சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீவைத்து யானையைக் கொன்ற கொடூரர்களைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் - சீமான்

Google Oneindia Tamil News

சென்னை: மசினகுடியில் தீவைத்து யானையைக் கொன்ற கொடூரர்களைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே மசினகுடி பகுதியில் தீவைக்கப்பட்டு யானை கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. வன உயிர்களைத் தாக்கி அழிப்பவர்கள் மீது கடும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட, சட்டத்தையும், கண்காணிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும் எனும் சூழலியல் ஆர்வலர்களைக் கோரிக்கையைப் பொருட்படுத்தாதன் விளைவாகவே இக்கோரச்சம்பவம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. நான்கு மாதங்களாகப் படுகாயத்துடன் காட்டுக்குள் செல்ல முடியாது, குடியிருப்புகளுக்கிடையே அலைந்து திரிந்த யானைக்கு உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்காதது மரணத்திற்கு மிக முக்கியக் காரணம் எனும் செய்தி வனத்துறையினரின் அலட்சியப்போக்கையும், காட்டுயிர்கள் மீது காட்டப்படும் அக்கறையற்ற தன்மையையுமே காட்டுகிறது.

யானைகள் மீது தாக்குதல்

யானைகள் மீது தாக்குதல்

மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதிகளில் பல்லுயிர்க்காடுகள் சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டதன் விளைவாக யானை, காட்டு மாடுகள், மான்கள், புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட வன விலங்குகள் தேயிலைத் தோட்டங்களுக்கும், மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கும் அடிக்கடி வந்துசெல்வது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்தவண்ணம் உள்ளன. இதனால், யானைகளைத் தாக்குவது அதிகரித்து யானைகளும்,சிலசமயம் மனிதர்களும் உயிரிழக்கும் நிலையே நிலவுகிறது.

கண்டனத்துக்குரியது

கண்டனத்துக்குரியது

பல்லுயிர்ச்சூழலில் முக்கியப் பங்காற்றும் யானைகளின் தொடர் உயிரிழப்பு என்பது மனிதகுல அழிவிற்கான ஒரு முன்னோட்டமேயாகும். யானைகளைப் பாதுகாக்கும் வகையில் வனங்களில் இயற்கை வளம் குன்றாமல் பாதுகாப்பது அவசியம் எனப் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு நிறுவனம் (IUCN) எச்சரிக்கை விடுத்தும் அரசு அவற்றைக் கவனத்திற்கொள்ளாதது வன்மையான கண்டனத்திற்குரியது. உணவு வழங்கும் காடுகள் அழிக்கப்பட்டு யானைகளின் வாழ்விடங்கள் அருகுதல், வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுதல், உணவு மற்றும் குடிநீர் தேடி வரும் யானைகள் மின்சார வேலிகள், தோட்ட வெடிகள், தண்டவாளங்கள், உயர் மின் வடங்கள் ஆகியவற்றில் சிக்கி உயிரிழத்தல், தந்தத்திற்காக வேட்டையாடப்படுதல், தற்காப்பிற்காக மனிதர்களால் கொல்லப்படுதல் ஆகிய காரணங்களால் யானைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வெகுவாகக் குறைந்து வருவது அவைகளின் இருப்புக் குறித்துப் பெரும் கவலையைத் தருகிறது.

