சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தெருவோரம் சுருண்டு கிடந்த சிறுவன்.. விஸ்வரூவமெடுத்து.. சிரிக்க வைத்து, அழவும் வைத்த.. சார்லிசாப்ளின்

புகழ்பெற்ற கலைஞன் சார்லி சாப்ளின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: உண்ண உணவின்றி லண்டனின் ஏதோவொரு தெருவோரத்தில் சுருண்டு படுத்திருந்த ஒரு சிறுவன், பின்னாளில் வளர்ந்து தன் தனித் திறமையால், தன் விடாமுயற்சியால், தன் தைரியத்தால், மொத்த உலகையும் பின்னாளில் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார்.. ஒரு மனிதன் பேசாமலேயே நம்மை இப்போது வரை பேச வைத்து வருகிறார் என்றால் அது சார்லி சாப்ளினாகத்தான் இருக்க முடியும்.. இதுபோல் ஒரு பிறவியை நாம் இதுவரை சந்தித்தது இல்லை.. இனி சந்திக்க போவதும் இல்லை.. மவுன புரட்சிக்காரன் சார்லி சாப்ளினின் பிறந்த நாளை நினைவுகூர்வதில் "ஒன் இந்தியா தமிழ்" பெருமை கொள்கிறது!!

சாப்ளினுக்கு அப்போது 17 வயது இருக்கும்.. இங்கிலாந்தில் உள்ள ஒரு சர்க்கஸ் குழுவில் திரண்டிருந்த கூட்டத்தின் முன்பு சாப்ளின் நடித்தார்.. நீளமான வசனங்களை மிக அழகாக தெளிவான உச்சரிப்புடன் பேசினார்.. ஆனால் கூட்டம் இதை ரசிக்கவில்லை... அவர்களின் முகம் வெளிறி காணப்பட்டது.

இதை கவனித்த சாப்ளின், உடனே டயலாக்கில் காமெடியை கலந்து மீண்டும் மீண்டும் பேசினார்.. அப்போது மக்கள் கூட்டம் சோகமாகவே நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்தது. ஒருகட்டத்தில் கோபம் அடைந்த சாப்ளின், அதன் நிர்வாகியிடம் சென்று, யார் இவர்கள்? மனிதர்களா? மிருகமா? எந்த ஒரு உணர்வுமே இல்லாமல் இருக்கிறார்களே? என கேட்டார். அதற்கு அந்த நிர்வாகி, நீ நினைப்பது தவறு.. அவர்களில் பல பேருக்கு இங்கிலீஷ் தெரியாது.. அதனால் நீ பேசும் வசனங்கள் அவர்களுக்கு புரிய வாய்ப்பில்லை என்றார்.

சாப்ளின்

சாப்ளின்

இதை கேட்ட பிறகு சாப்ளின் அதிர்ந்தாலும், அப்போதுதான் ஒரு புதிய முயற்சியில் இறங்கினார்.. BODY LANGUAGE என்று சொல்லும் பாணியை கடைப்பிடித்தார்.. வெறும் உடல் அசைவுகள், முக பாவனைகளை கொண்டு நடிக்க ஆரம்பித்தார். சோர்ந்து வடிந்து விழித்து கொண்டிருந்த கூட்டம் முகமலர்ந்து கைகளை தட்டி ஆர்ப்பரித்தது.. 17 வயதில் நடந்த அந்த நிகழ்வுதான் சாப்ளினை உலகம் முழுவதும் கொண்டு போய் சேர்க்க காரணமாக இருந்தது!

