• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

புலிகளால் சோனியா உயிருக்கு அச்சுறுத்தல் என பேசுவதா? திமுகவுக்கு சீமான் கடும் கண்டனம்

|

சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகளால் சோனியா காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக லோக்சபாவில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு கூறியுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

விடுதலைப்புலிகளால் சோனியா காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது' எனப் திமுகவின் லோக்சபா உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காங்கிரசு கட்சியின் இடைக்காலத் தலைவர் அம்மையார் சோனியா காந்திக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பாதுகாப்புப் படையின் உயரியப் பாதுகாப்பு ரத்துச் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில், இவ்வாறு பேசியிருக்கிறார் டி.ஆர்.பாலு.

சோனியா காந்திக்கு உயரியப் பாதுகாப்பு வழங்கக்கோருவது அவர்களது உரிமை; விருப்பம். ஆனால், அதற்கு விடுதலைப்புலிகள் பெயரைப் பயன்படுத்துவதும், அவர்களால் சோனியாவின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகக் குற்றஞ்சாட்டுவதும் அபாண்டமானது; அடிப்படையில்லாதது.

டி.ஆர். பாலு பேச்சு

டி.ஆர். பாலு பேச்சு

விடுதலைப்புலிகளை அழித்து முடித்துவிட்டதாக இந்திய அரசே கூறியிருக்கிற நிலையில், அதற்கு விதிக்கப்பட்ட தடையே தேவையற்றது எனப் பல ஆண்டுகளாகக் கூறி வருகிறோம். அத்தடையின் மூலம் ஒட்டுமொத்த ஈழத்தமிழ்ச் சொந்தங்களையும் சந்தேகக்கண்ணோடு பார்ப்பது அவர்களுக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்துகிறது எனக்கூறித்தான் தடை விலக்கைக் கோருகிறோம். இந்நிலையில், டி.ஆர்.பாலு பேசியிருப்பது எதிராளியின் நச்சுப்பரப்புரைக்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது.

ஈழத்தில் தமிழர்களை நசுக்கும் சூழல்

ஈழத்தில் தமிழர்களை நசுக்கும் சூழல்

ஈழ இனப்படுகொலையில் நேரடியாகத் தொடர்புடைய கோத்தபய ராஜபக்சே இலங்கையின் சனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் அரசியல் சூழலில் ஈழத்தமிழர்கள் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியிருக்கிறார்கள். இந்த நேரத்தில் திமுகவின் பாராளுமன்ற குழுத்தலைவர் ‘புலிகளால் ஆபத்து' என்று பேசுவது ஏற்கனவே பல்லாண்டுகள் நெருக்கடியில் இருக்கும் ஈழத்தமிழர்கள், இன்னும் பல ஆண்டுகளுக்கு நசுக்கப்படும் சூழல் உருவாகப்போகிறது.

கூட்டணி தலைவருக்காக...

கூட்டணி தலைவருக்காக...

கோத்தபய ராஜபக்சே வெற்றிக்குப் பிறகு ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதைப் போன்று அறிக்கை வெளியிட்டத் திமுகவின் தலைமை டி.ஆர். பாலுவின் இந்தப் பேச்சை ஏற்றுக்கொள்கிறதா? ஆமோதிக்கிறதா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தனிமனித மரணத்தைக் காரணம் காட்டி, ஈழத்தில் 2 இலட்சம் தமிழர்களைக் கொன்றொழித்து, உலகம் முழுவதும் 10 இலட்சம் தமிழர்களை நாடற்ற அகதிகளாக அலையவிட்டு, எமது தாயகத்தைச் சிதைத்து அழித்த நயவஞ்சகச் செயலைச் செய்து முடித்த திமுக - காங்கிரசின் இனத்துரோகம் இன்றும் எங்கள் நெஞ்சில் ரணமாய் உறுத்திக் கொண்டிருக்க, அழித்தொழிக்கப்பட்ட எம்மின மக்களுக்கு நீதிகேட்டு ஈழப்படுகொலைக்கு ஒரு பன்னாட்டுப்போர்க்குற்ற விசாரணையையும், ஒரு பொது வாக்கெடுப்பையும் கேட்டுப் பத்தாண்டுகளாக நாங்கள் போராடிக் கொண்டிருக்கையில் அதற்குரிய எவ்வித முன்னெடுப்பையும் செய்ய முன்வராத திமுக, தனது கூட்டணித் தலைவரை மனம்குளிர வைக்க அவரது பாதுகாப்புக்குப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தியிருப்பது மிகவும் கீழ்த்தரமான, சந்தர்ப்பவாத அரசியல்!

