நீண்ட இடைவெளிக்குப் பின் ஜி.கே.வாசன் நாளை திடீர் பிரஸ் மீட்... மத்திய அமைச்சர் பதவிக்கு தூண்டிலா?
சென்னை: மத்திய அமைச்சரவையில் தமக்கும் இடம் கேட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.கா.) தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான ஜி.கே.வாசன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சென்னையில் நாளை செய்தியாளர்களை சந்திக்க உள்ளதால் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதிமுகவுடன் நீண்டகாலமாக கூட்டணியில் இருந்து வருகிறது த.மா.கா. ஆனால் த.மா.கா.வின் பெரும்பாலான தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகிவிட்டனர். இருந்தபோதும் டெல்லி பாஜக மேலிடத்தின் அழுத்தத்தால் அதிமுக ஜி.கே.வாசனுக்கு ராஜ்யசபா சீட் கொடுத்தது.

மத்திய அமைச்சர் பதவிக்கு முயற்சி
ராஜ்யசபா எம்.பி.யானது முதலே மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு பலவிதமான லாபிகளில் முயற்சித்து வருகிறார் ஜி.கே.வாசன். ஆனால் டெல்லி பா.ஜ.க. மேலிடமோ ஜி.கே.வாசனிடம், த.மா.கா.வை பா.ஜ.கவுடன் இணைத்து விடுங்கள்; தமிழக பா.ஜ.க. தலைவர் பதவி தருகிறோம் என பேசி வருகிறது.

சென்னையில் பிரஸ் மீட்
இதனை வாசன் ஏற்க மறுத்து பா.ஜ.க. மேலிடத்துக்கு பிடி கொடுக்காமலேயே இருந்து வருகிறார். இந்த நிலையில்தான் சென்னையில் ஜி.கே.வாசன் சென்னையில் செய்தியாளர்களை திடீரென நாளை சந்திக்க உள்ளது எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.

ஊடக முக்கியத்துவம்
இது தொடர்பாக த.மா.கா. வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கக் கூடும் என்று பேசப்பட்டு வருகிறது. இதனால் அகில இந்திய அளவில் தமக்கு முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என ஜி.கே.வாசன் விரும்புகிறார்.

உள்ளாட்சி தேர்தலும் ஒரு காரணம்
அதேபோல் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களுக்கே தொகுதியை பெற்றுத் தர முடியாத நெருக்கடிக்குள்ளானார் வாசன். அதனால் இப்போதே உள்ளாட்சி தேர்தலில் குறிப்பிட்ட சீட்டுகள், இடங்களை வாங்கி எஞ்சிய நிர்வாகிகளை தக்க வைக்க முயற்சிக்கிறார்.

ஜிகே வாசன் கணக்கு என்னவாகும்?
இதனால்தான் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தலாம் என முடிவு செய்திருக்கிறார். இதன் மூலம் மீண்டும் ஊடகங்களின் லைம் லைட்டில் தொடர்ந்து இருக்க முடியும் என்பது எங்கள் தலைவர் வாசனின் கணக்கு என்கின்றனர். ஜி.கே.வாசன் போடும் கணக்குகளும் வியூகங்களும் அவருக்கு கை கொடுக்குமா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.