கலைஞன்

கலைஞன்

வறுமையும், ஏழ்மையும் ஒருசேர பின்னிப்பிணைந்து வளர்ந்த சாப்ளின் மெல்ல மெல்ல சம்பளம் வாங்கி நடக்கக்கூடிய கலைஞனாக உருவெடுத்தார்.. ஆனால் ஆரம்ப கட்ட படங்கள் எல்லாமே தோல்வி.. அதனால் சாப்ளினை வைத்து படமெடுக்க யோசித்தனர் தயாரிப்பாளர்கள்.. கீஸ்டோன் நிறுவனம் சாப்ளினிடம் நாங்க ஒரு கமெடி கலந்த படம் எடுக்கலாம் என்று இருக்கிறோம், உன்னால் இந்த படத்தில் என்ன முடியுமோ அதை செய்ய முடியுமா என்று கேட்டது. இதுதான் நமக்கு கடைசி வாய்ப்பு, இதைவிட்டால் வேறு வழியில்லை என்று நினைத்த சாப்ளின் அப்போதும் ஒரு முயற்சியை கையில் எடுத்தார்.

ஷூ - மீசை

ஷூ - மீசை

தன்னுடைய சக கலைஞர்களின் உதவியால் குண்டாக இருந்தவரின் PANT-டையும், சிறிய சட்டையையும், காலுக்கு பொருந்தாத பெரிய ஷூக்களையும், தொப்பியையும் வைத்து ரிகர்சல் பார்த்தார்.. அந்த பெரிய ஷூக்கள் அவர் காலை விட்டுவிலகி போக, அதை கால்களில் மாற்றி போட்டார். கையில் பிரம்புத்தடி ஒன்றை எடுத்து கொண்டார்.. தன்னுடைய தோற்றத்தை கண்ணாடியில் பார்த்த சாப்ளின் தான் ரொம்பவும் சிறியவனாக தெரிவது போல உணர்ந்து ஒரு மீசையை வரைந்தார். ஆனால் அந்த மீசை அவரது முக அசைவுகளை மறைத்தது.. அதனால் சிறியதாக ஒரு மீறையை வெட்டி ஒட்டிக் கெர்ண்டார். மீண்டும் கண்ணாடியில் பார்த்து ஒரு பக்கம் நீளமாக உள்ளது என்று மறுபக்கம் வெட்டினார்.. குரங்கு அதிரசம் பகிர்ந்த கதை போல அவருக்கு கடைசியில் மிஞ்சியதுதான் அந்த பல்குச்சி அளவுக்கு மீசை..!

சிரிப்பு

சிரிப்பு

ஒருவழியாக உடை, முக அலங்காரம் எல்லாம் முடிந்து நடக்க முடியாமல் நடந்து வந்தார்.. அப்போது குழுவில் இருந்தவர்கள் அதிசயமாக சாப்ளினை பார்த்தனர்.. கால்கள் இரண்டையும் அகலப்படுத்தி நடந்து வந்த சாப்ளின் எதிர்பாராதவிதமாக எதிரே வந்த ஒருவர் மீது மோதி விழுந்து எழ முடியாமல் எழுந்தார்.. இதை பார்த்த அங்கிருந்த மொத்த கலைஞர்களும் அடக்க முடியாமல் சிரித்தனர்.. இதை பார்த்த சாப்ளினோ தலையில் இருந்த தொப்பியை கழட்டி, அசைத்து மன்னிப்பு கேட்டார்.. இதை பார்த்தும் குழுவினர் ரசித்தனர்.. இந்த பாணி, இந்த புதுமை, இந்த நவீனம், இந்த அசைவுகள், இந்த நடிப்பில் அந்த KEY STONE நிறுவனம் விழுந்தே விட்டது.. தொடர்ந்து 35 படங்களில் சாப்ளைனை நடிக்க வைத்தது!

