சசிகலா அரசியலுக்கு வரவேண்டும்... எனது ஆதரவு உண்டு - பிரேமலதாவின் அந்தர் பல்டி
சென்னை: எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வர் ஆகவில்லை; அதிமுகவினரால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று கூறியுள்ளார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா. ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எப்போதும் எனது ஆதரவு உண்டு. சசிகலா அரசியலுக்கு வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் உள்ளதாக கூறிகொள்ளும் தேமுதிகவில் இருந்து அவ்வப்போது முதல்வருக்கு எதிரான கருத்துக்கள் வெளியாகும் அப்படித்தான் அந்த கட்சியின் பொருளாளர் பிரேமலதா என்று அதிரடியாக கருத்துக்களை கூறியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா விடுதலையானார். சசிகலா விடுதலையையொட்டி அமமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இந்த நிலையில் தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எப்போதும் எனது ஆதரவு உண்டு. சசிகலா அரசியலுக்கு வரவேண்டும். அது தவறில்லை என்பது என்னுடைய கருத்து. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் இருந்து அனைத்தையும் செய்தவர் சசிகலா என்று தெவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வர் ஆகவில்லை; அதிமுகவினரால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று தெரிவித்தார். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக 41 தொகுதிகளைப் பெற்று போட்டியிட்டது அதே தொகுதிகளை வரும் சட்டசபைத் தேர்தலிலும் எதிர்பார்க்கிறோம். கூட்டணி குறித்து காலதாமதமின்றி விரைவில் அறிவிக்க வேண்டும். சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் பல நல்ல திட்டங்களை விஜயகாந்த் வெளியிடுவார் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சசிகலாவை புகழ்ந்து, எடப்பாடியாரை விமர்சித்துவிட்டு.. சீட்டு மட்டும் இவ்வளவு கேட்கிறதே தேமுதிக
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா சிறையில் இருந்து இன்று விடுதலையாகி இருக்கும் சூழலில், அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் சூழ்நிலையில் சசிசலாவிற்கு ஆதரவான கருத்துக்களை பிரேமலதா கூறியுள்ளதால் வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக, தேமுதிக கூட்டணி நீடிக்குமா? கேட்ட 41 தொகுதிகள் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.