சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விமான விபத்தின் மின்னல்வேக மீட்பு பணி மூணாறு நிலச்சரிவில் இல்லையே.. தமிழர் என்பதால் தாமதமா? சீமான்

Google Oneindia Tamil News

சென்னை: கேரளா விமான விபத்தின் போது வெளிப்படுத்தப்பட்ட மின்னல்வேக மீட்பு பணியை ஏன் மூணாறு நிலச்சரிவு மீட்புப் பணிகளில் காட்டவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

கேரள மாநிலத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய இடுக்கி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான மூணாறில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றிய 23 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் பெருமழை காரணமாக, கடந்த 07-08-2020 அன்று அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் உறங்கிகொண்டிருந்தபோதே வீடுகளோடு புதையுண்டு அதில் பலரும் உயிரிழந்தனர் என்ற செய்தி கடும் அதிர்ச்சியையும் சொல்லொணாத் துயரத்தைத் தருகிற அதே வேளையில் இதுவரை 49 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது; இன்னும் பலரது நிலை என்னவென்றே தெரியாமல் இருப்பதுதான் மிகுந்த துயரத்தையும், மன வேதனையையும் அளிக்கிறது.

நிலச்சரிவு ஏற்பட்ட ராஜமலை - பெட்டிமுடி மட்டுமின்றி இடுக்கி மாவட்டத்தில் உள்ள மக்களில் ஏறத்தாழ 70 விழுக்காட்டினர் தமிழர்கள். குறிப்பாக நூற்றாண்டு காலமாகத் தேயிலைத் தோட்டங்களைத் தங்கள் குருதியால் நனைத்து வளர்த்தவர்களின் வாழ்க்கை தரம் மட்டும் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இன்னும் நூற்றாண்டு காலம் பின்தங்கியே இருக்கிறது. இந்நிலையில் தற்போது ஏற்பட்ட இந்த இயற்கை பேரழிவு அவர்களின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் அழித்துவிட்டது.

விமான விபத்தில் மின்னல் வேகம்

விமான விபத்தில் மின்னல் வேகம்

இதே கேரள மாநிலத்தில், கடந்த 08.08.2020 அன்று கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளார்கள். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த மிகவும் கொடுமையான துயர நிகழ்விற்கு நம்முடைய ஆறுதலையும் தெரிவித்து இருந்தோம். விமான விபத்தில் சிக்கியவர்களை மீட்பதில் மத்திய, மாநில அரசுகள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு பலரது உயிரை காப்பற்றியதை வரவேற்கிறேன். ஆனால், இந்த இரண்டு விபத்துகளையும் கேரள அரசு மற்றும் மத்திய அரசுகள் கையாண்ட முறையிலும் துயர்துடைப்புப் பணிகளிலும் பாகுபாடு இருப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது.

நிலச்சரிவும் தமிழர் ஐயமும்

நிலச்சரிவும் தமிழர் ஐயமும்

கேரள முதல்வர், விமான விபத்திற்கு அமைச்சர் தலைமையில் மீட்பு குழு ஒன்றை அமைக்கிறார். இந்திய பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் கேரள முதல்வருடன் தொடர்புகொண்டு மீட்புபணிகள் விரைந்து நடைபெறுவதை உறுதி செய்ததுடன் தேவையான உதவிகள் புரிய மத்திய பேரிடர் மீட்பு படையையும் உடனடியாக அனுப்பி மீட்புப் பணியைத் துரிதப்படுத்தினர். மத்திய அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார். ஆனால் அதே வேளையில் அதைவிட அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்த துயர நிகழ்வில் சிக்குண்டவர்களை மீட்க இத்தகைய வேகத்துடன் மத்திய-மாநில அரசுகள் செயல்படவில்லையோ என்ற ஐயம் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மூணாறு நிலச்சரிவு- தமிழரை பார்க்கவில்லை

மூணாறு நிலச்சரிவு- தமிழரை பார்க்கவில்லை

விமான விபத்தில் இறந்தவர்களுக்கு கேரள அரசு தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. ஆனால், அதே கேரள அரசு நிலச்சரிவில் குடும்பத்தோடு மடிந்த தமிழர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் மட்டுமே அறிவித்துள்ளது. விமான விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோரை கேரள முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உடனடியாக கோழிக்கோடு மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். ஆனால், மூணாறில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழர்களைப் பார்க்க யாரும் செல்லவில்லை.

பாஜகவை போல இடதுசாரிகளுமா?

பாஜகவை போல இடதுசாரிகளுமா?

மத்திய பாஜக அரசு தமிழர்கள் பாதிக்கப்படும்போது பாரா முகத்துடன் நடந்துகொள்வது புதிதல்ல; வெள்ளம், மழை, புயல் என்று தமிழர்கள் எத்தகைய துயர துன்பத்திற்கு ஆளானாலும் அலட்சிய போக்குடன் நடந்துகொள்வது வாடிக்கையானதே ஆனால் சமத்துவம், சகோதரத்துவம் என்று பேசக்கூடிய பொதுவுடைமை கட்சியினைச் சார்ந்த கேரள முதலமைச்சர் ஐயா பினராயி விஜயனின் ஆட்சியிலும் அதே போல் நிகழ்கிறதோ என்ற சந்தேகம் வருவதைத் தடுக்கமுடியவில்லை.

நாம் தமிழர் கோரிக்கைகள்

நாம் தமிழர் கோரிக்கைகள்

எனவே மத்திய-மாநில அரசுகள், 1. தமிழர்களுக்கு எழுந்துள்ள ஐயங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் இனியும் இடங்கொடுக்காமல் மீட்புப் பணிகளை விரைவுபடுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 2. நிலச்சரிவில் சிக்குண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் அதிகபட்ச இழப்பீட்டையும் உரிய துயர் துடைப்பு உதவிகளையும் வழங்க வேண்டும்.

மறுவாழ்வு ஏற்பாடுகள்

மறுவாழ்வு ஏற்பாடுகள்

3.இறந்தவர்களின் உடல்களை முறையாக நல்லடக்கம் செய்ய அவர்களது உறவினர்களிடம் வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு வழங்க தவறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 4. வீடு உட்பட அனைத்து உடைமைகளையும், உறவுகளையும் இழந்து கையறு நிலையில் நிற்பவர்களுக்கு உடனடியாக மறுவாழ்விற்கான நிரந்தர மாற்று ஏற்பாடுகளைச் செய்து தரவேண்டும். 5. அதிக வேலை வாங்குவதற்காக தேயிலை தோட்டம் அமைந்துள்ள மலைச்சரிவுகளிலேயே தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பற்ற முறையில் குடியிருப்புகளை அமைத்து தந்துள்ள தேயிலை தோட்ட நிர்வாகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, உடனடியாகப் பாதுகாப்பான மாற்று குடியிருப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழர் நலனுக்கு தனி அமைச்சகம்

தமிழர் நலனுக்கு தனி அமைச்சகம்

மேலும் தமிழக அரசு, மூணாறு தேயிலைத் தோட்ட நிலச்சரிவு மீட்பு மற்றும் துயர் துடைப்புப் பணிகளில் கேரள மற்றும் மத்திய அரசுகளோடு தொடர்புகொண்டு அவர்களது செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன், உடனடியாகத் தேவையான உதவிகளையும் செய்ய வேண்டும் எனவும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் பணிபுரியும் தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய உடனடியாகத் தமிழக அரசு தனி அமைச்சகத்தை அமைக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

English summary
Naam Tamilar party Chief Seeman issued a statement of Kerala Munnar Land slide row.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X