காந்திஜி

காந்திஜி

விருதுகள் காமிக்ஸ் கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்ட முதல் நடிகர் என்ற பெயர் பெற்றார். உலக திரைப்படங்கள் மூலம் ஈர்க்கப்பட்டார்.. லெனின், காரல் மார்க்ஸ் போன்ற தலைவர்களால் ஈர்க்கப்பட்டார்.. வெறும் கமெடி மட்டுமில்லாமல் தன்னுடைய படங்களில் சோஷிலிஸ கருத்துக்களையும் சொல்ல வேண்டும் என்று சாப்ளினுக்கு ஒரு எண்ணம் வந்தது. அதன் பாதிப்புதான் 1931-ல் வெளிவந்த CITY LIGHTS.. வட்டமேசை மாநாட்டிற்காக லண்டன் வந்த மகாத்மா காந்தியின் பாராட்டை பெற்றார்.. சினிமா உங்களுக்கு கிடைத்த சரியான ஆயுதம் என்றார் மகாத்மா.. காந்தியுடனான அந்த சந்திப்பை தன்னால் வாழ்நாளில் மறக்கவே முடியாது என்றார் சாப்ளின்.. சுதந்திர போராட்டம் இந்தியாவில் உச்சத்தில் இருந்தபோது, பகிரங்கமான ஆதரவை காந்திக்கு தெரிவித்தார் சாப்ளின்!!

ஆஸ்கார்

ஆஸ்கார்

அடுத்த விருதுகள், பதக்கங்கள், என ஆஸ்கார் வரை உயர்ந்தார்.. CITY LIGHTS படம் நடித்து கொண்டிருந்தபோதே உலகம் முழுக்க பேசும் படங்கள் வந்துவிட்டன.. அப்போதும் தன் கொள்கையை தளர்த்தி கொள்ளவில்லை சாப்ளின்.. சினிமாவுக்கு மொழி தேவையில்லை, வெறும் இசை போதும் என்றார்.. பேசும் படம் வெளியாகிறது என்று அமர்க்களமாக விளம்பரங்கள் வந்தபோது, "பின்னணி இசையுடன் வெளிவருகிறது CITY LIGHTS" என்று துணிந்து விளம்பரத்தினார் சாப்ளின்!! பேசும் படங்கள் வெளிவந்து உலகையே மிரட்சிக்கு உள்ளாக்கியது.. அப்போது வெளிவந்த மவுனப்படம்தான் சிட்டி லைட்ஸ்!!

கண்பார்வை

கண்பார்வை

கண் தெரியாத ஒரு பெண்ணிற்கு சாப்ளின் நிறைய உதவிகளை செய்வார்.. அவருக்கு கண்கள் கிடைப்பதற்கு முழு, முதற் காரணமாகவும் இருப்பார்.. கண் பார்வை வந்தவுடன் அந்த பெண் மிகவும் அதிர்ச்சி அடைவார்... காரணம், சாப்ளினை பணக்காரன் என்று அதுவரை எண்ணியிருந்தார்.. சாப்ளின் தோற்றத்தை பார்த்ததும் வியப்பனார்.. காதல், கருணை, ஈரம், பாசம், பிணைப்பு, நெகிழ்ச்சி, உருக்கம், தியாகம், பரந்த மனப்பான்மை கலந்த படம்தான் CITY LIGHTS.. பேசும் படங்களையும் தாண்டி இந்த படம் சக்கை போடு போட்டது!

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

சாப்ளின் புகழின் உச்சிக்கு செல்ல செல்ல, விமர்சனங்கள் தலை தூக்கின.. இவர் ஒரு பழமைவாதி என்றனர்.. நவீன தொழில் நுட்பத்தின் எதிரி என்றனர்.. அனைத்தையும் தன் திறமையால் மட்டுமே பொசுக்கி எறிந்தார் சாப்ளின்.. இந்த சமயத்தில் சில வரலாற்று நிகழ்வுகளும் நடந்தன.. சினிமாவை முதன் முதலில் அரசியலுக்கு பயன்படுத்தி கொண்டவர் சர்வாதிகாரி ஹிட்லர்.. லென்னி என்ற பெண் இயக்குனர்தான் ஹிட்லரின் படைகளையும் அவரது பேச்சையும் செய்திப்படமாக எடுத்து, அவரை மிகப்பெரிய தலைவராக சித்தரிக்க, சினிமாவை பயன்படுத்தி கொண்டார்.

