சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காவிரி மேலாண்மை ஆணைய விவகாரம்- வரலாறு காணாத மக்கள் திரள் போராட்டம் - சீமான் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுசெல்லக் கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் இன்று வெளியிட்ட அறிக்கை:

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் வேகமாகப் பரவிவரும் வேளையில் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தவோ , ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களை வறுமை, பசிக்கொடுமையிலிருந்து மீட்டெடுக்கவோ உருப்படியான எந்தவொரு முயற்சியையும் இதுவரை எடுக்காத மத்திய அரசு நோய்த்தொற்று அச்சத்தால் மக்களின் கவனம் திசைதிரும்பியுள்ள நேரத்தில் , எவ்விதப் போராட்டத்திலும் மக்கள் ஈடுபடமுடியாது என்ற எண்ணத்தில் தொடர்ந்து மக்கள் விரோத செயல்களைத் செய்து வருகிறது.

குறிப்பாக, மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் செயல்களை மிக நுணுக்கமாகத் திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறது. அதில் ஒன்றுதான், தற்போது காவிரி நதிநீர் மீதான தமிழக உரிமையைப் பறிக்கும் விதமாக இந்திய நீர்வளத்துறை திருத்த விதிகள் என்ற பெயரில் மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய நதிநீர் கட்டுப்பாட்டு விதிகளாகும், முப்பதாண்டு காலம் தமிழகம் போராடியதன் விளைவாகக் கிடைத்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் என்னும் உரிமையை, ஒரே ஒரு திருத்தத்தின் மூலம் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் நீர்வளத்துறை அமைச்சகத்தின் மூலம் கொண்டு செல்ல முனைந்துள்ளது ஏற்றுக்கொள்ளவே முடியாத கொடுஞ்செயல்.

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில்... தமிழகத்தை வஞ்சிக்கிறது மத்திய பாஜக அரசு -ஜவாஹிருல்லா காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில்... தமிழகத்தை வஞ்சிக்கிறது மத்திய பாஜக அரசு -ஜவாஹிருல்லா

துரோகங்கள் தொடர்ச்சி

துரோகங்கள் தொடர்ச்சி

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கேற்ப தன்னாட்சி அமைப்பாக சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், பகுதி அளவே சுதந்திரமாகச் செயல்படக்கூடிய காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது ஆளும் பாஜக அரசு. இது காவிரி நதிநீர் உரிமையில் மத்திய அரசுகள் தமிழகத்திற்கு இழைத்த துரோகங்களின் தொடர்ச்சியாகும். தற்போது அந்தத் துரோக வரலாற்றின் நீட்சியாகக் காவிரி மேலாண்மை ஆணையத்தின் மீதமுள்ள தன்னாட்சித் தன்மையையும் தகர்த்து மத்திய அரசு தன்வயப்படுத்தியுள்ளது.

காவிரி உரிமை பறிப்பு

காவிரி உரிமை பறிப்பு

இனி மத்தியில் ஆட்சிக்கு வரும் கட்சியின் முடிவுக்கு ஏற்பதான் தமிழகம் காவிரியில் தண்ணீர் பெறமுடியும். இதன் மூலம் காவிரி நதிநீரில் தமிழகத்திற்கு இருந்த சிறிதளவான உரிமையும் மொத்தமாகப் பறிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மாறி மாறி மத்திய, மாநில அரசுகளை அமைக்கும் கட்சிகளின் ஆட்சிகளைக் காப்பாற்ற ஆடிய அரசியல் கண்ணாமூச்சி ஆட்டத்தில் முப்பது ஆண்டுகாலமாக முடங்கிபோயிருந்த காவிரி நதிநீர் உரிமை கடந்த ஓரிரு ஆண்டுகளாகத்தான் ஓரளவாவது உரிமைக்குரல் எழுப்பக்கூடிய உறுப்பினர்களைக் கொண்ட அரசியலுக்கு அப்பாற்பட்ட சுதந்திர அமைப்பாக உருவாகியது.

விவசாயிகள் வயிற்றில் அடிப்பதா?

விவசாயிகள் வயிற்றில் அடிப்பதா?

தற்போது அந்த அமைப்பு மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செல்வதென்பது மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்கும் கட்சிகளின் அரசியல் சுய இலாபத் தேவைக்கேற்ப தமிழகத்தின் வாழ்வாதார நதிநீர் உரிமையைப் பறித்து வயிற்றிலடிக்க வழிவகுக்கும் செயலாகும். காவிரி நடுவர் மன்றம் அமைப்பதில் தொடங்கி, அதன் இடைக்கால , இறுதித் தீர்ப்புக்களை அரசிதழில் காலம்தாழ்த்தி வெளியிடுவது, செயல்படுத்துவது, மேலாண்மை வாரியம் அமைக்காமல் இழுத்தடித்துப் பின், மேலாண்மை ஆணையமாக மாற்றியது என ஏற்கனவே தமிழகத்திற்கு மத்திய அரசுகள் செய்த தொடர் துரோகத்தால் தமிழகக் காவிரிச் சமவெளி தன் வளத்தையும், பலத்தையும் பாதியாக இழந்து நிற்கிறது.

மீண்டும் பாலைவனமாக்குவதா?

மீண்டும் பாலைவனமாக்குவதா?

மீத்தேன், ஐட்ரோ கார்பன் திட்டங்களால் மேலும் பாதிப்புக்குள்ளான காவிரிச் சமவெளி தமிழக அரசால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டப்பிறகே நிம்மதி பெருமூச்சுவிட்டது. அதற்குள் மீண்டும் காவிரி நதிநீர் உரிமையை மத்திய அரசு கையகப்படுத்துவது என்பது காவிரிச் சமவெளியை மீண்டும் பாலைவனமாக்கவே வழிவகுக்கும். இது வறட்சி, வெள்ளம், புயல், கடன் , மீத்தேன் , ஐட்ரோ கார்பன் , ஊரடங்கு எனப் போராடி, போராடி ஓய்ந்து போயிருக்கும் தமிழக விவசாயிகளை மேலும் வேதனைக்குள்ளாக்கும் செயலாகும். அதுவும், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையிலுள்ள நிலையில் தன்னிச்சையாக மத்திய அரசு இவ்வாறு அறிவித்திருப்பது அரசியலைமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

மக்கள் திரள் போராட்டம்

மக்கள் திரள் போராட்டம்

எனவே, மத்திய அரசு தன்னுடைய உத்தரவை திரும்பபெறாவிட்டால் காவிரிச் சமவெளிபகுதி மட்டுமின்றித் தமிழகம் முழுவதும் வரலாறு காணாத மக்கள் திரள் போராட்டத்தை மத்திய அரசு எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கிறேன். எனவே, மத்தியில் ஆளும் பாஜக அரசு உடனடியாகக் காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுவந்து தன்வயபடுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டுமெனவும் , மாநிலத்தை ஆளும் அதிமுக அரசு அதற்குத் தேவையான அழுத்தத்தைக் கொடுக்கவேண்டுமெனவும் தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தயங்கக்கூடாது எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு சீமான் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
Naam Tamilar Party Chief Co-Ordinator Seeman has opposed the Centre's decision to bring the Cauvery Water Management Authority under the Union Jal Shakti Ministry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X