சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜகவின் ஒரே தேசம் முழக்கம்.. மாநிலங்களின் தன்னாட்சி மீதான யுத்தம்... சீமான்

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவின் ஒரே தேசம், ஒரே தேர்தல், ஒரே பொதுவிநியோகம் எனும் முழக்கமானது மாநிலங்களின் தன்னாட்சி மீதும் இந்திய இறையாண்மை மீதும் தொடுக்கப்பட்ட போர் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியா என்பது ஒற்றை நாடல்ல! அது பல்வேறு தேசங்களின் கூட்டமைப்பு; பலதரப்பட்ட தேசிய இனங்கள் மாறுபட்ட அடையாளங்களோடு சங்கமித்து, ஒன்றுபட்டு வாழும் ஓர் ஒன்றியம். இந்நாட்டில் வாழும் எல்லா மொழிவழித்தேசிய இனங்களும் தங்களது தனித்த பண்பாட்டு விழுமியங்களோடும், தங்களுக்கேரிய வாழ்வியல் அடையாளங்களோடும் வாழும் பன்முகத்தன்மையைச் சிதைத்து அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டு வேலைசெய்கிறது இந்துத்துவ அதிகாரப்பீடம்.

அதற்காகவே, 'ஒரே மொழி! ஒரே நாடு! ஒரே பண்பாடு! ஒரே தேர்தல்! ஒரே தேர்வு! ஒரே பொதுவிநியோகம்!' என ஒற்றை அடையாளத்தை நிலைநிறுத்த துடிதுடியாய்த் துடிக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. இந்தியா எனும் கூட்டாட்சித் தத்துவத்தை ஏற்றுக்கொண்ட பன்மைத்துவ நாட்டில் அதிகாரங்கள் யாவும் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டு, பரவலாக்கப்படும்போதுதான் கூட்டாட்சித் தத்துவம் எனும் உயரிய கோட்பாடு உயிர்ப்பெறும். வலுப்பெறும்.

சமனியத்தனியரசு

சமனியத்தனியரசு

பாதுகாப்புத்துறை, நாணயம் அச்சிடல், வெளியுறவுத்துறை போன்ற மிக முக்கியவற்றை மட்டும் மத்தியில் வைத்துக்கொண்டு மீதி யாவற்றையும் மாநிலங்களுக்கான அதிகார எல்லைக்குள் வைத்திருப்பதே சமனியத்தனியரசு அமைய வழிவகுக்கும். இந்திய நாட்டின் பாதுகாப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அதுவே உகந்தது.

இந்தியாவின் ஒற்றுமைக்கு ஆபத்த்

இந்தியாவின் ஒற்றுமைக்கு ஆபத்த்

அதனைச் செய்யாது, நாட்டின் மொத்த அதிகாரத்தையும் ஓரிடத்திலே குவித்துவைத்து மாநிலங்களின் மீது மத்திய அரசு ஆதிக்கம் செலுத்த முற்படுகிறபோது அது இந்தியா எனும் கட்டமைப்பிற்கே பேராபத்தை உண்டாக்கும். தற்போது கஸ்தூரி ரெங்கன் தலைமையிலான குழு அளித்துள்ள பரிந்துரைகளைக் கொண்டு ‘புதிய கல்விக்கொள்கை' எனும் பெயரில் மும்மொழிக்கொள்கைத் திட்டத்தின் வாயிலாக இந்தியைத் திணித்திட முற்படுவதும், நாடு முழுமைக்குமுள்ள அரசின் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் போன்றவற்றில் தேசிய பொது நுழைவுத் தேர்வு நடத்த வழிவகைச் செய்வதும் மாநிலங்களின் கல்வி உரிமையை முழுமையாகப் பறிக்கும் கொடுஞ்செயலாகும்.

சமூக அநீதிக்கான தேர்வுகள்

சமூக அநீதிக்கான தேர்வுகள்

பல்வேறு வகையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், மாறுபட்ட நிலவியல் அமைப்புகளும் இருக்கிற இந்நாட்டில் ஒரே மாதிரியான தேர்வுமுறையினைக் கொண்டு வருவது சாத்தியமற்றது என்பது மட்டுமல்லாது சமூக அநீதியும்கூட. ஒரே மாதிரியான கற்றல் வாய்ப்புகளையும், அதற்குரிய வசதிகளையும் ஏற்படுத்த முயலாத இந்நாடு ஒரே மாதிரியான தேர்வை மட்டும் நாடு முழுமைக்கும் நடத்த முற்படுவது மிகப்பெரும் மோசடியாகும். 30 கோடி மாணவர்களின் கல்வியுரிமையில் தலையிட்டுக் கல்வியை முழுக்க முழுக்கத் தனியார்வசமாக்குவதும், பாடத்திட்டங்களைப் படிப்படியாக இந்துத்துவமயப்படுத்துமான நோக்கங்களைக் கொண்ட சதிச்செயலின் செயலாக்கமே இது.

