சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதிய கல்விக்கொள்கையை திணிக்க முற்பட்டால் எதிர்விளைவு ஏற்படும் - எச்சரிக்கும் வைகோ

சமூக நீதியை சவக்குழிக்கு அனுப்பும் வகையில், கோடானுகோடி ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி வெளிச்சம் பாய்வதை புதிய கல்விக் கொள்கை தடை செய்கிறது என்று வைகோ கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையை மாநில அரசுகள் முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நாட்டின் பன்முகத்தன்மைக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரான புதிய கல்விக் கொள்கையை பாஜக அரசு திணிக்க முற்பட்டால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் எச்சரித்துள்ளார்.

புதிய கல்விக்கொள்கை பற்றி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை:

Review the new education policy 2020 says Vaiko statement

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்டக் குழு 'தேசியக் கல்விக் கொள்கை வரைவு 2019' அறிக்கையை கடந்த ஆண்டு மே 31 ஆம் தேதி மத்திய அரசிடம் வழங்கியது. புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு அலைகள் உருவாகிய நிலையில், கடந்த ஜூன் 30 ஆம் தேதி வரையில் கருத்துத் தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு கூறியது.

கொரோனா தீநுண்மி பரவலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, கடந்த ஐந்து மாதங்களாக நாடே முடங்கி உள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது.

கொரோனா துயரச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு பா.ஜ.க. அரசு, ஆர்.எஸ்.எஸ். சனாதான சக்திகளின் நீண்டகாலத் திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்க முனைந்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய முக்கியம் வாய்ந்த கல்வித்துறையில், சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கும், புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்தும்போதும் விரிவான விவாதங்கள், கலந்தாய்வுகள் நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்ற மக்களாட்சிக் கோட்பாடுகளை அலட்சியப்படுத்தி வரும் பாஜக அரசு, எதேச்சாதிகாரமாக புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்து இருக்கிறது.

வேற்றுமையில் ஒற்றுமை கொண்டுள்ள இந்தியாவை, ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே மொழி; ஒரே பண்பாடு என்று ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து, ஆரிய சனாதான ஒற்றைப் பண்பாட்டைத் திணிப்பதற்கு பாஜக ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் "ஒரே நாடு; ஒரே கல்வி முறை" என்கிற கோட்பாடு ஆகும். இதனைச் செயல்படுத்தவே 'புதிய கல்விக்கொள்கை' வரையறுக்கப்பட்டு இருக்கிறது.

கல்வித்துறை பொதுப்பட்டியலின் கீழ் இருப்பதால், கல்வித் துறை அதிகாரங்கள் அனைத்தையும் மாநிலங்களிடமிருந்து பறித்து, மத்திய அரசு டெல்லியில் குவித்துக்கொள்ள புதிய கல்விக் கொள்கை வழிவகை செய்துள்ளது.

EIA Draft 2020 : மக்கள் கருத்து கூற அவகாசம் அளித்தது தவறு.. சுப்ரீம் கோர்டில் மத்திய அரசு அப்பீல்EIA Draft 2020 : மக்கள் கருத்து கூற அவகாசம் அளித்தது தவறு.. சுப்ரீம் கோர்டில் மத்திய அரசு அப்பீல்

பிரதமர் தலைமையில் அமைக்கப்படும் 'ராஷ்டிரிய சிக்ஷா ஆயோக் (RSA)' எனப்படும் 'தேசிய கல்வி ஆணையம்' உயர் அதிகாரம் கொண்டதாக இருக்கும். மழலையர் பள்ளியிலிருந்து உயர் கல்வி, ஆராய்ச்சி மையம் வரை ஒட்டுமொத்தக் கல்வித்துறையின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கக்கூடிய அமைப்பாக தேசியக் கல்வி ஆணையம் இருக்கும்.

கல்விக் கொள்கை, நிதி ஒதுக்கீடு, கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது, தர நிர்ணயம் வழங்குவது, பாடத் திட்டங்கள் உருவாக்கம் போன்ற அனைத்தும் இந்த ஆணையத்தின் கீழ் கொண்டுவரப்படும். மாநிலங்கள், தேசிய கல்வி ஆணையத்தின் உத்தரவுகளைக் கீழ்பணிந்து நிறைவேற்ற வேண்டும். மாநில அரசுகளுக்கு இனி கல்வித்துறை தொடர்பான எள்ளளவு அதிகாரம்கூட கிடையாது.

