2 வாலிபர்கள் கொலையால்.. டென்ஷன் குறையாத அரக்கோணம்.. எதிர் தரப்பு ஊருக்குள்ளேயே போய் தீ வைத்த கும்பல்
சென்னை: அரக்கோணம் அருகே சோகனூரில் 2 இளைஞர்கள் இன்னொரு ஊர்க்காரர்களால் கொலை செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த இறந்தவர்களின் உறவினர்கள் டிராக்டரை தீயிட்டு கொளுத்தி நெல்களை தீவைத்து எரித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சோகனூர் காலணியை சேர்ந்த அர்ச்சுனன் (21) சௌந்தர் (26) மற்றும் செம்பேடு கிராமத்தைச்சேர்ந்த சூர்யா (23 ), மதன்(16) ஆகியோர் நேற்று இரவு மது அருந்தி முழு போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
சித்தாம்பாடியில் இவர்கள் ஒரு கடையில் இருந்த போது பெருமாள்ராஜபேட்டையைச் சேர்ந்த சத்யா (28) என்பவருடன் மது அருந்துவதில் மோதல் ஏற்பட்டது. இதில் சத்யா ஆதரவாளர்கள் சுமார் 20 பேர் சூழ்ந்து தாக்கியதில் சூர்யா, அர்ச்சுனன் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரழந்தனர்.
அரக்கோணம் ஷாக்.. இரு வேறு கட்சியினர் கடும் மோதல்.. 2 இளைஞர்கள் வெட்டி சாய்க்கப்பட்டு கொலை.. பதற்றம்

சாலை மறியல்
இதையடுத்து, கொலை வெறிதாக்குதல் நடத்திவிட்டு தப்பித்தவர்களை போலீஸார் கைது செய்து நடவடிக்கையை எடுக்ககோரி சோகனூர் மக்கள் திருத்தணி சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். 200க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு மறியல் செய்து வந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும்பதற்றம் நிலவியது.

நெல் வயலுக்கு தீ
பதற்றத்தை தணிக்க 50க்கு மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் ஆத்திரம் தீராத இறந்த இருவரின் உறவினர்கள் பெருமாள்ராஜ்பேட்டை கிராமத்திற்கு சென்று அங்குள்ள வயல்களை நாசப்படுத்தியதுடன் நெல்களையும் தீவைத்து எரித்துவிட்டு டிராக்டரையும் தீயிட்டு கொளுத்தி கோபத்தை காட்டியுள்ளனர்.

கைது நடவடிக்கை
இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய மதன் மற்றும் அஜித் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவேறு அரசியல் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் மோதல் ஏற்பட்டதா, குடி போதையில் மோதல் ஏற்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கூடுதல் போலீஸ்
கொலையானவர்கள் தரப்பினர், கொலையாளிகள் ஊருக்கு நேரில் சென்று வயல்வெளிகளுக்கு தீ வைத்துள்ளனர். பதிலுக்கு அந்த தரப்பு இந்த ஊருக்குள் இன்று இரவு வந்து தாக்கி விடக்கூடாது என்ற அச்சத்தின் காரணமாக, சோகனூரில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்