலிட வட்டாரம்!
சென்னை : சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி திடீரென மாற்றப்பட்டதற்கு, முதல்வர் ஸ்டாலினின் திடீர் ஆய்வு காரணமாக கூறப்பட்டாலும், பின்னணியில் வேறொரு காரணமும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
கடந்த 25ஆம் தேதி கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவர் ஆய்வுக்கு வந்து சென்ற அன்று இரவே அவர் ஆட்சியர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டார்.
முதல்வரின் ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி அங்கு வராததுதான் அவர் தூக்கி அடிக்கப்பட்டதற்கு காரணம் எனக் கூறப்பட்டது.
சென்னை பல்லாவரத்தில் மனைவி, குழந்தைகளை கொன்று ஐடி ஊழியர் தற்கொலை

திமுக ஆட்சியில்
தமிழக அரசு நிர்வாக ரீதியாக அவ்வப்போது அதிகாரிகள் மாற்றம் செய்வது வழக்கமான ஒன்று. கடந்த ஆண்டு தி.மு.க அரசு ஆட்சியமைத்தபோது பெருமளவிலான அதிகாரிகள் மாற்றப்பட்டனர். அதன்பிறகும் அவ்வப்போது அரசு நிர்வாகங்களில் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டு வருகின்றன. பல்வேறு துறைகளின் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் இந்த ஓராண்டு காலத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், சமீபத்திய மாற்றம் ஒன்று விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சென்னை மாவட்ட ஆட்சியர்
சமீபத்தில், அதுவும் பிரதமர் மோடி சென்னை வருவதற்கு ஒரு நாள் முன்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் திடீரென மாற்றப்பட்டார். தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்ட உத்தரவில், சென்னை மாவட்ட ஆட்சியராக உள்ள விஜயா ராணிக்கு பதிலாக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இணை செயலாளராக இருக்கும் அமிர்த ஜோதி ஐஏஎஸ் நியமிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவில் விஜயா ராணி எங்கு மாற்றப்பட உள்ளார் என்ற விவரம் இடம்பெறவில்லை. கடந்த ஜூனில் சென்னை மாவட்ட ஆட்சியராக அவர் பொறுப்பேற்று ஓராண்டு காலம் கூட முடிவடையாத நிலையில், திடீரென மாற்றப்பட்டார்.

முதல்வர் ஆய்வு
கடந்த 25ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு நடத்தினார். அங்கு பட்டா, சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் பிற வருவாய்த் துறையின் சேவைகளைப் பெற வந்திருந்த பொதுமக்களிடம் கோரிக்களைக் கேட்டறிந்தார். இ-சேவை மையத்திற்குச் சென்று, அம்மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். முதல்வர் 20 நிமிடங்கள் மேற்கொண்ட ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி அங்கு இல்லை.

வேறொரு மீட்டிங்கில் விஜயா ராணி
முதல்வர் ஸ்டாலின் ஆய்வு நடத்திய நேரத்தில், சென்னை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி உள்ளிட்ட சென்னை மாவட்ட உயரதிகாரிகள் கலந்துகொண்டு இருந்தனர். முதல்வரின் ஆய்வு குறித்து மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி அந்தக் கூட்டத்தில் இருந்தபோதுதான் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் கிளம்பிச் செல்வதற்குள் முதல்வர் ஆய்வை முடித்துவிட்டுச் சென்றுள்ளார்.

அதிகாரிகள் குழப்பம்
கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு குறித்து, எழிலக ஆணையரிடம் மட்டுமே, முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எழிலகத்தில் இருந்தோ, முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்தோ இந்த திடீர் ஆய்வு குறித்து மாவட்ட ஆட்சியருக்கு முன்கூட்டியே எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாகவே அவர் கலந்துகொள்ள முடியவில்லை என்று தலைமை செயலரிடமும் விஜயா ராணி ஐ.ஏ.எஸ் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், அவர் மாற்றப்பட்டதற்கு வேறொரு காரணமும் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

பின்னணியில் இன்னொரு விவகாரம்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு எம்.பி ஒருவர் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயா ராணியை சந்திக்க ஆட்சியர் அலுவலகம் சென்றபோது அவர் நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமான அந்த எம்.பி இதுகுறித்து தலைமை செயலரிடம் தெரிவித்துள்ளார். அதனாலேயே மேலிடத்தில் அவர் மீது அதிருப்தியில் இருந்ததாகவும், தற்போது முதல்வரின் ஆய்வை காரணம் காட்டி அவர் மாற்றப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.