ஒருபக்கம் ஓபிஎஸ், இன்னொரு பக்கம் இபிஎஸ்..! தூக்கியெறியும் தொண்டர்கள்! போட்டோ உடைப்பு! தடதட அதிமுக..!
சென்னை : அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சத்தில் இருக்கும் நிலையில் ஒருபுறம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படங்களையும், மற்றொருபுறம் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் படங்களையும் அகற்றி வருகின்றனர்.
பெரும் சர்ச்சைக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், இதில் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்த 23 தீர்மானங்களை தவிர்த்து புதிய தீர்மானங்களை நிறைவேற்ற நீதிமன்றம் தடை விதித்ததை தொடர்ந்து ஒற்றை தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது.''
இதனால் இன்றைய பொதுக்குழுவில் 23 தீர்மானங்களில் சிலவற்றை மட்டும் நிறைவேற்றி மீண்டும் பொதுக்குழுவை நடத்த எடப்பாடி தலைமையிலான தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
அதிமுக இப்போ யார்கிட்ட இருக்கு? எதிரெதிராக வாதங்கள் - கட்சி விதி என்ன சொல்லுது? குழம்பும் ர.ரக்கள்!

அதிமுக பொதுக்குழு
ஆனால் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருந்த அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஒற்றை தலைமை தீர்மானத்துடன் சேர்த்து அனைத்து தீர்மானங்களும் அடுத்த பொதுக்குழுகூட்டத்தில் நிறைவேற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனையே பெரும்பாலான நிர்வாகிகள் கூறியிருந்தனர். இதையடுத்து மேடையில் உரையாற்றிய அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜுலை 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தார்.

ஓபிஎஸ் அவமானம்
ஓபிஎஸ் அவமானப்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். எடப்பாடி எதிராகவும், ஓபிஎஸ்க்கு ஆதரவாகவும், கண்டன போஸ்டர்களை ஒட்டியதோடு, சாலை மறியல், அரைக்கம்பத்தில் கொடியை பறக்கவிடுவது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பல ஒன்றிய செயலாலர்கள் நேரடியாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர்.

தொண்டர்கள் பதிலடி
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழகத்தில் பல பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஓபிஎஸின் புகைப்படங்களை அலுவலகத்தில் இருந்து அகற்றுவது உடைப்பது, பேனர்கள் போஸ்டர்கள் கிழிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தீவிர ஆதரவாளராக உள்ள சிவி சண்முகத்தின் சொந்த மாவட்டமான விழுப்புரத்தில் கட்சி அலுவலகத்தில் இருந்த ஓபிஎஸ் புகைப்படங்கள் அகற்றப்பட்டது.

படம் அகற்றம்
இந்நிலையில் இந்நிலையில் ஓபிஎஸ்ன் சொந்த தொகுதியான தேனி மாவட்டம் போடியில் அதிமுக போடி நகர செயலாளர் பழனிராஜ், அதிமுக அலுவலகத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை அகற்றினர். மேலும் அலுவலகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனரில் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை அதிமுவினர் மை ஊற்றி அழித்தனர். இதனால் அதிமுகவில் நாளுக்கு நாள் பிரச்சினை அதிகரித்து வருகிறது.