சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பீமா கோரோகான்: அம்பேத்கர் குடும்ப உறுப்பினர் ஆனந்த் டெல்டும்டே கைதுக்கு சீமான் கடும் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: பீமா கோரேகான் வழக்கில் அரசியல் சாசன சிற்பி அம்பேத்கரின் குடும்ப உறுப்பினரான ஆனந்த் டெல்டும்டே கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Seeman condemns arrest of Anand Teltumbde

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

நாடறிந்த சிந்தனையாளரும், புகழ்பெற்ற எழுத்தாளரும், மாந்தநேய படைப்பாளியும், மனித உரிமை செயற்பாட்டாளருமான பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே கைதுசெய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. கோரோகான் கலவரத்தைத் தனது பேச்சின் மூலம் தூண்டியதாகக்கூறி அவரை மத்தியப் புலனாய்வு அமைப்பு கைதுசெய்திருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது.

டெல்லியில் குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிராக அறவழியில் நடந்தேறிய போராட்டத்தை வன்முறைக்களமாக மாற்றி, கலவரமாக்கிய மதவாதிகளின் செயல்களுக்கு நீதிமன்றமே கண்டனம் தெரிவித்து கைது செய்யக்கோரியபோதும் அவர்களை கைதுசெய்யாத இந்நாட்டின் ஆட்சியதிகாரம், ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கருத்தியல் கலகம் செய்திட்டதால் பேராசிரியர் ஆனந்த் மீது பொய்யாக வழக்கைப் புனைந்து கைது செய்திருக்கிறது.

மாட்டிறைச்சி உண்டதற்கெதிராகவும், ஜெய்ஸ்ரீராம் எனக்கூற வற்புறுத்தியும் முறையே உழைக்கும் மக்கள் மீதும், இசுலாமிய மக்கள் மீதும் என நாள்தோறும் நடந்தேறும் கொடிய வன்முறைகளையும், சகிப்புத்தன்மைக்கு ஊறுவிளைவிக்கும் இக்கோரத்தாக்குதல்களையும் கண்டும் காணாதது போல கடந்துசெல்லும் ஆட்சியாளர்கள் பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டேவை ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மதவாதத்திற்கு எதிராகவும், அரசப்பயங்கரவாதத்திற்கு எதிராகவும் கருத்தியலால் கிளர்ச்சி செய்திட்ட நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, கௌரி லங்கேஷ் போன்றவர்கள் ஆயுதத்தினால் தாக்குதல் தொடுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டது போல, ஆனந்த் டெல்டும்டே சட்டத்தின் பெயரால் வழக்குத் தொடுக்கப்பட்டு அடக்குமுறைக்குள்ளாகிப் பிணைக்கப்பட்டிருக்கிறார்.

பேராசியரியர் ஆனந்த் டெல்டும்டேவைக் கைதுசெய்திருக்கும் இந்நடவடிக்கை இந்தியா முழுவதுமுள்ள முற்போக்காளர்கள், அறிஞர் பெருமக்கள், மண்ணுரிமைப் போராளிகள் என யாவரையும் மிகப்பெரும் கலக்கத்திற்குள்ளாக்கியுள்ளது. அவர்கள் யாவரும் இக்கைதிற்கு எதிராகக் குரலெழுப்பி வருகிறார்கள். அதனை முழுமையாக ஆதரித்து, அவர்களது கோரிக்கையோடு நாம் தமிழர் கட்சி கரம்கோர்க்கிறது.

நாடு முழுவதும் ஊரடங்கு அமலிலிருக்கும் இக்காலக்கட்டத்தில் செய்யப்பட்டிருக்கும் இக்கைது நடவடிக்கை சனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் கொடுஞ்செயலாகும். ஆகவே, ஆனந்த் டெல்டும்டே மீது தொடுக்கப்பட்டிருக்கும் இக்கொடிய அடக்குமுறையைத் தளர்த்தி அவர் மீதான வழக்கைத் திரும்பப் பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டுமென மத்திய அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்

இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

English summary
Naam Tamilar Party Chief Co-ordinator Seeman has condemned that the arrest of Anand Teltumbde.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X