தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது ஏன்? உண்மையில் நடந்தது என்ன? அண்ணாமலை பரபர விளக்கம்
சென்னை: தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இந்த முறை குடியரசுத் தின அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்டது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
குடியரசுத் தினத்தை முன்னிட்டு டெல்லியில் ஆண்டுதோறும் குடியரசு தின அணிவகுப்பு நடக்கும். இந்த அணிவகுப்பிற்கு ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாநிலங்கள் அலங்கார ஊர்திகளை அனுப்பும், தங்கள் மாநில கலாச்சாரம், உணர்வுகள், வரலாற்றை பறைசாற்றும் வகையில் ஊர்திகளை மாநில அரசுகள் அனுப்பும்.
இந்த வருட அணிவகுப்பிற்கு தமிழ்நாட்டின் ஊர்திக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. சுதந்திர போராட்ட தியாகிகள் என்ற தீமில் தமிழ்நாடு அரசு வாகனத்தை உருவாக்க இருந்தது. வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார் ஆகியோரை மையமாக வைத்து வாகனம் உருவாக்கப்பட இருந்தது.
பத்தே நாள்ல.. நாட்டு சுதந்திர வரலாற்றையே மாத்திட்டீங்களே.. உதயநிதி ஸ்டாலின் வைத்த குட்டு!

அனுமதி மறுப்பு
ஆனால் கடைசியில் தமிழ்நாட்டிற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. வ.உ.சி., வேலுநாச்சியாரை தெரியாது என கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரிப்பு செய்துள்ளதாக இணையத்தில் பலர் புகார்கள் வைத்து வருகின்றன. மிகவும் பிரபலமான வீரர்களை எதிர்பார்ப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்ததாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் தமிழக அலங்கார ஊர்தி நிராகரிப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அண்ணாமலை விளக்கம்
இந்த நிலையில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இந்த முறை குடியரசுத் தின அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்டது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக வதந்தி பரப்ப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழ்நாட்டிலேயே ஆளும் கட்சித் தரப்பினர் பொய் சொல்வதில் வல்லவர்கள் என்று உங்களுக்கு தெரியும். 2022 குடியரசுத் தின அணிவகுப்பிற்கு குறிப்பிட்ட ஒரு காரணத்திற்காக தமிழ்நாட்டில் இருந்து சென்ற அலங்கார ஊர்திகளை மத்திய அரசு நிராகரித்து உள்ளதாக பொய்யான செய்தியை அவர்கள் பரப்பி வருகிறார்கள்.

காரணம் என்ன?
இந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை பாதுகாப்பு அமைச்சகம் அமைக்கும் ஒரு வல்லுனர் குழுதான் இறுதி செய்யும். கலை, இலக்கியம், கலாச்சாரம் என்று பல துறை வல்லுனர்கள் இந்த குழுவில் இடம்பெறுவார்கள். ஒவ்வொரு மாநிலத்தில் இருந்து வரும் அலங்கார ஊர்திகளின் விவரங்களை இவர்கள் கேட்பார்கள். இந்தியாவில் எல்லா வருடமும் இதுதான் நடக்கும். எல்லா வருடமும் எல்லா மாநிலமும் தங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெற முடியாது. இடவசதி, பாதுகாப்பு காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த அனுமதி வழங்கப்படாது.

சில மாநிலங்களுக்கு மட்டும் வாய்ப்பு
சில மாநிலங்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். தமிழ்நாட்டிற்கு அதிர்ஷ்டவசமாக, குறிப்பாக பிரதமர் மோடி அரசு வந்த பின் 2019, 2020, 2021 என்று மூன்று ஆண்டுகள் வாய்ப்பு கிடைத்தது. மகாபலிபுரம் சிற்பம், அய்யனார், மகாத்மா காந்தி என்று மூன்று வருடங்கள் நாம் அலங்கார ஊர்திகள் அனுப்பினோம். 2017, 2016 வருடங்களிலும் நமக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாட்டிற்கு அந்த அளவிற்கு முன்னரிமை கொடுக்கப்பட்டது.

தமிழ்நாடு அலங்கார ஊத்தி
ஆனால் மற்ற மாநிலங்களுக்கு இவ்வளவு வாய்ப்பு கிடைக்கவில்லை. பிரதமர் மோடி அரசுக்கு கீழ் நமக்கு 5 முறை கிடைத்துள்ளது. கேரளாவிற்கு கடந்த 5 வருடத்தில் 2 முறை மட்டுமே கிடைத்தது. இதெல்லாம் வல்லுனர் குழு எடுக்க கூடிய முடிவு. அப்படியென்றால் இந்த வருடம் என்ன பிரச்சனை? ஏன் வதந்தியை பரப்புகிறார்கள்? இந்த வருடம் இந்திய குடியரசு தின கான்செப்ட் என்பது சுதந்திர போராட்டம் பற்றியது.இதற்கான ஐடியாவை தமிழ்நாடு அரசும் அனுப்பியது. ஆனால் இதை மத்திய அரசு நிராகரிக்கவில்லை. மாறாக பல கட்ட ஆய்வுக்கு பின் வல்லுனர் குழுவால் நிராகரிக்கப்பட்டது.

தமிழ்நாடு ஓரம்கட்டப்பட்டதா?
இது வருத்தப்பட வேண்டிய விஷயம் என்றாலும் தமிழ்நாடு என்ற காரணத்திற்காக இப்படி ஓரம்கட்டப்படவில்லை. கடந்த 3 வருடம் நமக்கு வாய்ப்பு கொடுத்தனர். நான் இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் பேசினேன். இங்கே சொல்லப்படும் காரணம் முற்றிலும் பொய் என்று அவர் கூறினார். வீரமங்கை வேலுநாச்சியாருக்கு மரியாதை தரவில்லை, பாரதி, வ.உ. சிக்கு மரியாதை கொடுக்கப்படவில்லை என்றெல்லாம் சொல்லப்படுவது சுத்த பொய். இது தொடர்பாக அரசு எந்த குறிப்பும் கொடுக்கவில்லை. மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு அரசுகள் பொய்யாய் மூலதனமாக வைத்து அரசியல் செய்பவர்கள்.

அரசியல் வியாபாரம்
அரசியல் வியாபாரம் செய்பவர்கள். நீங்களே புரிந்து கொள்ளலாம். அவர்கள்தான் பொய்யை பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். பாஜக எப்போதும் தமிழ்நாடுடன் இருக்கிறது. சமீபத்தில் பிரதமர் மோடி கூட வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த நாளுக்கு தமிழில் வாழ்த்து கூறினார். அதேபோல் நாங்கள் சிவகங்கை சீமையில் விழா எடுத்தோம். பாரதி, வஉசிக்கு நாங்கள் சிறப்பு செய்தோம். திமுக இதை செய்யாது. இது வல்லுனர் குழு எடுத்த தன்னிச்சையான முடிவு. 3 வருடமாக நமக்கு வாய்ப்பு கிடைத்தது. மீண்டும் வாய்ப்பு கிடைக்கும். பொய்களை யாரும் நம்ப வேண்டாம், என்று அண்ணாமலை வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.