சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உச்சநீதிமன்றத் தீர்ப்பை விருப்பு- வெறுப்புக்கு உட்படுத்த வேண்டாம்: ஸ்டாலின்

Google Oneindia Tamil News

Recommended Video

    அயோத்தி வழக்கில் தீர்ப்பு... அரசியல் தலைவர்கள் கருத்து

    சென்னை: அயோத்தி நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எந்தவித விருப்பு-வெறுப்புக்கும் உட்படுத்த வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

    SC verdict should be accepted without any like or dislike, says MK Stalin

    நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்த பிரச்சினைக்கு இந்திய உச்சநீதிமன்றம் ஒரு தீர்வைக் கண்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வே தீர்ப்பை வழங்கியதற்குப் பிறகு, அதை எந்தவித விருப்பு-வெறுப்புக்கும் உட்படுத்தாமல், அனைத்துத் தரப்பினரும் சமமான சிந்தனையுடன் ஏற்றுக்கொண்டு, மதநல்லிணக்கம் போற்றி, நாட்டின் பன்முகத்தன்மைக்கு எவ்வித சேதாரமும் ஏற்பட்டுவிடாமல் எச்சரிக்கை உணர்வுடன் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

    வைகோ கருத்து

    மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்பியுமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

    இந்திய நாட்டின் கோடானுகோடி மக்களின் மனதில் கவலை ஊட்டிய பாபர் மசூதி பிரச்சினைக்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷன், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. 90களின் தொடக்கத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு திரண்டு, பாபர் மசூதியை இடித்துத் தகர்த்ததை தவறு என்று உச்சநீதிமன்றம் இன்றைய தீர்ப்பில் கூறி இருக்கிறது.

    பாபர் மசூதி இருந்த இடத்தில் அதற்கு முன்பு கோவில் இருந்ததற்கான ஆதாரம் துல்லியமாகக் காட்டப்பட வில்லை என்றும் கூறி இருக்கிறது. இச்சூழலில்தான் 2010, செப்டம்பர் 30 ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம்லல்லா ஆகிய மூன்று அமைப்புகளும் சரிசமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று வழங்கி இருந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்துவிட்டது.

    1045 பக்க அயோத்தி தீர்ப்பு

    சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் இராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என்றும், மூன்று மாதத்திற்குள் அதற்கு ஒரு அறக்கட்டளை அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறி இருக்கிறது. இசுலாமியர்கள் புதிய மசூதி கட்டிக்கொள்ள வக்பு வாரியம் போர்டு ஏற்கும் இடத்தில் ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறி இருக்கின்றது.

    உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வோம் என்று ஜாமியத் உலமா - இ-ஹிந்த் தலைவர் அர்ஷத் மதானி அவர்கள் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி, தெரிவித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் அகில இந்தியத் தலைவர் பேராசிரியர் காதர் மைதீன் அவர்கள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம் என்று நான்கு நாட்களுக்கு முன்பே கூறி உள்ளார்.

    மதச்சார்பின்மைக் கோட்பாட்டைத்தான் இந்திய அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது என்பதையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு உள்ளது. சிறுபான்மை மக்களுக்கு அரணாக நாட்டின் பெரும்பான்மையான மக்கள் இருப்பதை கடந்தகால வரலாறு காட்டுகிறது. மதங்களைக் கடந்த மனிதநேய உணர்வு இந்த மண்ணில் கலந்து இருக்கிறது. எனவே மத நல்லிணக்கம் சீர்குலைய வழிவகுத்துவிடாமல், எதிர்காலத்தில் சமூக அமைதியை நிலைநாட்டும் கடமை அனைத்துத் தரப்பினருக்கும் இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

    English summary
    DMK President MK Stalin said the that Supreme Court verdict in Ayodhya case, should be accepted without any like or dislike.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X