ஹிண்ட் கொடுத்த சசிகலா.. அப்போ அந்த விஷயம்? - தொண்டர்கள் புடைசூழ.. அதிமுகவை கைப்பற்ற பரபர பிளான்!
சென்னை : தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா, அடுத்ததாக தொண்டர்களுடன் அதிமுக தலைமைக் கழகத்திற்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளரான சசிகலா, பின்னர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.
பெங்களூர் சிறையில் இருந்து கடந்த ஆண்டு வெளியே வந்த சசிகலா, தற்போதைய குழப்பமான அரசியல் சூழலில் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது ஆதரவாளர்களைச் சந்தித்து வருகிறார்.
கருவாடு மீனாகுதா? சி.வி.எஸ் ஏரியாவில் இறங்கும் சசிகலா.. உச்சகட்ட பரபரப்பில் தகிக்கும் திண்டிவனம்!

அதிமுக குழப்பம்
அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதலால் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினர் இரு அணிகளாக பிரிந்துள்ளனர். ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். ஜுலை 11ஆம் தேதி பொதுக்குழுவை நடத்தி எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளர் ஆக்குவதற்கு ஈபிஎஸ் தரப்பினர் திட்டமிட்டு வரும் நிலையில் அதனை நடத்தக்கூடாது என ஓபிஎஸ் தரப்பினர் சட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் சூழலில், தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் பயணம் மேற்கொண்டு தொண்டர்களைச் சந்தித்து வருகிறார் சசிகலா.

தயாராகும் சசிகலா
அ.தி.மு.க குழப்பங்களுக்கு மத்தியில் அதிருப்தியில் இருப்பவர்களை தன் பக்கம் இழுக்க சசிகலா திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. தொகுதி வாரியாக சுற்றுப்பயண அட்டவணை வெளியிட்டு பயணத்தை மேற்கொண்டு வருகிறார் சசிகலா. ஏற்கனவே அதிமுக இரண்டாகப் பிளவுபட்டிருக்கும் நிலையில், தற்போது சசிகலாவும் தீவிரமாகக் களமிறங்கி இருப்பதால் தொண்டர்கள், நிர்வாகிகளிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு
சசிகலா தனது சுற்றுப்பயணத்தை முடித்தபிறகு, தொண்டர்களுடன் இணைந்து மாபெரும் பேரணியை நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது. தொண்டர்களுடன் பேரணியாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்தாண்டு சிறையிலிருந்து சசிகலா விடுதலையாகி சென்னை வந்தபோதே அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவார் எனக் கூறப்பட்டது. ஆனால், எடப்பாடி தரப்பினர் பாதுகாப்பை பலப்படுத்தி சசிகலா வரவிடாமல் செய்தனர். இந்நிலையில், தற்போதுள்ள குழப்ப சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள சசிகலா திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொண்டர்களுடன் செல்ல திட்டம்
அந்த திட்டத்தை சூசகமாக பொதுவெளியிலும் தெரிவித்துள்ளார் சசிகலா. திண்டிவனம், விழுப்புரம் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா, தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், மக்கள் காட்டும் வழியில் நான் நடந்து கொண்டிருக்கிறேன். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு யார் வரவேண்டும் என்பதை தனிநபர்கள் தீர்மானிக்க முடியாது. அதை கட்சி தொண்டர்கள் தான் தீர்மானிக்க முடியும். நான்தான் கட்சியின் பொதுச்செயலாளர். எனவே அடுத்தக்கட்டமாக அ.தி.மு.க. தொண்டர்களை திரட்டி அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு செல்வேன் எனத் தெரிவித்துள்ளார்.

விரைவில் மாற்றம்
மேலும், நான் அமைதியாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருக்கமாட்டேன். விரைவில் மாற்றங்கள் வருவதை நீங்கள் எல்லோரும் பார்க்கத்தான் போகிறீர்கள் என்றும் ஆவேசமாகப் பேசியுள்ளார் சசிகலா. சுற்றுப் பயணத்தின் மூலம் தொண்டர்கள் ஆதரவைப் பெற்று தொண்டர்களுடன் பேரணியாக ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் செல்வதுதான் சசிகலாவின் அடுத்தகட்ட நகர்வு என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

வரவேற்று போஸ்டர்
சமீபத்தில், ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் அருகேயுள்ள பகுதிகளில் "அதிமுகவின் பொதுச் செயலாளரே! ஒன்றரை கோடி தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரமே! கழகத்தை காத்திட, எங்களை வழிநடத்திட கட்சி அலுவலகத்திற்கு வருக வருக!" என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சசிகலாவும் தனது அடுத்தகட்ட திட்டத்தை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.