சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

65-வது பிறந்த நாள்- பிரபாகரன் வாழ்வே எங்களது கொள்கை சாசனம்: சீமான்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபகாரனுக்கு 65-வது பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது வாழ்வே தங்களது கொள்கை சாசனம் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த வரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த தமிழ்த்தேசிய இனத்தின் உயிராக, உணர்வாக, அறிவாக, ஆற்றலாக, முகமாக முகவரியாக விளங்குகிற நமது தேசியத்தலைவர் என்னுயிர் அண்ணன் வே.பிரபாகரனின் 65 ஆவது பிறந்த நாள் வாழ்த்துகளை உலகம் முழுக்கப் பரந்து வாழும் என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளிடத்தில் பகிர்ந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியும், அளப்பெரிய பெருமிதமும் அடைகிறேன்.

அடிமைத்தனத்திற்கெதிரான உலகப்போராட்டக்களங்களில் எத்தனையோ நாயகர்கள் தோன்றி மண்ணையும், மக்களையும் காப்பாற்றுகிற வீரர்களாக வாழ்ந்துக் காட்டி மறைந்திருக்கிறார்கள். வரலாற்றின் வீதிகளில் வீழ்த்தப்பட்ட இனத்தின் அடிமை விலங்கினைத் தகர்க்க எத்தனையோ தலைவர்கள் தோன்றியிருக்கிறார்கள்.

ஆகச் சிறந்த புனிதர்

ஆகச் சிறந்த புனிதர்

காலங்காலமாய்க் கண்ணீர் சிந்தும் மக்களின் வேதனையைப் போக்கி, மதிப்புறு வாழ்வு ஒன்றுக்காகத் தன் வாழ்வையே முன்னிறுத்திப் போராடிய எத்தனையோ அதிமனிதர்கள் இந்த அகிலத்தில் அவதரித்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாவரையும் காட்டிலும் ஆகச்சிறந்த உதாரணத்தலைவனாக, எக்குறையும் சொல்ல இயலா மனிதப்புனிதராக பிரபாகரன் திகழ்ந்தார்கள்.

அறம் காத்த பிரபாகரன்

அறம் காத்த பிரபாகரன்

நம்மினத்தைக் கொன்றொழித்த சிங்களர்களால்கூடக் குற்றஞ்சாட்டவோ, களங்கம் கற்பிக்கவோ முடியாத அளவுக்குக் காவியங்களில் மட்டுமே நாம் பார்த்த ஓர் அதிஉன்னதப் புனித வாழ்வை நம் கண்முன்னே வாழ்ந்த வரலாற்று பெருநாயகன் பிரபாகரன். மறம் காட்டி நின்றாலும் இறுதிவரை களத்திலே அறம் போற்ற நின்றார் அவர்.

ஆறு படைகள் அமைத்தவர்

ஆறு படைகள் அமைத்தவர்

அடிமைத்தேசிய இனத்தின் விடுதலைக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து இந்தப் பூமிப்பந்தில் தமிழர்களுக்கென்று ஒரு தேசம் படைக்க, சிங்கள இனவாத அரசிடம் அடிமைப்பட்டுக் கிடந்த தமிழர்களின் தாய் நிலத்தை மீட்டெடுக்கத் துப்பாக்கி ஏந்தி துணிந்து நின்றார். ‘விடுதலை என்பது விற்பனைப் பண்டம் அல்ல. அது உயிரையே விலையாகத் தந்து போராடிப் பெறுகிற புனித உரிமை', என்பதைத் தெளிவாக உணர்ந்து, ‘உயிர் உன்னதமானது; ஆனால், அதனினும் உன்னதமானது எமது உரிமை; விடுதலை; கெளரவம்' என வீரமுழக்கமிட்டு, உயிரை ஒரு குப்பியில் அடைத்து தன் கழுத்திலேயே தொங்கவிட்டு, விடுதலைத்தாகம் கொண்டு விண்ணுக்கும் மண்ணுக்குமாக, கடலுக்கும், கரைக்குமாக ஆறு படைகள் கட்டிக் களத்தில் பாய்ந்து, உலகமே ஒற்றை அணியில் தனக்கு எதிராய் நின்றாலும் அதனை எதிர்த்து உள்ளம் தளராது, தாய் மண்ணின் விடுதலைக்காகத் தன்னலமற்றுக் களத்தில் நின்ற ஒப்பற்ற மாவீரன் பிரபாகரன்.

போர் வெறியர் அல்லர்

போர் வெறியர் அல்லர்

உலகமே தனது வீரத்தைக் கொண்டாடினாலும் தன்னை ‘மாவீரன்' என விளிக்க ஒருபோதும் அவர் விரும்பியதுமில்லை; அதனை அனுமதித்ததுமில்லை. களத்தில் வீரவிதைகளாக விழுந்த விடுதலைப்போராளிகளையே ‘மாவீரர்கள்' என்றார். உலக வரலாற்றில் எந்நாட்டின் துணையுமில்லாமல், எவரது உதவியுமில்லாமல் தன் சொந்த நாட்டு மக்களையே ஒரு படையாகக் கட்டி, இராணுவமாகத் திரட்டி அவர்களுக்குப் பயிற்சியும், போர்த்திறனும் போதித்து உலக வல்லாதிக்கங்களை எதிர்த்து விடுதலைப்போர் புரிந்த உலகின் ஒரே புரட்சியாளர் பிரபாகரன் மட்டும்தான். அவர் ஆயுதங்கள் மீதும், இராணுவ பலத்தின் மீதும் தீரா காதல் வன்முறையாளரும் அல்லர்; போர்வெறியரும் அல்லர்.