மாநில உரிமைகளைப் பறித்து, கூட்டாட்சிக் கோட்பாட்டைச் சிதைக்கும் புதிய கல்விக் கொள்கையை மாநிலங்கள் ஏற்க வேண்டுமா?
பல்வேறு மொழி, பண்பாடு, பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ள இந்திய நாட்டில், தேசிய இனங்களின் அடையாளத்தை அழித்து ஒரே நாடு; ஒரே பாடத்திட்டம் என்று திணிப்பதை எப்படி சகிக்க முடியும்? மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்கி இந்தி, சமஸ்கிருத ஆதிக்கத்தைத் திணிக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்துத்துவ சனாதான வேதகால நம்பிக்கை முறையுடன் மதிப்புமிக்க கல்வியை இணைத்து மையப்படுத்தப்பட்ட ஒரு தேசிய ஆய்வு நிறுவனம் (National Research Foundation -NRF) உருவாக்குவது என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே தகர்த்துவிடும்.
நாடு முழுவதும் ஒரே பொதுத் தேர்வு, கலை அறிவியல் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு, ஒருங்கிணைந்த பள்ளிகள் திட்டத்தின்படி பள்ளிகளை மூடுதல், மாணவர்களுக்கு தொழிற்கல்வி பயிற்சி எனும் பெயரால் இந்துத்துவ மனுதரும் கோட்பாட்டின் குலக்கல்வித் திட்டத்தை செயல்படுத்துதல், கல்வி உரிமைச் சட்டம், தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு உள்ளிட்டவற்றை நீர்த்துப்போகச் செய்தல், இணைய வழி தொலைதூரக் கல்வியை பரவலாக்குதல் போன்ற புதிய கல்விக் கொள்கை முன்வைத்துள்ள கூறுகள் அனைத்தும் கல்வியில் சமநிலை என்னும் கொள்கையைச் சீர்குலைக்கின்றன.

கல்வித்துறையைத் தனியார்மயம் ஆக்கவும், பன்னாட்டு கல்வி வணிகத்தை ஊக்குவிக்கவும் புதிய கல்விக் கொள்கை தாராளமான அனுமதி வழங்கி உள்ளது. அரசின் நிதி ஒதுக்கீடு இன்றியே உயர்கல்வி, ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பதும், தனியார் முதலீடுகள் அனுமதிக்கப்படும் என்று வரையறுத்து இருப்பதும் கல்வித்துறை முழுக்க முழுக்க தனியாருக்குத் தாரை வார்க்கப்படுவதையே உறுதி செய்கிறது.

இதனால் இந்திய உயர்கல்வித் துறை பெரும் சந்தையாக மாறி, உலகப் பெரு முதலாளிகளின் வேட்டைக் காடாக ஆகும். கட்டற்ற அன்னிய முதலீடு பாய்ந்து, உயர்கல்வித் துறை சேவை என்பதிலிருந்து மாறி, முழு வணிகமாகவும், விற்பனைக்குரிய சந்தைப் பொருளாகவும் மாறிவிடும்.

சமூக நீதியை சவக்குழிக்கு அனுப்பும் வகையில், கோடானுகோடி ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி வெளிச்சம் பாய்வதை புதிய கல்விக் கொள்கை தடை செய்கிறது. புதிய கல்விக் கொள்கையின் கேடுகளால் ஏற்படும் விளைவுகள் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு உலை வைத்துவிடும் நிலைமையை எதிர்காலத்தில் உருவாக்கிவிடும் என்பதை பா.ஜ.க. ஆட்சியாளர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையை மாநில அரசுகள் முற்றாக நிராகரிக்க வேண்டும். நாட்டின் பன்முகத்தன்மைக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரான புதிய கல்விக் கொள்கையை பாஜக அரசு திணிக்க முற்பட்டால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. எனவே மத்திய பா.ஜ.க. அரசு புதிய கல்விக் கொள்கையை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

English summary
MDMK general secretary Vaiko statement about the new education policy prohibits the flow of education to millions of backward and poor students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X