• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பேராசிரியர் அறிவரசன் மறைவு தமிழ் தேசிய இனத்துக்கு பேரிழப்பு: சீமான்

|

சென்னை: தமிழ்ப் பேராசிரியர் அறிவரசன் மறைவு தமிழ்த் தேசிய இனத்துக்கு பேரிழப்பு என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:

Seeman condoles demise of Prof. Arivarasan

தமிழ் தேசிய அறிவுலகத்தின் மூத்த ஆளுமையும், தமிழ் அறிஞருமான பெருந்தமிழர் ஐயா பேராசிரியர் அறிவரசன் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். அவருடைய மறைவு தமிழ் தேசிய இனத்திற்கே நிகழ்ந்திருக்கிற ஈடுசெய்யமுடியாத இழப்பு. மு.செ‌. குமாரசாமி என்கின்ற இயற்பெயரைக் கொண்ட ஐயா அறிவரசனார் பேராசிரியராகப் பணிபுரிந்தது மட்டுமில்லாமல் மிகச்சிறந்த தமிழ் அறிஞராக, பல புகழ்பெற்ற நூல்களுக்கு நூலாசிரியராக, பேராசிரியர்களுக்கே பயிற்சி கொடுக்கிறதலைமை பேராசிரியராக, பத்திரிக்கையாளராக, தமிழின உரிமைச் சார்ந்து நடக்கும் போராட்டங்களில் கலந்து கொள்ளும் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மைகொண்ட மாபெரும் தமிழின ஆளுமையாகத் திகழ்ந்தவர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 2 ஆண்டுகள் தமிழ் வகுப்பு எடுத்த தமிழகப் பேராசிரியர் அறிவரசன் காலமானார்

திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த ஐயா பேராசிரியர் அறிவரசன் புத்தன் பேசுகிறான், மாமனிதர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தமிழ் அறிவோம், தமிழ்ப்பெயர் கையேடு, சோதிடப் புரட்டு உள்ளிட்ட பல நூல்களை எழுதியதோடுமட்டுமல்லாமல் தன் வாழ்நாளின் இறுதிவரை தமிழர் தாயகம் என்கின்ற மாத இதழை தொடர்ச்சியாக நடத்தி அவ்விதழ் மூலம் தமிழ்ச் சமூகத்தின் இனமொழி உணர்விற்காக அரும்பாடுபட்ட வாழ்க்கை அவருடையது. மறைந்த பெருந்தமிழர் அறிவரசன் அறிவாற்றலைக் கண்டு வியந்த தேசியத்தலைவர் பிரபாகரன், ஐயா அவர்களைத் தமிழீழ நாட்டிற்கு அழைத்து அங்குள்ள மாணவர்களுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்கப் பணித்தது வரலாற்று நிகழ்வாகும்.

ஈழநாட்டில் அவர் தங்கியிருந்த அனுபவங்கள் குறித்து ஈழத்தில் வாழ்ந்தேன் இரண்டாண்டுகள் என்கின்ற நூலையும், தமிழ் தேசிய இனத்தின் விடுதலை உணர்ச்சியைப் போற்றும் வகையில் விடுதலைபுரம் என்கின்ற காப்பியத்தையும் பேராசிரியர் அறிவரசனார் எழுதியிருக்கிறார். பல உலக நாடுகளுக்குச் சென்று அங்கு வாழ்கின்ற தமிழ் பேராசிரியர்களுக்கு முதுநிலை தமிழ்ப் பயிற்சி அளித்து உலகமெல்லாம் தமிழ்மொழி சிறக்க உழைத்த பெருந்தகையாகப் பேராசிரியர் அறிவரசன் திகழ்ந்தார்.

என் மீது தனிப்பட்ட அன்பினைக் கொண்ட ஐயாவை, நான் தமிழீழத்திற்குச் சென்றபோது எனக்கு முன்னரே அங்குக் களத்தில் இருந்ததும் செயல்பட்டதும் அதை நேரில் கண்டதும் எப்போதும் என் நெஞ்சத்தை விட்டு அகலாது. தமிழ் தேசியத் இனத்திற்கான ஒரு அரசியலை தாயகத் தமிழகத்தில் கட்டமைக்க நாம் தமிழர் என்கின்ற அமைப்பினை இம்மண்ணில் நான் உருவாக்கிய போது, நாம் தமிழர் கட்சியின் முக்கியப் படைப் பிரிவான இளைஞர் பாசறையின் பொறுப்பாளர்களுக்குப் பேராசிரியர் அறிவரசனார் ஒரு நாள் முழுக்கக் கும்பகோணத்தில் தங்கியிருந்து பயிற்சி அளித்தது மறக்கமுடியாத நிகழ்வாகும்.

மூன்று நாட்களுக்கு முன் விக்கிரமசிங்கபுரம் கூட்டத்திற்குச் சென்ற பொழுது கூட அய்யாவின் குடும்பத்தினரை சந்திக்க நேர்ந்தபொழுது ஐயாவின் உடல்நலம் விசாரித்தேன். அதற்குள் அவரின் மறைவு செய்தி வந்திருப்பது மிகுந்த துயரத்தை தருகிறது. அவரை இழந்து வாடுகிற தமிழ் தேசிய இனத்தின் அறிவுலகத்தின் துயரத்தில் அவருடைய மாணவர்களில் ஒருவனாக நானும் பங்கேற்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும், அவரது உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த ஆறுதலையும், இரங்கலையும் தெரிவிக்கிறேன். மறைந்த தமிழறிஞர் பேராசிரியர் அறிவரசனார் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Naam Tamilar Chief Co-ordinator Seeman has condoled the demise of Tamil Scholar Prof. Arivarsan.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X