சிங்களரை குறிவைக்காதவர்

தன் அன்னை நிலத்தின் மீது படிந்திருக்கும் அடிமைப்புழுதியை அகற்றப் புயலென வீசிய புரட்சிக்காற்று அவர். போர்விதிகளுக்கு மாறாகத் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையும், நச்சுக்குண்டுகளையும், கனரக ஏவுகணைகளையும் சிங்கள இனவாதிகள் பயன்படுத்தியபோதும், கண்ணசைத்தால் கணநொடியில் எதிரிக்குக் கல்லறை கட்டிவிடும் கரும்புலிகள் தன்னிடம் இருந்தும், ‘தனக்கு எதிரி சிங்கள இராணுவம் தானே ஒழிய, சிங்கள மக்கள் அல்லர்' என்றறிவித்து அறம் காத்த பெருந்தலைவர் பிரபாகரன்.

தன்னிறைவான பொருளாதாரம்

தன்னிறைவான பொருளாதாரம்

உலகமே தனக்கு எதிராய் நின்றபோதிலும் தனது தாய் நிலத்தில் சர்வ இறையாண்மையுள்ள ஒரு சமதர்ம தமிழீழ நாட்டைக் கட்டியமைத்து, அங்கு சனநாயக விழுமியங்கள் போற்றுகிற மக்கள் நலன் சார்ந்த ஒரு உதாரண அரசினை நம் கண்முன்னால் நடத்திக் காட்டியவர் பிரபாகரன். பொருளாதாரத்தடையில் இருந்த போதும்கூடத் தன்னிறைவான வாழ்வினைத் தனது மக்களுக்குத் தந்து பொருளாதார விடுதலையை அடைந்து காட்டியவர் பிரபாகரன்.

தாய்மொழி வழி கல்வி

தாய்மொழி வழி கல்வி

தாய்மொழிக்கல்வியும், சாதியற்ற சமூகமும் நமக்கெல்லாம் இங்கே கனவாகவே இருக்கின்றன. ஆனால், தான் உருவாக்கிய ஈழத்திருநாட்டில் தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை தாய்மொழிக் கல்விக்கூடங்களை நிறுவி, மருத்துவக் கல்வி முதல் இராணுவக் கட்டளைகள்வரை அனைத்தையும் தமிழ் மொழியிலேயே தந்து, உலகத்தின் மிக மூத்த மொழியான தமிழ் மொழியைத் தழைக்கச்செய்தவர் பிரபாகரன்.

சாதிய தாழ்வுகள் நீக்கம்

சாதிய தாழ்வுகள் நீக்கம்

தாயகத்தமிழகத்தில் பெரும் சாபமாய்க் காலங்காலமாய் நம்மைத் தொடர்ந்து வருகிற சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஈழ சோசலிசக் குடியரசு நாட்டில் ஒழித்துக்காட்டி, ஏற்றத்தாழ்வு நீங்கிய சமதர்மச் சமூகத்தைப் படைத்துக் காட்டியவர் பிரபாகரன். மண்ணடிமைப் போக்க மறம் பாடி நின்றாலும், பெண்ணடிமைப் போக்க பெரும் செயல்கள் பல செய்து நிகழ்காலத்தில், ஆணுக்குப் பெண் சமம் என இந்த உலகத்திற்கு அறிவித்து நடைமுறைப்படுத்தியவர் அவர்.

பெண்களும் சமம்

பெண்களும் சமம்

இந்த உலகில் இதுவரை தோன்றியிருக்கிற பல புரட்சிகர இயக்கங்களைவிட, ஆணுக்கு நிகராகப் பெண்களும் புலிகளாகப் பாய்ந்தப் புறநானூற்று வீரத்தை புவியில் நிகழ்த்தியவர். தன்னலம் கொண்டு, ‘தான் பெரிது! தன் குடும்பம் பெரிது' என்று தன் வாழ்வை அமைத்துக் கொள்கிறவர்கள் வாழ்கிற இக்காலத்தில், தன்னைப்போலவே தன் குடும்பத்தையும் ஈக வாழ்விற்கு அர்ப்பணித்து உலக வரலாற்றில் இதுவரை தோன்றிய மற்ற தலைவர்கள் எவரைக் காட்டிலும் உயர்ந்த உன்னதத் தியாகத்தை, நினைத்துப் பார்க்க முடியா ஈகப் பெருவாழ்வைக் கொண்டவர்,

மகனுக்கு பிரபாகரன் பெயர்

மகனுக்கு பிரபாகரன் பெயர்

என் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் அவர் துணைகொண்டே கடக்கிறேன். இந்த அரசியல் சூழல்கள் தரும் சங்கடங்களில் இருந்தும், பெரும் மன அழுத்தங்களிலிருந்தும், தீரா வேதனைகளிலிருந்தும் என்னை நானே மீட்டுக்கொள்ள என் உயிர் அண்ணனிடத்திலிருந்துதான் நான் வாழ்வதற்கான இலட்சிய உறுதியைப் பெறுகிறேன். அவருடைய பெயரையே என் மகனுக்கும் சூட்டி அவனிலும் அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

எங்கள் கொள்கை சாசனம்

எங்கள் கொள்கை சாசனம்

அவரது வாழ்வே இந்த உலகத்திற்கு நாங்கள் அறிவிக்கும் எமது கொள்கை சாசனமாக, எமது இலட்சியப் பற்றுறுதியின் அடையாளமாக எம் முன்னால் புகழொளியோடு சுடர்விட்டு நிற்கிறது. வே.பிரபாகரனுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

English summary
Naam Thamizhar Party Chief Co-ordinator Seeman celebrated the 65th birth anniversary of LTTE leader Prabhakaran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X