மவுனம் கலைப்பார்களா?

மவுனம் கலைப்பார்களா?

திராவிடத்தின் இறுதி நம்பிக்கையெனக்கூறி, குறைந்த பட்ச திராவிடம் இருப்பதாகக்கூறி திமுகவை ஆதரிக்கிற திராவிட இயக்கத்தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், விடுதலைப்புலிகளுக்கு எதிரான திமுகவின் இந்நிலைப்பாட்டை ஆதரிக்கிறார்களா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். 2014ஆம் ஆண்டுப் பாராளுமன்றத் தேர்தல் நெருங்குகிற வேளையில், ஈழத்தமிழ் மக்களுக்குக் காங்கிரசு துரோகம் இழைத்துவிட்டதாகக்கூறி கூட்டணியைவிட்டு வெளியேறி நாடகமிட்ட திமுக, இன்றைக்குக் காங்கிரசின் ஒட்டுண்ணியாக மாறி புலிகளைக் கொச்சைப்படுத்துகிற வேலையில் இறங்கியிருக்கிறது.

துரோக வரலாறு

துரோக வரலாறு

சந்தர்ப்பவாதமும், நயவஞ்சகமும், இனத்துரோகமும் திமுகவுக்கு ஒன்றும் புதிதில்லையே! ஈழத்தில் இறுதிகட்டப்போர் நடைபெற்றபோது கொத்துக்கொத்தாய் தமிழர்கள் அந்நிலத்தில் செத்து விழுந்தபோது ஊடகச்சர்வாதிகாரம் செய்து அதனை மூடி மறைத்தது மறைந்த கருணாநிதி தலைமையிலான திமுக அரசு. ஈழப்பேரழிவை எடுத்துரைத்த என் போன்றோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்து கருத்துச்சுதந்திரத்தின் குரல்வளையை நெரித்ததோடு மட்டுமல்லாது, ஈழப்படுகொலையையும் மூடி மறைத்தது திமுக. போர் நிறுத்தம்கோரி தம்பி முத்துக்குமார் தொடங்கி 18க்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்நிலத்தில் தீக்குளித்து மாண்டபோதும் அவை யாவற்றையும் மறைத்துக் காங்கிரசு அரசின் இனப்படுகொலை நடவடிக்கைக்குப் பக்கபலமாய் இருந்து எம்மினச் சாவை வேடிக்கைப் பார்த்த வரலாற்றுத் துரோகத்தைச் செய்தது திமுக. அத்தகையத் துரோக வரலாறு கொண்ட திமுக எனும் தமிழர் விரோதக்கட்சி, இன்றைக்கு வெட்கமின்றிப் புலிகள் பெயரில் அரசியல் செய்ய முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது.

மன்னிப்பு கேட்க வேண்டும்

மன்னிப்பு கேட்க வேண்டும்

சிங்கள இனவாத கொடுமைகளுக்கு எதிராக நின்று தமிழினத்தின் காவல் அரணாக இருந்த விடுதலைப்புலிகளைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் கருத்துகளைத் தெரிவித்த திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உடனடியாகத் தனது கருத்துகளைத் திரும்பப் பெற்று, அதற்கு மன்னிப்புக்கோர வேண்டும். இல்லாவிடில், தேர்தல் களத்தில் தக்கப்பாடம் புகட்டுவோம் என எச்சரிக்கிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

 
 
 
English summary
Naam Thamizhar Party chief Co -ordinator Seeman has condemened DMK's Stand on LTTE.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X