சசிகலா உள்ளே வந்துட கூடாது.. ஆட்களை இறக்கி காவலுக்கு போட்டா.. ஆடலுடன் பாடல் கேட்குதோ! இதென்ன கூத்து?
சென்னை: ராயபேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு சசிகலா வராமல் தடுக்கும் வகையில் அங்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிர்வாகிகள் பலர் குவிக்கப்பட்டு உள்ளனர். சசிகலா அவரின் ஆதரவாளர்களுடன் வந்தால் வாசலிலேயே வைத்து லாக் செய்யும் விதமாக நிர்வாகிகள் பலர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவில் பொதுச்செயலாளர் விவகாரம் உச்சத்தில் உள்ளது. ஜூலை 11ம் தேதி நடக்கும் பொதுக்குழுவில்.. இடைக்கால பொதுச்செயலாளராக பதவி ஏற்று, பின்னர் முறையாக தேர்தல் மூலம் நிரந்தர பொதுச்செயலாளர் ஆகும் திட்டத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இதற்கு எப்படியாவது சட்ட ரீதியாக தடை பெற்றுவிட வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் முயன்று வருகிறார். ஆனால் அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
விரோதம்.. இனியும் ஓபிஎஸ்சுடன் இணைந்து செயல்பட முடியாது.. ஒரே போடாக போட்ட எடப்பாடி.. நீக்கமா?

உயர் நீதிமன்ற வழக்கு
அதேசமயம் ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள பொதுக்குழுவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. ஒற்றை நீதிபதி முன்னிலையில் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கு நாளை விசாரிக்கப்பட இருக்கிறது. ஆனாலும் பொதுக்குழுவிற்கு இந்த வழக்கில் தடை விதிக்கப்படுமா என்று சந்தேகம் நிலவுகிறது. உச்ச நீதிமன்றம் தடை விதிக்காத நிலையில், உயர் நீதிமன்ற தனி நீதிபதி பொதுக்குழுவிற்கு தடை விதிப்பாரா என்ற கேள்வி உள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர்
இது ஒரு பக்கம் இருக்க அதிமுக பொதுச்செயலாளர் தான்தான் என்று சொல்லி வருகிறார் சசிகலா. நீங்க வேணா சண்டை போட்டுக்கொண்ட.. ஆனா பொதுச்செயலாளர் சேர் எனக்குத்தான் என்று சசிகலா பிடிவாதமாக இருக்கிறார். நேற்று திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, நான் அமமுகவில் இணைய மாட்டேன். அதற்கான அவசியமும் இல்லை. நான் அதிமுக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டார். அதோடு அதிமுக பொதுச்செயலாளர் தான்தான் என்று இவர் தனது அரசியல் சுற்றுப்பயணத்திற்கு இடையில் பல இடங்களில் கூறி வருகிறார். இந்த நிலையில்தான் அவர் அதிமுக அலுவலகம் வர போவதாகவும் பல்வேறு தகவல்கள் வருகின்றன.

அதிமுக அலுவலகம்
அதிமுக அலுவலகத்திற்கு விரைவில் சசிகலா வர போவதாக கடந்த ஒரு வாரமாகவே தகவல்கள் வருகின்றன. அதிமுக அலுவலகம் வந்து அங்கு தொண்டர்களை சந்திக்கவும். தான்தான் பொதுச்செயலாளர் என்று கூறவும் சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்தன. கடந்த சில நாட்களுக்கு முன் இதனால் அதிமுக அலுவலகமே பரபரப்பாக காணப்பட்டது. சசிகலா இந்த புரட்சி பயணத்தை முடித்துவிட்டு தி நகரில் உள்ள தன் வீட்டிற்கு செல்லாமல் நேராக அதிமுக அலுவலகம் செல்வார் என்று கூறப்படுகிறது.

சசிகலாவை தடுக்க பிளான்
இந்த நிலையில்தான் சசிகலாவை தடுக்கும் விதமாக அதிமுக அலுவலகத்தில் ஆட்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்களை தடுக்கும் விதமாக 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை களமிறக்கி இருக்கிறார்களாம். எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் ஆதி ராஜாராம் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுக தலைமை அலுவலகத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. சசிகலா வந்தால் அவரை வாசலிலேயே தடுத்து நிறுத்தும் வகையில் இவர்கள் இறக்கப்பட்டு உள்ளனராம்.

எங்கே இருக்கிறார்கள்
இது ஒரு பக்கம் என்றால், அதிமுக அலுவலகத்தின் பின் பக்கத்தில் தேர்தல் நேரத்தில் விருப்பமனு கொடுக்கப்படும் இடத்தில் சில அதிமுக தொண்டர்கள் சிலர் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்று ஜாலியாக உள்ளார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் ஒன்இந்தியா தமிழுக்கு கிடைத்தன. பின்பக்கம் இவர்களுக்கு நேரம் செல்வது தெரியாமல் இருப்பதற்காக பெரிய திரையும், ப்ரோஜக்டரும் போட்டுள்ளனர்.

ஆட்டம் பாட்டம்
இதில், "ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம்" லேட்டஸ்ட் வெர்ஷனான ராகவா லாரன்ஸ் பாடலை போட்டு அதிமுக பெண் நிர்வாகி ஒருவர் ஆட்டம் போட, ஆண் நிர்வாகிகள் கைதட்டி வரவேற்று ரசித்து வருவது நன்கு தெரிகிறது. சசிகலாவை தடுக்க காவலுக்கு ஒரு பக்கம் ஆட்கள் குவிந்த நிலையில், இன்னொரு பக்கம் ஆடலுடன் பாடல் கேட்குதோ என்று சொல்லும் அளவிற்கு இவர்கள் ஜாலியாக கொண்டாடி வருகிறார்கள். அங்கு பொதுச்செயலாளர் பதவிக்காக எடப்பாடி சட்ட போராட்டம் செய்து வரும் நிலையில்.. "வாத்தியாரே போய் சுகர் மாத்திரை சாப்பிட்டுட்டு வரட்டுமா" என்று காமெடியாக கேட்கும் "திமிங்கலம்" போல.. சீரியசான நேரத்திலும் இவர்கள் ஆடல் பாடல் என்று ஜாலியாக இருக்கிறார்கள் என்று சிரித்து செல்கிறார்கள் சில நிர்வாகிகள்.