யானைகள் அழிவால் ஆபத்து

யானைகள் அழிவால் ஆபத்து

2019ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் ஏறத்தாழ 31,000 யானைகளும் தமிழகத்தில் 3,500 யானைகளும் மட்டுமே எஞ்சியுள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவில் 3,000 யானைகள் வேட்டையாடப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1,00 க்கும் மேற்பட்ட யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழப்பதாகவும், வெளியாகும் செய்திகள் திகைப்பூட்டுகின்றன. மறுபுறம், ஒவ்வொரு ஆண்டும் யானைகள் தாக்கி உயிரிழக்கும் மனிதர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. யானைகளால் தாக்கி உயிரிழப்போரின் குடும்பத்திற்குத் துயர்துடைப்பு நிதி வழங்க அரசாணை வெளியிட்ட தமிழக அரசு, யானைகளால் மனிதர்கள் தாக்கப்படாமலிருக்க எவ்விதப் பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? அவைகளின் இருப்பிடங்களான காடுகளின் அழிவைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஏற்கனவே, முற்றாக அழிந்துபோன உயிரினங்களால் புவி வெப்பமாதல், பருவநிலை மாற்றம், பனிப்பாறைகள் உருகுதல், அதிக வறட்சி, குறுகிய நாளில் அதிக மழைப்பொழிவு, திடீர் புயல்கள் எனப் பல்வேறு இயற்கை சீற்றங்களைச் சந்தித்து வரும் நிலையில் பல்லுயிர்ச்சூழலில் உணவுச்சங்கிலி அறுபடாமல் பாதுகாக்கும் யானைகளின் அழிவு, அவற்றையெல்லாம்விடப் பல மடங்கு தாக்கத்தையும், சூழலியல் பேராபத்தையும் ஏற்படுத்தக்கூடியது.

வாழ்விடங்கள் பாதுகாப்பு

வாழ்விடங்கள் பாதுகாப்பு

எனவே, வன உயிரினங்களையும், அவற்றின் வாழ்விடங்களான காடுகள், மலைகள், ஆறுகள் உள்ளிட்டவற்றையும் பாதுகாக்கும் சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும். மேலும், பன்னாட்டுப் பெருநிறுவனங்களின் வளவேட்டைக்காகத் சுற்றுச்சூழல், வனப்பாதுகாப்புச் சட்டங்களைத் தளர்த்திட முனையக்கூடாது. யானைகளின் உணவு மற்றும் குடிநீருக்குத் தேவையான வசதிகளை அவற்றின் வாழ்விடங்களிலேயே வனத்துறை மூலம் ஏற்படுத்தித் தரவேண்டும். வனவிலங்குகளின் வாழ்விடங்கள் மற்றும் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தீவிரமாகத் தடுத்து நிறுத்த வேண்டும். தோட்டங்களைப் பாதுகாக்க வெடிகள் வைக்கவும், மின்வேலிகள் அமைக்கவும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும். காடுகளின் வழியே உயர் மின்னழுத்த வடங்களைக் கொண்டு செல்ல தடைவிதிக்க வேண்டும். யானைகளைக் கொடூரமாகத் தாக்கி வேட்டையாடுபவர்களுக்குத் தண்டனையைக் கடுமையாக்கச் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். மனிதர்களின் குடியிருப்புப்பகுதிக்குள் வரும் வனவிலங்குகளைக் காடுகளுக்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்கும், மனிதர் - யானை மோதலைத் தடுக்கவும் அந்தந்தப் பகுதிகளிலுள்ள இளைஞர்கள் பங்களிப்போடு வனவிலங்கு பாதுகாப்புப் படையை உருவாக்க வேண்டும்.

முறையான பயிற்சி

முறையான பயிற்சி

வனத்துறையினர் துணையோடு அவர்களுக்கு விலங்குகளைப் பாதுகாப்பாக விரட்டுவதற்கான பயிற்சி அளிக்க வேண்டும். காயம்பட்ட வனவிலங்குகள் பெருமளவில் உயிரிழப்பதைத் தடுக்கவும், அவற்றுக்கு உரிய மருத்துவச்சிகிச்சை அளிக்கவும் நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் வனவிலங்கு மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்கி, தேவைப்படும் இடங்களில் புதிய பணியிடங்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே, மேற்கண்ட நடவடிக்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்தி யானைகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் மனிதர்களால் கொல்லப்படாமல் தடுத்து பல்லுயிர்ச்சூழல் பாதுகாக்கப்படவும், வன விலங்குகளால் மனிதர்கள் கொல்லப்படாமலும் தடுத்திடவும் உரிய நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். இத்தோடு, யானையைத் தீவைத்துக் கொன்றவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டுமெனவும் கோருகிறேன். இவ்வாறு சீமான் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
Naam Tamilar Chief Seeman has urged to take stern action against Elephant attack incident in Masinagudi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X