சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 லட்சம் தமிழரை படுகொலை செய்த கோத்தபாயவை காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதிப்பதா? சீமான் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: ஈழத்தில் 2 லட்சம் தமிழரை துள்ள துடிக்க படுகொலை செய்த கோத்தபாய ராஜபக்சேவை டெல்லியில் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதிப்பது என்பது தேசிய அவமானம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துளார்.

இது தொடர்பாக சீமான் இன்று வெளியிட்ட அறிக்கை:

ஈழத்தில் இரண்டரை இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த மகிந்தா ராஜபக்சேவுக்கு வலதுகரமாக விளங்கிய அவரது சகோதரரும், இலங்கை அதிபருமான இனப்படுகொலையாளன் கோத்தபய ராஜபக்சேவை மத்தியில் ஆளும் பாஜக அரசு விருந்தினராக இந்தியாவிற்கு அழைத்திருப்பது எட்டுகோடித் தமிழ் மக்களையும் மொத்தமாய் அவமதிப்பதாகும். அரசுமுறைப் பயணமென்று கூறப்பட்டாலும் இது முழுக்க முழுக்க சிங்கள இனவாத அரசு நிகழ்த்திய இனப்படுகொலை குறித்து எவ்வித சர்வதேச அழுத்தமும் வராதவண்ணம் தடுக்கும் இந்திய அரசின் காய்நகர்த்தலே என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.

Seeman opposes to Gotabayas India visit

மகிந்தா ராஜபக்சே அதிபராக இருக்கும்போது அவரோடு துணைநின்று தமிழ் இனப்படுகொலையை நிகழ்த்தி முடிக்க துணைநின்றவர்கள் அவரது சகோதரர்கள் பசில் ராஜபக்சேவும், கோத்தபய ராஜபக்சேவும். அத்தகைய இனவாதிகளான ராஜபக்சே குடும்பமே இன்றைக்கு இலங்கையில் மீண்டும் அதிகாரத்திற்கு வந்திருப்பது தமிழர்களுக்குச் சோதனைக்காலம் என்பதனை எவராலும் மறுக்க முடியாது.

சிங்கள இனவாதியான கோத்தபய ராஜபக்சே பதவியேற்றது முதலே தமிழர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களும், தாக்குதல்களும் நிகழத் தொடங்கிவிட்டன. இந்நிலையில், அந்நிலத்தில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பும், நல்வாழ்வும் கேள்விக்குறியாகியிருக்கிற சூழலில் இனப்படுகொலை செய்திட்ட கோத்தபய ராஜபக்சேவை இந்திய அரசு விருந்தினராக ஏற்றுக் கொண்டாடுவது அப்பட்டமான தமிழர் விரோதப் போக்காகும்.

இந்திய எல்லையில் தலைநீட்டி அத்துமீற முயன்றுக் கொண்டிருக்கிற சீன அரசினுடைய கைக்கூலியான கோத்தபய ராஜபக்சேவை இந்தியா ஏற்பது இந்நாட்டின் இறையாண்மைக்கே பேராபத்தாய் முடியும். அன்பையும், அகிம்சையையும், சமாதானத்தையும் போதித்த அண்ணல் காந்தியடிகளின் சிலைக்குக் கோத்தபய ராஜபக்சே மாலை அணிவிக்கவிருப்பதாக வந்திருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இரண்டு இலட்சம் தமிழர்களைத் துள்ளத் துடித்த படுகொலை செய்திட்ட ஒரு கொடுங்கோலன், அன்பையும், அகிம்சையையும் போதித்த ஒரு பெருமகனின் சிலைக்கு மாலை அணிவிப்பது எங்கும் நடந்திராத பெருங்கொடுமை. இது அண்ணல் காந்திக்குச் செய்கிற அவமரியாதை; ஒட்டுமொத்த நாட்டிற்கே ஏற்பட்டிருக்கிற இழுக்கு; தேசிய அவமானம்.

எட்டுகோடித் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பெற்ற தமிழக அரசு இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க வேண்டும் எனவும், பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணையை இலங்கை மீது நடத்த வேண்டும், அங்கு வாழும் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றி எட்டாண்டுகளைக் கடந்தும் அத்தீர்மானத்தைத் துளியும் மதியாது சிங்கள இனவாத ஆட்சியாளர்களை இந்தியா கொண்டாடுவது தமிழ்த்தேசிய இனத்தின் இறையாண்மையை உரசிப்பார்ப்பது போன்றதாகும். இந்நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்டது தொடங்கி இந்நாட்டின் பொருளியலை தனது ஏகோபித்த வரி வருவாயால் தாங்கிப் பிடிப்பது வரை இந்தியாவின் விடுதலைக்கும், வளர்ச்சிக்கும் தமிழர்கள் ஆற்றியப் பங்கு மகத்தானது.

அதனையெல்லாம் கொச்சைப்படுத்தும் விதமாகவே இந்தியாவை ஆளுகிற அரசுகள் நடந்து கொள்வது தமிழர்களின் இன உணர்வையும், மான உணர்வையும் சீண்டிப் பார்ப்பதாகும். இதற்கு எனது வன்மையானக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசின் இத்தகைய பாராமுகமும், இன விரோதப்போக்கும் தொடருமானால் வருங்கால தமிழ்த்தலைமுறை பிள்ளைகளிடத்தில் இந்திய உணர்வே மொத்தமாய் பட்டுப்போகும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

English summary
Naam Thamizhar Party Chief Co-ordinator Seeman has opposed to Srilanka Prsident Gotabaya Rajapaka's India visit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X