சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

370-வது பிரிவை ரத்துச் செய்தது காஷ்மீர மக்களுக்கு செய்த பச்சைத்துரோகம்- சீமான்

Google Oneindia Tamil News

சென்னை: ஜம்மு காஷ்மீரத்துக்கான 370-வது பிரிவை ரத்து செய்து தன்னாட்சி உரிமையை பறித்திருப்பது அந்த மக்களுக்கு செய்த பச்சை துரோகம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

காஷ்மீர் மாநிலத்திற்குரிய சிறப்பு அங்கீகாரமான 370, 35ஏ ஆகிய சட்டப் பிரிவுகளை ரத்து செய்யும் மசோதாவைத் தாக்கல் செய்திருக்கும் மத்திய அரசின் முடிவு நாடு முழுக்கப் பெரும் அதிர்ச்சியினையும், கொந்தளிப்பினையும் ஏற்படுத்தியிருக்கிறது. இத்தோடு ஜம்மு காஷ்மீர், லடாக்கைப் இரண்டாகப் பிளந்து பிரித்து ஜம்மு காஷ்மீரைச் சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதியினைச் சட்டமன்ற அங்கீகாரமில்லாத யூனியன் பிரதேசமாகவும் மாற்ற முனைந்திருப்பது மிகப்பெரும் அநீதி. இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாக எதிர்க்கிறது; கண்டிக்கிறது.

இந்தியா என்பது பல்வேறு மொழிவழி தேசிய இனங்கள் சங்கமித்து வாழும் ஓர் ஒன்றியம். அத்தகைய தேசிய இனங்கள் அதிகாரத்தின் மூலம் இந்தியா எனும் ஒற்றைக்குடையின் கீழ் இணைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு தேசிய இனங்களுக்கும் ஒவ்வொருவிதத் தன்மையுண்டு. பன்முக இயல்புகளுண்டு. மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, நாகரீகம், வாழ்வியல், வேளாண்மை, உணவுப்பழக்கவழக்கம், ஆடை அலங்காரம், நிலவியல் சூழல், பொருளாதாரப்பின்புலம் என ஒவ்வொரு தேசிய இனமும் தனித்த குணநலன்களையும், மாறுபட்டப் பண்புகளையும் கொண்டு வாழ்ந்து வருகின்றன.

அவையாவற்றையும் சிதைத்தழித்து தேசிய இனங்களின் தனித்தன்மையைக் குலைத்து, தன்னுரிமையை முற்றாக மறுத்து ஒற்றைமுகமாக இந்தியாவை நிறுவ முனைவதே இந்துத்துவச் சித்தாந்தத்தின் அடிநாதம். அதனையேற்று ஆட்சி செய்யும் பாஜக அதற்கான செயல்வடிவத்தினை மாநிலங்களின் அதிகாரப்பறிப்பு மூலமாகச் செய்துவருகிறது. அதன் நீட்சிதான், காஷ்மீரத்தின் சிறப்பு அங்கீகாரத்தை ரத்து செய்திட்டு, தன்னாட்சி உரிமையைப் பறித்திட்ட இக்கொடுஞ்செயல் என்பதில் துளியவும் ஐயமில்லை.

காஷ்மீர் முடிவில் தவறில்லைதான்.. ஆனால் இத்தனை பேர் கைது எதற்கு.. குஷ்பு கேள்வி காஷ்மீர் முடிவில் தவறில்லைதான்.. ஆனால் இத்தனை பேர் கைது எதற்கு.. குஷ்பு கேள்வி

வரலாறு என்ன?

வரலாறு என்ன?

காஷ்மீரி எனும் தேசிய இனத்தின் வரலாற்று வழித்தாயகம் காஷ்மீரம். அது இந்தியா என்கிற நாடு உருவாக்கப்படுவதற்கே முன்பிருந்தே அத்தேசிய இன மக்களுக்குச் சொந்தமாக விளங்கும் ஒரு அழகிய நிலப்பரப்பு. இந்திய நாடு விடுதலையை எட்டிய நாளான 1947, ஆகஸ்ட் 15 அன்று காஷ்மீர் இந்தியாவோடு இல்லாது மன்னாட்சியின் கீழ் தன்னாட்சியோடு தனித்து இயங்கிக் கொண்டிருந்தது. பாகிஸ்தானின் ஒரு படைப்பிரிவினர் காஷ்மீரின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து அதனை ‘ஆசாத் காஷ்மீர்' ஆக்கிக்கொண்டபோது, இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்குமிடையே காஷ்மீர் நிலப்பரப்புக்காகப் போர் நிகழ்ந்தது. அதன்பிறகான காலக்கட்டத்தில்தான் காஷ்மீர் மன்னர் அரிசிங்கிற்கும், அன்றைய இந்தியாவின் வைசிராய் மவுண்ட்பேட்டன் பிரபுவுக்குமிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

தனித்து இயங்கிய காஷ்மீர்

தனித்து இயங்கிய காஷ்மீர்

அதன்படி, காஷ்மீரின் தன்னுரிமை பாதுகாக்கப்பட்டு, தங்களது தன்னாட்சி உரிமைக்குப் பங்கமில்லாது அதனை நிலைநாட்ட இந்தியா துணைநிற்கும் என உறுதியளிக்கப்பட்டது. இந்தியாவின் பிரதமர் நேருவும், காஷ்மீர் மக்கள் இந்தியாவோடு இணைய விரும்புகிறார்களா? பாகிஸ்தானோடு சேர விரும்புகிறார்களா? என்பது குறித்து ஒரு பொது வாக்கெடுப்பை அம்மக்களிடையே நடத்தி அவர்களது சுயநிர்ணய உரிமையை உறுதி செய்ய வாக்குறுதி அளித்தார். இத்தகைய பின்னணியில்தான், தங்களுக்கென்று தனித்த கொடி, தனித்த அரசியலமைப்புச் சாசனம், சிறப்புச்சட்டம் போன்றவற்றைத் கொண்டு தன்னாட்சியோடு காஷ்மீர் இயங்கி வந்தது.