வடநாட்டவருக்காக ஒரே பொதுவிநியோகம்

வடநாட்டவருக்காக ஒரே பொதுவிநியோகம்

கல்வியிலே முதன்மையாகத் திகழுகிற நாடுகள் யாவும் தாய்மொழி வழிக்கல்வியைத் தந்து, அரசே கல்விக்கூடங்களை ஏற்று நடத்தி அந்நாட்டின் அறிவுலகத்தைத் தீர்மானிக்கிறது. ஆனால், இந்நாடு கல்வியை முற்றுமுழுதாக மேட்டுக்குடி மக்களுக்கானதாக மாற்றி வணிகமாக்க அணியமாகிவிட்டது. அதேபோல, பொது விநியோகத்திட்டத்தை நாடு முழுமைக்கும் ஒரே குடும்பத்திட்டத்தின் மூலம் பெறலாம் என்ற அறிவிப்பானது பேரதிர்ச்சியைத் தருகிறது. பொதுவிநியோகத்திட்டத்தை மிகச்சிறப்பாக அமல்படுத்தி வரும் மாநிலங்களில் தமிழகம் முதன்மையானது. அதனால்தான், உணவுப்பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த முற்பட்டபோது அதனை முழுதாக எதிர்த்தோம். இப்போது தமிழகத்தின் பொது விநியோகத்தை இந்தியா முழுமைக்குள்ள எந்த மாநிலத்தவரும் பகிர்ந்துகொள்ளலாம் எனும் வாய்ப்பை வழங்கியிருப்பதன் மூலம், தமிழகத்திலுள்ள பொது விநியோகப்பொருட்களை வடநாட்டவர்கள் மிக எளிதாக அபகரித்துக் கொள்ளும் அபாயம் இருக்கிறது.

சீர்குலைக்கும் பேரழிவு செயல்

சீர்குலைக்கும் பேரழிவு செயல்

ஏற்கனவே, இலட்சக்கணக்கான வடநாட்டவர்கள் தமிழகத்திற்குள் புகுந்து இங்கேயே வாக்குரிமைப் பெற்று தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்து வருகின்றனர். கட்டற்ற வடநாட்டவர்களின் இவ்வரவால் தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற வேளையில் வந்திருக்கிற இவ்வறிப்பானது வடவர்களுக்குக் கடைவிரித்துத் தமிழகத்தைப் பந்தி வைக்கிற பேராபத்தான செயலாகும். அண்மையில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிற வேளையில், பாராளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும், உள்ளாட்சி மன்றங்களுக்கும் நாடு முழுமைக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த ஆலோசித்து வரும் மத்திய அரசின் முயற்சியானது நாட்டைச் சீர்குலைக்கும் பேரழிவுச் செயலாகும்.

ஒரே தேர்தல் எப்படி சாத்தியம்?

ஒரே தேர்தல் எப்படி சாத்தியம்?

இது இந்தியாவின் அரசியலமைப்புச் சாசனத்திற்கே எதிரானது. அடுத்தப் பாராளுமன்றத் தேர்தலுக்குள் 30 சட்டமன்ற, யூனியன் பிரதேசங்களுக்கு நாடு முழுதும் தேர்தல் நடக்கவிருக்கிறது. இவையாவற்றின் கால வரம்பையும் மாற்றியமைத்து, ஒருங்கிணைப்பது அசாத்தியமானது மட்டுமன்று அவசியமற்றதும்கூட! வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி பெரும்பான்மையில்லாது 13 நாட்களிலேயே கவிழ்ந்தது போல, ஒரு ஆட்சி கவிழ்க்கப்பட்டால் நாடு முழுமைக்கும் சட்டமன்றங்களையும் கலைத்துவிட்டுப் புதிதாகத் தேர்தல் நடத்துவார்களா என்கிற கேள்வியே, இம்முறை நடைமுறைக்குத் துளியும் உகந்ததல்ல என்பதை விளக்கும்.

ஒற்றை அடையாளத்தை வலுப்படுத்த

ஒற்றை அடையாளத்தை வலுப்படுத்த

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 60,000 கோடி செலவு செய்யப்பட்டதாக முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரோசி வெளியிட்ட சி.எம்.எஸ். அறிக்கை கூறுகிறது. இத்தொகையை மிச்சப்படுத்தவா ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முயற்சிக்கிறது மோடி அரசு? அவ்வளவு சிக்கனம் கொண்ட அரசென்றால் 3,000 கோடியில் பட்டேலுக்குச் சிலை வைக்கிற முயற்சியைக் கைவிட்டு அத்தொகையை மிச்சப்படுத்தி இருக்கலாமே, ஏன் செய்யவில்லை? கடந்த மார்ச், 2018 வரையிலான ஐந்தாண்டு கணக்கெடுப்பில் 2 இலட்சத்து 30 ஆயிரத்து 287 கோடி வாராக்கடனைத் தள்ளுபடி செய்தததாகப் பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறதே மத்திய அரசு, அத்தொகையைப் பெற்றிருந்தாலே எவ்வளவோ சாதித்திருக்கலாமே? ஆகவே, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது பொருளாதாரச் சிக்கனத்திற்காக அல்ல! அது தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தை மாநிலத்தில் வலுவாக ஊன்றுவதற்கும், நாட்டின் பன்முகத்தைச் சிதைக்கும் தங்களது ஒற்றை அடையாளத்துக்கு வலுசேர்ப்பதற்கும்தான் என்பது இதன்மூலம் மிகத்தெளிவாகிறது.

ஒற்றைய இந்தியாவை உருவாக்க..

ஒற்றைய இந்தியாவை உருவாக்க..

ஆகவே, அகண்ட பாரதத்தைக் கனவாகக் கொண்டு ஒற்றை இந்தியாவை உருவாக்கத் துடிக்கும் மோடி அரசின் இச்செயல்கள் யாவும் மாநிலங்களின் தன்னாட்சி மீதும், இந்தியாவின் இறையாண்மையின் மீதும் தொடுக்கப்பட்ட போர் என்பதைப் புரிந்து விழிப்புடன் இருக்க வேண்டும். ஆகவே, நாட்டின் ஓர்மையினையும், பன்முகத்தன்மையினையும் சீர்குலைக்கும் இம்முயற்சிகள் யாவற்றையும் மத்தியில் ஆளும் பாஜக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத்தவறும்பட்சத்தில், இந்தியா எனும் கட்டமைப்பே

இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

English summary
Naam Thamizhaar Chief Co-Ordinator Seeman has blamed that BJP's One Slogan is War against the States Autonomus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X