முதலாளிகள்

முதலாளிகள்

இதை கேள்விப்பட்டசாப்ளின், எந்த சினிமாவை பயன்படுத்த ஹிட்லரின் சர்வாதிகாரத்தை காட்டினார்களோ, அதே சினிமாவை பயன்படுத்தி அவர்களை எதிர்ப்பேன் என்று அறிவித்தார்.. அதுவரை ஏழைகளின் உணர்வுகளை, முதலாளிகளின் ஆதிக்கத்தை மறைமுகமாகவும், நகைச்சுவையாகவும் வசனங்கள் இல்லாமலும் காட்டிவந்த சார்லி சாப்ளின், முதன்முறையாக பேசும் படத்தை எடுக்க முடிவு செய்தார்.. ஊமைப்படங்களில் பேசாமல் நடித்த சாப்ளின் பேசும் படங்களில் தோல்வி அடைவார் என்று எல்லோரும் எண்ணினார்கள்.. சாப்ளினை இதை வைத்தே காலி செய்து விடலாம் என்றும் கணக்கு போட்டார்கள்.

ஊமைப்படங்கள்

ஊமைப்படங்கள்

ஆனால் 5 வயது முதலே ஆங்கிலத்தில் பக்கம் பக்கமாக வசனம் பேசி நடித்த சாப்ளினுக்கு பேசும் படம் பற்றி சொல்ல வேண்டுமா என்ன? ஹிட்லரின் மொத்த சர்வாதிகாரத்தையும் தோலுரித்து எடுத்து சொன்ன படம்தான் 1940-ல் வெளிவந்த THE GREAT DICTATOR... இந்த படத்தில் உலக பந்து பொம்மைகளை உருட்டி ஆடி விளையாடும் காட்சி ஒன்று உள்ளது.. இதுதான் பரபரப்பாக பேசப்பட்டது.. படம் செம ஹிட் என்றாலும் அவரது ஊமைப்படங்கள் அளவுக்கு இது வெற்றி பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சாப்ளினின் மறக்க முடியாத மற்றொரு படம் MODERN TIMES.. தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் அவல நிலையை அப்பட்டமாக அதே சமயம் நாசூக்காக வெளிப்படுத்தி தனது பாணியிலேயே வெளியிட்டார்.. ஆனால் ஜெர்மனியில் அந்த படத்தை திரையிட தடைவிதித்தார் ஹிட்லர்!!

ரஷ்யா

ரஷ்யா

ஹிட்லரை எதிர்க்கும் துணிச்சல் அந்நாளில் மிகவும் குறைவு.. அந்த வகையில் சாப்ளின் தைரியத்தை பலரும் பாராட்டினர்.. ஆனால் இந்த படத்தை யாருக்கும் தெரியாமல் ஹிட்லர் இருமுறை பார்த்ததாகச் சில செய்திகள் உண்டு. மக்கள் அவரை கம்யூனிஸ்ட் என்று சொல்ல ஆரம்பித்தனர்.. சாப்ளின் படங்கள் பல நாடுகளில் ஆயுதமாக செயல்பட்டன என்பதுதான் நிஜம்! ரஷ்யாவில் சாப்ளினுக்கு பேனர்கள் வைக்கப்பட்டன.. தன்னுடைய செல்வாக்கு உலக நாடுகளில் உயர்ந்துள்ளது என்பதை அப்போதுதான் சாப்ளின் உணர்ந்தார்.

குழப்பம்

குழப்பம்

ஆனால் ரஷ்யாவை போல அமெரிக்காவும் கம்யூனிஸ்ட் நாடாக மாறிவிடகுகூடாது என்றும், கம்யூனிஸ்ட்கள் என்றாலே தேச துரோதிகள் என்றும் பலர் அப்போது நினைத்து வந்தனர்.. அப்படித்தான் சாப்ளினுக்கு எதிராக சில பத்திரிகைகள் வேலை பார்த்தன.. வெறும் புகழுக்கும், பணத்துக்கும் சாப்ளின் அடிமை, அதனால்தான் அமெரிக்காவில் தங்கி உள்ளார் என்று பிரச்சாரம் செய்தன. மக்களுக்கு எதிரான பிரஜை போல சாப்ளினை சித்தரிக்க ஆரம்பித்தனர்.. இதனால் சாப்ளின் நிலை குலைந்தார்.. குழப்பம் அடைந்தார்.