அப்பட்டமான ஜனநாயக படுகொலை

அப்பட்டமான ஜனநாயக படுகொலை

இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் சட்டப்பிரிவு 370ன் கீழ் சிறப்புச் சட்டங்கள் காஷ்மீருக்கென்று இயற்றப்பட்டது. இதன்படி, இராணுவம், வெளியுறவு, தகவல்தொடர்பு ஆகியவற்றைத் தவிர இன்னபிற துறைகளுக்குக் காஷ்மீர் மாநில அரசின் ஒப்புதல் பெற்றால்தான் அம்மாநிலத்திற்குப் பொருந்தும்; காஷ்மீரில் பிற மாநிலத்தவர் நிலம் வாங்கத் தடை போன்ற சிறப்புச் சட்டங்கள் அமலில் இருந்தன. 1954ஆம் ஆண்டு மாநில அரசின் ஒப்புதலுடன், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 370 இணைப்பு (1)ல் 35ஏ என்ற பிரிவு சேர்க்கப்பட்டது. இப்பிரிவு, வெளி மாநிலத்தவர்கள் காஷ்மீரில் அரசு வேலை, அரசின் சலுகைகள், மானியங்களைப் பெற முடியாது என்றும், காஷ்மீரின் நிரந்தரக் குடிமக்கள் யார் என்பதையும், அவர்களது உரிமையையும் தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது என்றும் சில சிறப்புச் சலுகைகளை அம்மாநிலத்திற்கு வரையறுக்கிறது. இன்றைக்கு அவையாவும் நீர்த்துப் போகும் வண்ணம் காஷ்மீரத்தின் உரிமைகளைக் காக்கும் 370, 35 ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை நீக்கியிருப்பது அப்பட்டமான சனநாயகப் படுகொலை; சட்டத்தின் வழியே நிகழ்த்தப்பட்ட சர்வாதிகாரம்.

வரலாற்றின் துயரநாள்

வரலாற்றின் துயரநாள்

நாடு முழுக்க வளவேட்டைக்கும், உள்நாட்டு, வெளிநாட்டு பெருமுதலாளிகளின் லாபவெறிக்குமாகக் கடைவிரித்து நாட்டைச் சந்தைப்படுத்தி முதலாளித்துவத்தின் வணிகப்பசிக்கு இரையாக்கத் துடிக்கும் மோடி அரசு, அதற்குக் காஷ்மீரத்தையும் பலிகடா ஆக்கவே 370, 35ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை ரத்துச் செய்திருக்கிறது என்பது திண்ணம். நாட்டின் சனநாயகத் தூண்களாக இருக்கிற தன்னாட்சி அமைப்புகள் மீது கைவைத்து அவற்றைத் தன்வயப்படுத்திக் கொண்டிருக்கும் பாசிச பாஜக அரசு, தற்போது காஷ்மீர் எனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாநிலத்தின் மீதே கை வைத்திருப்பது சனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் கொடுஞ்செயல். இந்திய வரலாற்றின் துயர நாள்.

ஒட்டுமொத்த தேசிய இனங்களுக்கான துரோகம்

ஒட்டுமொத்த தேசிய இனங்களுக்கான துரோகம்

காஷ்மீரத்தை பொது வாக்கெடுப்பு எனும் நிபந்தனையின் அடிப்படையில் இணைத்துக்கொண்டு, இறுதிவரை அவ்வாக்குறுதியை நிறைவேற்றவே முன்வராத காங்கிரசு அரசு காஷ்மீரத்தின் தன்னாட்சி உரிமைகளைக் குறைத்ததென்றால், பாஜக அரசு மொத்தமாக அதன் தன்னாட்சி உரிமைகளைப் பறித்துக் காஷ்மீரத்தையே குலைக்கும் படுபாதகச்செயலைச் செய்திருக்கிறது. இது காஷ்மீரி எனும் தேசிய இனத்திற்குச் செய்யப்பட்ட துரோகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் வாழும் பல்வேறு தேசிய இனங்களுக்கான பாடம். எனவே, இவ்விவகாரத்தில் இந்தியா முழுக்க வாழும் சனநாயகப் பற்றாளர்களும், மாந்தநேயவாதிகளும், முற்போக்காளர்களும், தேசிய இனங்களின் மக்களும் ஒன்றிணைந்து ஒருமித்த குரலில் காஷ்மீர மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்ப வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக கோருகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.

English summary
Naam Thamizhar Party Chief Co-ordinator Seeman has codemned the revoking of Article 370.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X