நூல் விலை.. முதல்வர் ஸ்டாலினிடம் முறையிட சைக்கிளில் புறப்பட்ட தொழிலாளிகள்.. தடுத்து நிறுத்திய போலீஸ்
சேலம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கைகளை முறையிடுவதற்காக சைக்கிள்களில் பேரணியாக புறப்பட்ட நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தது சேலம் காவல்துறை.
இத்தனைக்கும் முதலமைச்சரை சந்திக்க சென்ற தொழிலாளர்கள் அனைவரும் தொமுச, ஐயூடியூசி, சிஐடியூ என திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தொழிற்சங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மோப்பம் பிடித்த ஸ்பெஷல் டீம்.. அந்த 4 புள்ளிகள்..
இதனால் சேலம் அம்மாபேட்டை பகுதியில் இன்று காலை சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஓராண்டு சாதனை
தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில்
பங்கேற்பதற்காகவும், நாளை மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து வைப்பதற்காகவும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சேலம் புறப்பட்டுச்செல்கிறார். கடந்த 5 நாட்களாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம்
மேற்கொண்டுவிட்டு நேற்றிரவு தான் சென்னை திரும்பினார். இந்நிலையில் மீண்டும் சேலம் புறப்பட்டுச் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

சைக்கிள் பேரணி
சேலம் வருகை தரும் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நூல் விலை உயர்வை
கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரியும், அம்மாபேட்டை அரசு கூட்டுறவு
நூற்பாலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும் நூற்றுக்கணக்கான
தொழிலாளர்கள் ஆத்தூர் செல்லியம்பாளையத்தை நோக்கி சேலத்தில் இருந்து
புறப்பட்டனர். (ஆத்தூர் செல்லியம்பாளையத்தில் தான் திமுக அரசின் ஓராண்டு
சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

தொழிலாளர்கள்
தொமுச, ஐயூடியூசி, சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்க கொடிகளை சைக்களிகளில் பறக்கவிட்டும் கைகளில் ஏந்தியும் அவர்கள் சென்றனர். இது குறித்து தகவலறிந்து சென்ற அம்மாபேட்டை காவல்துறையினர், அப்படியெல்லாம் நீங்க
அனுமதியின்றி போகக்கூடாது எனக் கூறியதுடன் எல்லோரும் கலைந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர். ஆனால் அதனை அம்மாபேட்டை அரசு கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் ஏற்க மறுத்ததால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

நேரில் சந்தித்து
இதனிடையே ஆளும்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தொழிற்சங்கத்தை
சேர்ந்த தொழிலாளர்கள் என்பதால் அவர்களை முதல்வர் எப்படியும் சந்தித்து
அவர்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.