பெர்னாட்ஷா

பெர்னாட்ஷா

நேராக போய் பெர்னாட்ஷாவை சந்தித்து தன் நிலையை சொல்லி ஆலோசனை பெற்றார்.. இந்த நேரத்தில் மகாத்மா காந்தியின் அணுகுமுறையையும் உணர்ந்தார்.. அதனால் நெருக்கடியான அந்த காலகட்டத்தை பொறுமையாகத்தான் சாப்ளினால் சமாளிக்க முடிந்தது. எனினும் அமெரிக்காவில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் வெடித்தன.. சாப்ளின் படம் வெளியிட தடை செய்யப்பட்டன.. உண்மையிலேயே அமெரிக்க மக்களை உளமாற நேசித்த சாப்ளின் சூழ்நிலை கைதியானார்.. ஒரு கட்டத்தில் 1952-ல் விரட்டியடிக்கப்பட்டார்..

ஆஸ்கர் விருது

ஆஸ்கர் விருது

அதே அமெரிக்காதான் 1972-ல் சிறந்த இசையமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை தந்து கவுரவித்தது.. அவர் இறந்த பின்பு பிணத்தையாவது அமெரிக்காவில் புதைக்க வேண்டும் என்று கெஞ்சியது அமெரிக்க அரசு.. ஆனால் 1952-க்கு பிறகு அவர் நாடோடி வாழக்கைதான் வாழ்ந்தார். 20 வருஷம் கழித்து ஆஸ்கர் விருதை வாங்க அமெரிக்க அழைத்தபோது, போகக்கூடாது என்று எல்லா பக்கமும் சாப்ளினுக்கு தடை போட்டார்கள், அவமானப்படுத்திய நாட்டுக்கு போக வேண்டாம் என்று சொல்லியும் பழைசை மறந்து அமெரிக்கா வந்து இறங்கினார் சாப்ளின்.

கதறி அழுதார்

கதறி அழுதார்

ஏர்போரட்டிலேயே உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.. ஆஸ்கார் கமிட்டி எழுந்து நின்று அந்த விருதை அவருக்கு வழங்கியது.. கிட்டத்தட்ட அரங்கம் அதிர 10 நிமிடத்துக்கும் மேலாக கைகள் தட்டப்பட்டு கொண்டே இருந்தன.. அப்போதுதான் சாப்ளின் கதறி அழுதார்!! ஆரம்ப காலங்களில் கை தனியாக, கால் தனியாக, தலை தனியாக காட்டி பயமுறுத்தி வந்த சினிமாவை 50 வருடங்களுக்கும் மேலாக சிரித்து வைத்து சென்றவர் சாப்ளின் மட்டுமே.. சாப்ளின் மறைவுக்கு பிறகு பல்வேறு நாடுகள் தபால் தலையை வெளியிட்டது.. ஆனால் முதன்முதலில் வெளியிட்ட நாடு நம்முடைய இந்தியாதான்!!

சிகரம்

சிகரம்

கலைகளின் வித்தகன்தான் சார்லி சாப்ளின்.. மௌன படங்களின் விடிவெள்ளி.. ஆண்மைக்குரிய மீசையையும் நகைச்சுவையாக காட்டி அதீத தைரியசாலி.. ரசிகர்களின் எல்லாவித சமூக கட்டுப்பாடுகளையும் உடைத்தெறிந்தது சாப்ளின் மட்டுமே.. கண்ணீரையும் புன்னகையால் வென்று, மௌனம் மிகச்சிறந்த மொழி என்பதை சாப்ளினை தவிர வேறு யாரால் இனி உணர்த்திவிட முடியும்!! தரையில் இருந்து சிகரத்தை தொட்ட இந்த கலைஞனின் புகழை பேச இன்னும் பல தலைமுறைகள் வரும்!!

English summary
remembering the legend of comedy charlie chaplin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X