சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எம்.பி ஆகிறாரா ஸ்டாலின் மருமகன் சபரீசன்?

Google Oneindia Tamil News

சென்னை: மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் எம்.பி ஆக உள்ளார் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்குப் பிறகு அரசியல் அரங்கில் பல்வேறு காட்சிகள் வேகமாக மாறி வருகின்றன. அதில் திமுகவில் தனக்கு பதவி வேண்டாம் என்று வாலண்டியராக வண்டியில் ஏறி கூறியவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின். இவருக்கு இப்போது மாநில இளைஞர் அணி செயலாளர் பதவி கொடுக்க வேண்டும் என்று மாநிலம் முழுவதும் உள்ள உடன் பிறப்புகள் விரும்புகின்றனர்.

Sabareesan may be given RS ticket

இதற்காகவே இளைஞர் அணி அமைப்புகள் எல்லாம் தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பி வருகின்றனர். இது ஒருபுறம் என்றால் உதய நிதி ஸ்டாலினுக்கு எப்படியும் பதவி கொடுத்தே ஆகவேண்டும் என்று கிச்சன் கேபினட் மூலமும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக உடன்பிறப்புகளே கூறி வருகின்றனர். இந்த நிலையில் ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கும் அதிகாரப்பூர்வ பதவி ஒன்று கொடுக்க வேண்டும் என குடும்பத்தில் இருந்தே அழுத்தம் வருகிறதாம்.

ஏற்கனவே சபரீசன்தான் திமுகவில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளுக்கு பின்னால் இருக்கிறார் என்ற தகவல் சில, பல ஆண்டுகளாகவே கூறப்பட்டு வருகிறது. சபரீசன் மூலமாகவே OMG நிறுவனம் மூலமே வேட்பாளர் தேர்வு எல்லாம் நடைபெற்றது என்ற பேச்சும் திமுக வட்டாரத்தில் உண்டு. பாமகவோடு திரைமறைவில் நடைபெற்ற கூட்டணி பேச்சு வார்த்தையை அன்புமணியோடு முன்னின்று நடத்தியது சபரீசன்தான் என்றும் கூறப்பட்டது.

திமுகவில் டெல்லியின் முகமாக யாரவது ஒருவர் முன்னிலைப்படுத்தப்படுவது வழக்கம்.

கருணாநிதிக்கு டெல்லி அரசியலில் அனைத்தையும் சாதித்துக் கொடுப்பவராக முரசொலி மாறன் இருந்து வந்தார். அவருக்குப் பின்னர் தற்போதைய ஸ்ரீப்பெரும்புதூர் எம்.பி. டி.ஆர். பாலு, அவரையடுத்து தயாநிதிமாறன், பின்னர் கனிமொழி என்று சீசனுக்கு ஏற்றார்போல நபர்கள் மாறிக்கொண்டே இருந்தனர். இப்போதைய நிலையில் ஸ்டாலினின் தங்கை கனிமொழிதான் மக்களவை தேர்தலுக்கு முன்னர் காங்கிரசோடு கூட்டணி பேச்சு வார்த்தையை சுமூகமாக பேசி முடித்தார்.

இப்போது கனிமொழியை விட தனது மருமகன் டெல்லியின் முகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என ஸ்டாலின் கருதுகிறாராம் அதனால் சபரீசனுக்கு ராஜ்யசபா எம்.பி பதவி கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கடந்த வருடம் கருணாநிதியின் சிலை திறப்பு விழா அழைப்பிதழ் கொடுப்பதற்காக டெல்லி சென்றபோதே ஸ்டாலின் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டபோதே சபரீசன் நடுநாயகமாக நிறுத்தப்பட்டார். அப்போதே திமுகவில் சலசலப்பு கிளம்பியது குறிப்பாக டெல்லி அரசியலில் திமுக பிரதானிகளாக இருந்தவர்கள் மத்தியில் ஏற்பட்ட முணுமுணுப்பு சற்று சத்தமாகவே கேட்டது.

கட்சியின் முக்கிய முடிவுகளை சபரீசன் தீர்மானித்தது திமுக சீனியர்களுக்கு எரிச்சலை கிளப்பியது. இருந்தாலும் யாரும் அதை வெளிப்படையாக வெளிக்காட்டவில்லை. அதன் பின்னர் திருச்சி தொகுதியில் சபரீசன் வேட்பாளாராக நிறுத்தப்படலாம் என்ற பேச்சும் கிளம்பியது. ஆனால் சில பல காரணங்களால் காங்கிரஸ் கட்சிக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டது.

தற்போது தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதற்காக அடுத்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்யக் கடைசி நாள் ஜூலை 8 என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆறு இடங்களில் மூன்று இடங்களை திமுக நிரப்ப முடியும். இந்த மூன்று இடங்களில் ஒன்று மதிமுக பொது செயலாளர் வைகோவுக்கு என தேர்தலுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள இரு இடங்கள் ஸ்டாலினின் முடிவுப்படி திமுகவின் தொழிற்சங்கமான தொமுச வின் பொதுச் செயலாளார் சண்முகம், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோருக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் வழக்கறிஞர் வில்சன் இந்த ரேசிலிருந்து விலக்கப்பட்டு அதற்கு பதிலாக ஸ்டாலினின் மருமகன் சபரீசன் கொண்டு வரப்படலாம் என்று அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன.

உதயநிதிக்கு மாநிலப் பொறுப்பு விரைவில் வழங்கப்பட உள்ள நிலையில் ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசனுக்கும் கட்சியில் முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும் என்ற குரல் கேட்க தொடங்கிவிட்டது. உதயநிதி ஸ்டாலினுக்கு மாநில இளைஞர் அணி பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று இளைஞர் அணி அமைப்புகளுக்கு அழுத்தம் கொடுத்தவர், ஸ்டாலினின் நெருங்கிய வட்டத்துக்குள் இருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. சபரீசனும் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட உள்ளார் என்று மகேஷ் பொய்யாமொழி தனக்கு நெருக்கமாக உள்ள பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாக செய்திகள் வருகின்றன.

இது உறுதியாகும் பட்சத்தில் ஸ்டாலினின் டெல்லி முகமாக சபரீசன் இருப்பார். எப்படி கருணாநிதிக்கு அவரது மருமகன் முரசொலி மாறன் டெல்லி முகமாக இருந்தாரோ அதுபோல ஸ்டாலினுக்கு சபரீசன் இருப்பார் என்று கூறப்படுகிறது. "ஆக" மாப்பிள்ளை சபரீசன் எம்.பி. "ஆக" உள்ளார். இனி திமுகவின் டெல்லி அசைவுகளை சபரீசன் கவனிக்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்கின்றனர் உடன்பிறப்புகள்.

English summary
Sources say that Sabareesan may be given a ticket to contest in RS polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X